Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 75)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நார” என்பது சேதநம் மற்றும் அசேதநங்களைக் கூறுவதாகும்

மூலம் – சேதநாசேதநம் ஸர்வம் விஷ்ணோர்யத்வயதிரிச்யதே நாரம் ததயநம் சேதம் நாரயணஸ்து ஸ: என்கையாலே “ஸர்வ பும்ஸாம் ஸமூஹ:” என்றதுவும் உபலக்ஷணமாகையால் க்ஷயிஷ்ணுக்களல்லாமையாலே ஸ்வரூபத்தாலேயாதல், ப்ரவாஹத்தாலேயாதல் நித்யங்களாய் நரசப்தவாச்யங்களான ஸர்வதத்தங்களுடைய ஸமூஹங்களும் நாரங்கள்.

சேதநாசேதநம் ஸர்வம் விஷ்ணோர்யத்வயதிரிச்யதே நாரம் ததயநம் சேதம் நாரயணஸ்து ஸ: - விஷ்ணுவைக் காட்டிலும் வேறாகிய சேதந அசேதநங்கள் அனைத்தும் நாரம், அவை யாருக்கு இருப்பிடமாக உள்ளனவோ அவன் நாராயணன் – என்று கூறுவதால், “ஸர்வ பும்ஸாம் ஸமூஹ: - நாரா: என்பது அனைத்து ஜீவாத்மாக்களும்” என்று உரைப்பதன் மூலம், “ஜீவாத்மா” என்னும் பதம் மற்ற அனைத்து தத்துவங்களுக்கும் ஓர் உதாரணம் மட்டுமே ஆகும் என்று கொள்க. இதன் காரணம் அசேதநங்களாக இருந்தாலும் அவை தங்களுடைய ஸ்வரூபத்தை இழப்பதில்லை என்பதாலும், தங்களுடைய நிலைகளை அவை தொடர்ந்து மாற்றியபடி உள்ளதாலும் அவையும் நித்யமே ஆகின்றன. ஆகவே “நாரா:” என்னும் பதம், “நர” என்று கூறப்படுபவையும், நித்யமாக உள்ளவையும் ஆகிய அனைத்து தத்துவங்களையும் குறிக்கும் என்று கருத்து.