Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 87)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தில் சிந்திக்கவல்ல (த்யானிக்கத்தக்க) பகவத் குணங்கள்

மூலம் – ஸ்தூலசரீர விச்லேஷகத்வம், விச்ரம ஸ்தாநத்வம், அநுக்ரஹ விசேஷவத்த்வம், ப்ரஹ்ம நாடீ த்வார ப்ரகாசகத்வம், தத்ப்ரவேசகத்வம், ப்ரஹ்மரந்த்ர உத்க்ராந்தி ஹேதுத்வம், அர்ச்சிராதி ஆதிவாஹிக நியோக்த்ருத்வம், ஸூர்ய த்வாராதி நேத்ருத்வம், அண்ட ஆவரண ப்ரக்ருதி மண்டலாதி க்ரமஹேதுத்வம், விரஜா தீர ப்ராபகத்வம், ஸூக்ஷ்ம சரீர விச்லேஷகத்வம், அப்ராக்ருத தேஹப்ரதத்வம், திவ்ய அப்ஸரஸ் ஸத்காராதி ப்ரயோஜகத்வம், ப்ரஹ்மகந்தாதி ப்ரவேசகத்வம், நித்யமுக்த ஸத்கார விசேஷ ஹேதுத்வம், பர்யங்காதிரோஹண பர்யந்தாதரவத்வம், பரிபூர்ணானுபவ ஹேதுத்வம், ப்ரதான ப்ராப்யத்வம், ஸதேஹ விதேஹ பஹுதேஹ க்ருத ஸர்வவித கைங்கர்ய ப்ரதி ஸம்பந்தித்வம், அவாப்த ஸமஸ்த காமத்வம், நிரதிசய ஆனந்தவத்த்வம், நிரதிசய போக்யத்வம், ஸர்வ ப்ரகார போக்யத்வம், ஸர்வதா அனுகூல ஸ்வபாவத்வம், அத்யந்த துல்ய போக ப்ரதத்வம், ஆச்ரித விச்லேஷா ஸஹத்வம், அபுநராவ்ருத்தி ஹேதுத்வம் என்று இவை ப்ரதாநமாக மற்றும் இவற்றைத் துவக்கி வரும் ஏற்றங்களுமெல்லாம் அடைவே அநுஸந்தேயங்கள்.

– ஸ்தூல சரீரத்திலிருந்து ஆத்மாவைப் பிரித்து எடுக்கவல்ல திறனுடன் இருத்தல், ஜீவாத்மா ஓய்வெடுக்க இருப்பிடமாக இருத்தல் (உறங்கும்போது ஜீவாத்மா இதயத்தில் புரீதத் என்னும் பகுதியில் உள்ள பரமாத்மாவுடன் சென்று ஓய்வெடுப்பதாக ப்ரஹ்மஸூத்ரம் கூறுகிறது), ஜீவாத்மாவுக்கு எப்போதும் சிறப்பான அனுக்ரஹம் செய்தபடி இருத்தல், சரீரத்திலிருந்து மோக்ஷம் செல்லக் கிளம்பும் ஜீவாத்மாவுக்கு ப்ரஹ்மநாடி இன்னது என்று காண்பிக்க அந்த நாடியை ஒளிரும்படிச் செய்தல் (101 நாடிகளில், 101வது நாடி எது என்று அறிய உதவுதல்), அந்த ப்ரஹ்மநாடியில் ஜீவாத்மா புகும்படிச் செய்தல், ப்ரஹ்மநாடியிலிருந்து ஜீவாத்மாவை வெளியேற்றுதல், அர்ச்சிஸ் மற்றும் ஆதிவாஹனர்களை ஜீவாத்மாவுக்கு மெய்க்காப்பாளர்களாக நியமித்தல், சூரிய மண்டலத்தில் புகும் ஜீவாத்மாவை வழி நடத்துதல், ஜீவாத்மா அண்டம் – ஆவரணம் முதலானவற்றை வரிசையாகக் கடக்கும்படிச் செய்தல், இவ்விதம் வரும் ஜீவாத்மாவை விரஜா நதிக்கரைக்குக் கொண்டு செல்லுதல், அங்கு ஜீவாத்மா ஸூக்ஷ்ம சரீரத்தை விட்டு வெளியேறும்படிச் செய்தல், அவனுக்கு பரமபதத்தில் வசிப்பதற்கு ஏற்ற சரீரம் அளித்தல், அப்ஸரஸ் முதலானவர்கள் ஜீவாத்மாவை வரவேற்கும்படிச் செய்தல், ப்ரஹ்மத்திற்கே உரிய நறுமணாம் முதலானவற்றை அந்த ஜீவாத்மாவுக்கு அளித்தல், நித்யஸூரிகள் மற்றும் முக்தர்கள் முதலானவர்கள் ஜீவாத்மாவை வரவேற்கும்படிச் செய்தல், தன்னுடைய ஸிம்ஹாஸனத்திற்கு அருகில் வரும் அந்த ஜீவாத்மா ஸிம்ஹாஸனத்தில் ஏறி அமரும்படிச் செய்தல், தன்னுடைய பரிபூர்ணமான அனுபவத்தை அந்த ஜீவாத்மாவுக்கு அளித்தல், அடையவேண்டிய மிகவும் உயர்ந்த இலக்காக இருத்தல், சரீரத்துடனோ சரீரம் இல்லாமலோ பல சரீரங்களுடனோ ஜீவாத்மா தனக்கு எப்போதும் அனைத்துவிதமான கைங்கர்யங்களும் செய்யும்படிச் செய்தல், தான் விரும்பும் அனைத்தும் கிடைக்கப் பெற்று இருத்தல், எல்லையற்ற ஆனந்தம் கொண்டிருத்தல், எல்லையற்ற இன்பம் அளிப்பவனாக இருத்தல், அனைத்துவிதமான இன்பங்களையும் அளிப்பவனாக இருத்தல், தன்னுடைய இயல்பாகவே அனைவருக்கும் எப்போதும் அனுகூலமாக இருத்தல், தான் எப்போதும் அனுபவித்தபடி உள்ள இன்பத்திற்கு நிகரான எல்லையற்ற இன்பத்தை அளித்தல், தன்னி அண்டியவர்களை விட்டுப் பிரிய இயலாமல் சேர்ந்தே இருத்தல், ஸம்ஸாரத்திற்கு ஜீவாத்மா மீண்டும் திரும்பாமல் இருக்கக் காரணமாக இருத்தல் – இவை மட்டும் அல்லாமல், இவற்றை முக்கியமாகக் கொண்டு, இது போன்றுள்ளவற்றால் உண்டாகும் ஏற்றங்கள் அனைத்தும் பகவத்குண விசேஷங்கள் ஆகும்.