Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 77)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நர ஸம்பந்திநோ நாரா நர: ஸ புருஷோத்தம: நயநத்யகில விஞ்ஜானம் நாசயத்யகிலம் தம: ந ரிஷ்யதி ச ஸர்வத்ர நரஸ்தஸ்மாத் ஸநாதந: நர ஸம்பந்திந: ஸர்வே சேதநாசேதநாத்மகா: ஈசிதவ்யதயா நாரா தார்ய போஷ்யதயா ததா நியாம்யத்வேந ஸ்ருஜ்யத்வ ப்ரவேச பரணைஸ்ததா அயதே நிகிலாந் நாராந் வ்யாப்நோதி க்ரியயா தயா நாராச்சாப்யயநம் தஸ்ய தைஸ்தப்தாவ நிரூபணாத் நாராணாமயநம் வாஸஸ்தே ச தஸ்யாயநம் ஸதா மரமா ச கதிஸ்தேஷாம் நாராணாமாத்மநாம் ஸதா
– நரன் என்னும் புருஷோத்தமனைச் சார்ந்துள்ளவை நாரங்கள் ஆகும். அந்த நரன் தன்னுடைய அடியார்களுக்கு அனைத்து ஞானத்தையும் அளிப்பவன் ஆவான். அவர்களுடைய அறியாமையை முற்றிலுமாக அழிப்பவன் ஆவான். அவன் எங்கு இருந்தாலும், எந்தவிதமான வேறுபாட்டையும் அடைவதில்லை. அவன் எப்போதும் ஒரே போன்று உள்ளதால், நரன் எனப்படுகிறான். அவனை அண்டியுள்ள சேதநங்கள், அசேதநங்கள் ஆகிய அனைத்தும் அவனுக்கு அடிமைகளாகவும், அவனால் தாங்கப்பட்டவைகளாகவும், அவனால் காப்பாற்றப்படுபவையாயும், அவனால் கட்டுப்படுத்தப்படுபவையாயும், அவனால் படைக்கப்பட்டவையாயும், அவனால் உள்ளே புகுந்து தாங்கப்படுபவையாயும் உள்ளதால் அவை நரனுடையவை ஆகின்றன. அவனே அனைத்து நாரங்களையும், அவற்றுள் புகுந்து போஷித்தல் முதலான செயல்கள் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்துகிறான். நாரங்களே அவனை அறிவதற்கு சாதனங்களாகும்; காரணம், அவை மூலம் அவன் உள்ளதை அறிய இயல்கிறது. நாரங்கள் அவனுடைய இருப்பிடம், அவன் அவையுடைய இருப்பிடம். அவனே நாரங்களாகிய ஆத்மாக்களுக்கு அடையவேண்டிய இலக்காகவும், அந்த இலக்கை அடைய உதவும் உபாயமாகவும் உள்ளான். இப்படியாக, அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை முதலானவற்றில் உறுதியாகக் கூறப்பட்டபடி, “நர ஸம்பந்தி நாரம் – நரனுடைய தொடர்புடையதால் நாரங்கள்” என்பதற்கு ஏற்ப, ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபத்தை உணர்த்தும் பண்புகளும் (ஸத்யம், ஞானம், அநந்தம் உள்ளிட்டவை), அப்படிப்பட்ட பண்புகளை உணர்த்தவல்ல அவனுடைய திருக்கல்யாண குணங்களாகிய காருண்யம் போன்றவையும், அவனுடைய செயல்களும், அவனுடைய திருமேனி ரூபங்களும், அவனுடைய மூன்றுவிதமான சேதந அசேதநங்களும் (பத்தர், முக்தர், நித்யர்) – இவை அனைத்தும் “நார” என்னும் பதம் மூலம் உணர்த்தப்படுகின்றன. ஆகவே இதன் மூலம் அவன் அல்லாத மற்ற அனைத்தையும் தாங்கி நிற்பது என்னும் தன்மை அவனுக்குள்ளது என்றாகிறது. ஆகவே அவன் தனக்குத்தானே ஆதாரமாக உள்ளான், தனக்குத்தானே எஜமானனாக உள்ளான் போன்ற தன்மைகள் தெளிவாகிறது.