Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 73)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“ம”, “நார” போன்றவை ஜீவனைக் குறிப்பதன் கருத்து மற்றும் பயன்

மூலம் – ப்ரணவத்தில் த்ருதீயாக்ஷரத்தாலே சேதநனனைப் ப்ரகாசிப்பிக்கச் செய்தே இங்கு நாரசப்தத்தாலே மீண்டும் சொல்லுவானேன் என்னில், “நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றியிலை” என்றும், “ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜம் ச” என்றும் சொல்லுகிறபடியே ஒன்றையிட்டு ஒன்றை நிரூபியா நின்றால் அர்ஜுநரதம் போலே ப்ரணவம் சேஷப்ரதாநமாகையாலும் ராஸமண்டலம் போலே நாராயணசப்தம் சேஷி ப்ரதாநமாகையாலும் புநருக்தியில்லை. ப்ரணவந்தன்னிலும் சாப்தப்ராதாந்யம் ஜீவனுக்கானாலும் ரக்ஷகனான சேஷிக்கே அர்த்தப்ராதாந்யம்.

– ப்ரணவத்தின் மூன்றாம் எழுத்தான “ம” என்பதன் மூலம் ஜீவாத்மா உணர்த்தப்படுகிறது. இவ்விதம் முன்பே ஜீவனை உணர்த்திய பின்னர் “நாராயண” என்பதில் உள்ள “நார” என்பதன் மூலம் மீண்டும் ஏன் ஜீவாத்மா கூறப்பட்டது (இது “கூறியது கூறல்” என்னும் புநருக்தி தோஷம் ஆகாதோ என்னும் கேள்வி எழலாம்)? இதற்கு விடை அளிக்கப்படுகிறது. நான்காம் திருவந்தாதி (7) - நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னை அன்றியிலை – என்றும், இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (28-10) - ராமாநுஜம் லக்ஷ்மண பூர்வஜம் ச – ராமனுக்குத் தம்பியான லக்ஷ்மணனையும், லக்ஷ்மணனுக்கு மூத்தவனாகிய இராமனையும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப பரமாத்மா மற்றும் ஜீவாத்மா ஆகிய இருவரையும் ஒருவரைக் கொண்டு ஒருவரை கூறும்போது - அர்ஜுனனின் தேரில் ஜீவாத்மாவாகிய அர்ஜுனனுக்கு எவ்விதம் முதன்மை உள்ளதோ அது போன்று அடிமையாகிய ஜீவாத்மாவுக்கு ப்ரணவத்தில் முதன்மை உள்ளது; ராஸலீலையில் பரமாத்மாவாகிய க்ருஷ்ணனுக்கு எவ்விதம் முதன்மை உள்ளதோ அது போன்று எஜமானனாகிய பரமாத்மாவுக்கு “நாராயண” பதத்தில் முதன்மை உள்ளது – இதனால் “கூறியது கூறல்” என்னும் புநருக்தி தோஷம் இல்லை. ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து மூலம் அடிமையாகிய ஜீவாத்மாவுக்கு முதன்மை உள்ளது என்று தோன்றினாலும், ப்ரணவத்தின் ஆழ்பொருளைக் காணும்போது எஜமானனாகிய பரமாத்மாவுக்கே முதன்மை உள்ளதை அறியலாம்.