Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 91)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தில் உணரவேண்டிய ஜீவாத்ம ஸ்வருபத்தினுடைய தன்மைகள்

மூலம் – இவற்றின் நியமமடியாக வந்த ஈச்வர சரீரத்வம், ஈச்வர லீலாரஸ ஹேதுத்வம், ஈச்வர போகோபகரணார்ஹத்வம், தததீந கதித்வம், தததீந தத் ப்ராப்தித்வம், ஐச்வர்ய கைவல்ய நிரபேக்ஷகத்வம், பகவத் ப்ராப்தயர்த்தித்வம், ஸர்வா வித்யோந்முக்தத்வம், ஆவிர்பூத ஸ்வரூபத்வம், ஸர்வ த்ருஷ்டத்வம், ஸர்வப்ரகார பகவதநுபவைக போகத்வம், நிரதிசயாநந்தத்த்வம், பகவத் போகார்த்த போக்த்ருத்வம், ஐச்சிக விக்ரஹாதிமத்த்வம், இச்சாவிகாத ரஹிதத்வம், ஈச்வர லக்ஷண வ்யதிரிக்த பரமஸாம்யம், அசேஷ கைங்கர்யைக ரதித்வம், அபுநராவ்ருத்திமத்த்வம் என்று இவை ப்ரதானங்களாகக் கொண்டு இவற்றைத் துவக்கி வரும் மற்றுள்ள ப்ராமாணிகார்த்தங்களும் எல்லாம் இப்பதங்களில் அடைவே சப்த ஸாமர்த்யத்தாலும் அர்த்த ஸ்வபாவத்தாலும் அநுஸந்தேயங்கள்.

– மேலே கூறப்பட்ட பலவற்றின் காரணமாக உண்டாகும் தன்மைகளான ஸர்வேச்வரனுடைய சரீரமாக இருத்தல், ஸர்வேச்வரனுடைய லீலைகளுக்குக் காரணமாக இருத்தல், ஸர்வேச்வரன் அனுபவிக்கத்தகுந்தவனாக இருத்தல், தன்னுடைய இலக்கை எட்டும் மார்க்கம் ஸர்வேச்வரனைச் சார்ந்திருத்தல், அந்த இலக்கை அடைதலும் ஸர்வேச்வரனைச் சார்ந்திருத்தல், ஐச்வர்யம் அல்லது கைவல்யத்தை எதிர்பாராமல் இருத்தல், பகவானை அடைதலையே எண்ணியிருத்தல், அவித்யை முதலான தோஷங்களிலிருந்து விடுபடுதல், தானாகவே தன்னுடைய ஸ்வரூபம் வெளிப்படுதல், முக்தி நிலையில் அனைத்தையும் காணும்படி இருத்தல், பகவத் அனுபவம் என்பதிலேயே அனைத்துவிதமான இன்பங்களையும் அனுபவித்தல், எல்லையற்ற ஆனந்தம் கொண்டிருத்தல், பகவான் அனுபவிப்பதற்காக மட்டுமே இருத்தல், முக்தி நிலையில் தான் விரும்பும் வடிவத்தை தன்னுடைய விருப்பத்தின்படி எடுத்தல், தடையில்லாத இச்சை கொண்டிருத்தல், ஸர்வேச்வரனுக்கு மட்டுமே உரிய தன்மைகள் தவிர்த்து மற்ற அனைத்திலும் அவனைப் போன்றே இருத்தல், பலவிதமான கைங்கர்யங்கள் செய்வதில் ஆனந்தம் கொள்ளுதல், மோக்ஷம் பெற்ற பின்னர் மீண்டும் திரும்புதல் இல்லாமை போன்றவை தொடங்கி, ப்ரமாணங்களில் காணப்படும் மற்ற பல தன்மைகளும் திருமந்த்ரத்தில் உள்ள பதங்களில் சப்தம் மூலமும், அர்த்தம் மூலமும் வெளிப்படுகின்றன.