Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 78)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூலம் – இப்படி வ்யாபந பரண நியமந ஸ்வாம்யாதிகளாலே வேறுபட்டிருக்கிற புருஷோத்தமனுக்கும் தத்ஸம்பந்திகளுக்கும் குத்ருஷ்டிகள் சொன்ன ஸ்வரூபைக்யாதி ப்ரமம் கழியும்படி ஸர்வசரீரித்வ ஸர்வசப்த வாச்யத்வாதிக வைபவமும் இங்கே பலிதம். நரசப்தத்தாலே சோதக வாக்யார்த்தமும், நாரசப்தத்தாலே நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணி என்கையாலே காரண வாக்யார்த்தமும், அயநசப்தத்தாலே அவ்வோ உபாஸந வாக்யார்த்தங்களுமெல்லாம் இங்கே ப்ரகாசிதங்களாகிறன.
– இப்படியாக எங்கும் வ்யாபித்துள்ளவனும், அனைத்தையும் தாங்கி நிற்பவனும், அனைத்தையும் நியமிப்பவனும், அனைத்திற்கும் எஜமானனாக உள்ளவனும் ஆகிய பரமாத்மாவுக்கும், அவனுடன் எப்போதும் சம்பந்தம் உள்ள ஜீவாத்மாக்களுக்கும் ஸ்வரூபம் ஒன்றே எனக்கூறும் மற்ற மதங்களுடைய வாதங்களால் உண்டாகும் அறிவுமயக்கம் என்பது அனைத்திற்கும் ஆத்மாவாக உள்ளான், அனைத்து சப்தங்களாலும் கூறப்படும்படியான வைபவம் கொண்டுள்ளான் போன்றவை மூலம் நீங்குகிறது என்பது தெளிவாகிறது. “நர” என்னும் பதம் மூலம் ச்ருதியில் உள்ள சோதக வாக்கியங்களின் ஆழ்பொருளும் (இவை ஸத்யம் ஞானம் அநந்தம் போன்ற வாக்கியங்கள் – அதாவது ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தைக் கூறுபவை), “நார” என்னும் பதம் மூலம் மஹாபாரதம் - நராஜ்ஜாதாநி தத்த்வாநி நாராணி – ப்ருதிவீ முதலான தத்துவங்கள் அந்த நரனிடமிருந்தே வருவதால் அவைகள் நாரங்கள் என்று கூறப்படுகின்ற – என்பதற்கு ஏற்றபடி ச்ருதியில் உள்ள காரண வாக்கியங்களின் ஆழ்பொருளும் (காரண வாக்கியங்கள் என்பது ப்ரஹ்மமே அனைத்திற்கும் காரணம் என்று கூறும் வாக்கியங்கள்), “அயந” என்னும் பதம் மூலம் அந்த ப்ரஹ்மத்தை உபாஸித்தக் குறித்து ச்ருதியில் உள்ள உபாஸனை வாக்கியங்களின் ஆழ்பொருளும் தெளிவாகின்றன.