Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 74)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“ம”, “நார” போன்றவை ஜீவனைக் குறிப்பதன் கருத்து மற்றும் பயன்

மூலம் – ப்ரணவத்திலே ஸ்வரூபத்தாலும் குணத்தாலும் ஜ்ஞாநாகாரனாய் ப்ரத்யக்காய் அணுவாய்த் தோற்றின ஜீவனுக்கு நாரசப்தம் க்ஷயமில்லாதவனென்று நித்யத்வம் சொல்லுகையாலும், நரருடைய ஸமூஹத்தைச் சொல்லுகையாலே ஜீவர்களுடைய அந்யோந்ய பேதத்தை வ்யக்தமாக்குகையாலும், நரஜ்ஜாதங்கள் நாரங்கள் என்றபோது விசிஷ்ட வேஷத்தாலே ப்ரஹ்மகார்யத்வம் தோற்றுகையாலும் பத த்வயத்துக்கும் ப்ரயோஜந பேதமுண்டு. நாரசப்த ஸமாநாதிகரணமான அயநசப்தத்தாலே இவற்றுக்கு வ்யாப்தத்வாதிகளும் கண்டு கொள்வது. “நித்யரான பல சேதநர்க்கு ஒரு நித்யனான சேதநன் அபிமதஹேது” வென்கிற ச்ருத்யர்த்தமும் இங்கே கண்டு கொள்வது. நித்யனாக ப்ரமாணஸித்தனான ஜீவனுக்கு ப்ரஹ்மகார்யத்வம் விசேஷண த்வாரகம். இப்படி நாராயணாத்மகாதி கல்பங்களிலே சொன்ன வ்யுத்பத்த்யந்தரங்களுமெல்லாம் இவற்றோடு துல்யம்.

– தன்னுடைய குணம் மற்றும் ஸ்வரூபம் ஆகியவற்றில் ஞானமயமாகவும், மற்ற வஸ்துக்களுக்குத் தன்னைத் தானே உணர்த்தவல்ல தன்மை கொண்டவனாகவும், அணுவாகவும் ப்ரணவத்தில் கூறப்படும் ஜீவாத்மா, “நார” என்பதன் மூலம் மாறுபாடுகள் அடையாத நித்யமாகவும் உள்ளவன் என்று கூறப்படுகிறான். “நாரா:” என்பதன் மூல ஜீவாத்மாக்கள் பலர் உண்டு என்று கூறப்பட்டு, ஆகவே ஜீவாத்மாக்கள் ஒவ்வொன்றுக்கும் வேறுபாடு உள்ளது என்பது தெளிவாக்கப்படுகிறது. மாறாக, “நாரா:” என்பது “நர” எனப்படும் பகவானிடமிருந்து வெளிப்பட்டவை என்று பொருள் தரும் எனக்கொண்டால், ஜீவாத்மாக்கள் அனைத்தும் ப்ரஹ்மத்தையே தங்களுடைய காரண வஸ்துவாகக் கொண்டவை, இவை அனைத்தும் அதன் கார்யவஸ்துக்கள் என்பது தெளிவாகிறது. இப்படியாக “நாராயண” என்னும் பதத்திற்கு கூடுதலான அர்த்தங்கள் உள்ளதால், “ம” மற்றும் “நார” என்னும் இருவிதங்களால் ஜீவாத்மா கூறப்படுவதில் ஒரு பிரயோஜனம் உள்ளது. “நாராயண” என்பதை “நாரா: அயநம் யஸ்ய” என்று பஹிவ்ரீஹீயாகக் கொண்டால், “அயந” என்பது இலக்கண ரீதியில் “நாரா:” என்பதுடன் இணைந்து வருகிறது. இத்தகைய “அயந” என்பதன் மூலம் ஜீவாத்மாக்கள் அவனால் வ்யாபிக்கப்பட்டவை என்று தெளிவாகிறது. சேதநர்கள் பல உண்டு என்றும், அவர்கள் நித்யமானவர்கள் என்றும், அவர்களில் ஒரு நித்யமான சேதநன் (ஸர்வேச்வரன்) அவர்கள் தங்களுடைய புருஷார்த்தங்களை அடைய உதவுகிறான் என்றும் கூறும் ச்ருதி வாக்கியம் இங்கு உணர்த்தப்படுகிறது (அந்த ச்ருதி வாக்கியம் ச்வேதாஸ்வதர உபநிஷத் [6-13] – நித்யோநித்யாநாம் சேதநச்சேதநாநாமேகோ பஹூநாம் யோ விததாதி காமாந் – அநித்யமான பல சேதர்களின் நடுவில் நித்யனான ஒருவன் அவர்கள் விரும்பியதை அளிக்கிறான்). ஜீவாத்மா நித்யன் என்பதற்குப் பல ப்ரமாணங்கள் உள்ளன. அவன் ப்ரஹ்மத்தைத் தன்னுடைய உற்பத்திக்குக் காரணமாகக் கொண்டுள்ளான் என்று மேலே கூறப்படுவதன் மூலம் உணர்த்தப்படுவது என்னவென்றால் – தன்னுடைய சரீரத்திற்கு மட்டுமே இவ்விதம் ப்ரஹ்மத்தைக் காரணமாகக் கொண்டுள்ளான் அல்லாமல், தன்னுடைய ஸ்வபாவத்திற்கு அல்ல – என்பதாகும். நாராயணாத்மகம் போன்ற கல்பங்களில் கூறப்படுவதும் இதே பொருளில் ஆகும்.