Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 93)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தின் ஆழ்பொருளை அறிவதால் உண்டாகும் நன்மைகள்

மூலம் – இப்படி ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம் என்னும்படியிருக்கிற இத்திருமந்த்ரத்திலே சிதசிதீச்வர ஸ்வரூபங்களும், ஜீவர்களுடைய அந்யோந்ய பேதமும், சேஷசேஷி பாவாதிகளாலே நிரூபாதிக ஜீவேச்வர பேதமும், நிகில ஜகந்நிமித்தோபாதாந பூத பரதேவதா விசேஷ நிர்த்தாரணாதிகளும் ஸித்திக்கையால், இப்படி அநுஸந்திப்பார் இருந்த ஊரில் இருக்குமவர்களுக்கும் ஈச்வரனில்லையென்றும், நிர்விசேஷனென்றும், அத்யந்த உதாஸீநனென்றும், ப்ரதிபலன துல்யைச்வர்யனென்றும், கர்மவிசேஷ ஸித்தைச்வர்யனென்றும், கதாசித் கர்மாதி பரவசனென்றும், த்ரிமூர்த்திகளும் ஸமரென்றும், ஏகரென்றும், த்ரிமூர்த்த்யத்தீர்ணன் பரதத்த்வமென்றும், ப்ரஹ்மாதிகளிலே ஒருவன் ஈச்வரனென்றும், ஸ்வரூப பரிணாமவானென்றும், நிமித்தோபாதாநைக்யம் கொள்ளவொண்ணாதென்றும், ஜீவேச்வரர்கள் ஏகாத்மாவென்றும், உபாதி ஸித்த பேதரென்றும், நித்யபிந்நாபிந்நரென்றும், ஜீவன் கர்மாத்ராதீந சேஷபாவனென்றும், அநியத சேஷபாவனென்றும், ஜடனென்றும், ஜ்ஞாநமாத்ர ஸ்வரூபனென்றும், நித்யமுக்தனென்றும், ஆரோபித போகனென்றும், கர்த்தாவல்லனென்றும், ஈச்வர நிரபேக்ஷ கர்த்தாவென்றும், ஆப்ரலயஸ்தாயியென்றும், ஆமோக்ஷஸ்தாயியென்றும், ஏகனென்றும், ஸ்வநிஷ்டனென்றும், ஸ்வரூபத: கார்ய பூதனென்றும், கார்யத்வ ப்ரஸங்க ரஹிதனென்றும், கர்மாத்ரோபாயனென்றும், முக்ததசையில் பாஷாண கல்பனென்றும், ஸ்வாத்மாநந்தமாத்ர த்ருப்தனென்றும், அத்யந்த ஸ்வதந்த்ரனாமென்றும், ஈச்வரனோடெ ஏகீபூதனாமென்றும், வ்யாபாராதி ரஹிதனாமென்றும், விபாகாவிபாகாதி சக்திமானென்றும், ஆனந்ததாரதம்யவானென்றும், வ்யவஸ்தித ஸாலோக்யாதி பேதவானென்றும், மற்றும் இப்புடைகளிலுள்ள பாஹ்ய குத்ருஷ்டி மதங்களொன்றாலும் கலக்கம் வாராது.

– இப்படியாக ஹாரீதஸ்ம்ருதி (3-65) – ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்தம் – ஒருவன் அறியவேண்டிய அனைத்தும் திருமந்த்ரத்தில் உள்ளது – என்று கூறுவதற்கு ஏற்ப அனைத்துமாக திருமந்த்ரம் உள்ளது. இதன் மூலம் ஒருவன் சித், அசித் மற்றும் ஈச்வரன் ஆகிய மூன்றின் ஸ்வரூபங்களை அறியலாம்; ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும் இடையே உள்ள பேதங்களையும் அறியலாம். ஜீவாத்மா – பரமாத்மா ஆகிய இருவரும் முறையே அடிமை – எஜமானன் என்றுள்ளதால், இவர்களுக்கு இடையே உள்ளதான எந்தவிதமான விதிவிலக்கும் இல்லாமல் காணப்படும் வேறுபாட்டையும் திருமந்த்ரம் உபதேசிக்கிறது. அனைத்து லோகங்களுக்கும் நிமித்த காரணமாகவும், உபாதானக் காரணமாகவும் (பானைக்கு குயவன் நிமித்த காரணம், மண் உபாதானக் காரணம்) உள்ள உயர்ந்த பரமாத்மாவையும் திருமந்த்ரம் நிரூபிக்கிறது. ஆக திருமந்த்ரத்தை எப்போதும் எண்ணியபடி உள்ளவர்கள் நிறைந்த ஊரில் வசிக்கும் ஒருவர் கீழே கூறப்படும் எந்தவிதமான கலக்கங்களையும் அடையமாட்டார்கள் – ஈச்வரன் இல்லை, ஈச்வரனுக்கு எந்தவிதமான குணங்களும் பண்புகளும் இல்லை, ஈச்வரன் ஜீவாத்மாக்களிடம் விலகியே உள்ளான், அவனுடைய ஸர்வேச்வரத்வம் அல்லது அர்ச்சை போன்ற வடிவங்கள் உண்மையானது அல்ல, அவனுடைய ஸர்வேச்வரத்தன்மை என்பது அவனிடம் உள்ள சிறப்பான கர்மத்தால் உண்டாகிறது, அவன் அவ்வப்போது கர்மவசப்படுகிறான், நான்முகன் – விஷ்ணு – சிவன் ஆகிய மூவரும் சமம் ஆவர், அவர்கள் ஒருவரே ஆவர், உண்மையான ப்ரஹ்மம் என்பது இந்த மூவருக்கும் அப்பாற்பட்டது, நான்முகன் அல்லது சிவன் ஆகியவர்களில் ஒருவரே ஈச்வரன், ஈச்வரனுடைய ஸ்வரூபம் மாறக்கூடியது, நிமித்த காரணமும் உபாதானக் காரணமும் ஒன்றாக இயலாது, ஜீவனும் பரமாத்மாவும் உண்மையில் ஒரே ஆத்மா, அறியாமை முதலான தோஷங்கள் உண்டாவதால் ஒரே ஆத்மாவானது இவ்விதம் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா என்றாகிறது, அவர்கள் இருவரும் வேறுபட்டவர்களும் அல்லர் ஒன்றும் அல்லர், தன்னுடைய கர்மம் காரணமாகவே ஜீவன் அடிமையாக உள்ளான், ஜீவன் சில நேரத்தில் அடிமையாகவும் அடிமை அல்லாதவன் என்றும் உள்ளான், ஜீவன் அறிவற்ற ஜடமே ஆவான், ஜீவாத்மா ஞானமயன் மட்டுமே ஆவான் (ஞானத்தைத் தனது பண்பாகக் கொண்டவன் அல்லன்), அவன் எப்போதும் பந்தப்பட்டவன் அல்லன், அவன் அனைத்தையும் தான் அனுபவிப்பதாக எண்ணிக் கொள்கிறான், ஆத்மா செயலாற்றுபவன் அல்லன், ஆத்மா செயலாற்றுபவன் என்றாலும் ஈச்வரனுக்குக் கட்டுப்பட்டு செயலாற்றுபவன் அல்லன், ப்ரளய காலம் முடிய மட்டுமே ஜீவாத்மா இருப்பான், மோக்ஷம் கிட்டும் வரை மட்டுமே ஜீவாத்மா இருப்பான், ஜீவாத்மா ஒன்று மட்டுமே (மற்ற அனைத்தும் மாயை), ஜீவாத்மா தனக்குத்தானே ஆதாரமாக உள்ளவன், ஜீவாத்மா தன்னுடைய ஸ்வரூபத்தால் ஏதோ ஒரு காரணத்தால் உண்டான கார்யம் ஆவான், ஜீவாத்மா எந்தவிதத்திலும் (அவனுடைய சரீரம் உட்பட) ஒரு காரணத்தின் விளைவால் உண்டான கார்யம் அல்லன், தன்னுடைய முடிவைக் கர்மத்தால் மட்டுமே அடையவல்லவன், முக்தி பெற்ற ஜீவாத்மா கல் போன்றவன், சரீரம் அற நிலையில் மட்டுமே ஜீவாத்மா மகிழ்வுடன் உள்ளான், ஜீவாத்மா முழு சுதந்திரம் கொண்டவன், ஜீவாத்மா ஈச்வரனுடன் ஒன்றாவான், ஜீவாத்மாவுக்கு எந்தவிதமான செயல்பாடுகளும் இல்லை, ஜீவாத்மா ஈச்வரனை விட்டுப் பிரிந்தும் இருக்கலாம் அல்லது சேர்ந்தும் இருக்கலாம், முக்தி அடைந்த பின்னர் ஜீவாத்மாக்களுக்கு இடையே உள்ள ஆனந்தத்தில் வேறுபாடுகள் உண்டு, ப்ரஹ்மத்தைப் போன்ற தன்மைகள் கொள்வதில் வேறுபாடுகளுடன் கூடியவன் – போன்றதான கலக்கம் நிறைந்த சிந்தனைகள் உள்ள மதத்தினர்களுடைய மறைக்கப்பட்ட பார்வைகளால் குழப்பம் அடைய மாட்டனர்.