Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 71)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

பஹுவ்ரீஹி மற்றும் தத்புருஷம் ஆகியவை ஸர்வேச்வரனுடைய அந்தர்வ்யாப்தி மற்றும் பஹிர்வ்யாப்தியை உணர்த்துதல்

மூலம் – அயநமென்று வாஸஸ்தாநமாய் அப்போது பஹுவ்ரீஹி ஸமாஸத்தாலே அந்தர்வ்யாப்தியும், தத்புருஷனாலே பஹிர்வ்யாப்தியும் தோற்றுகிறது என்றும் அநுஸந்திப்பர்கள். இவை இரண்டும் ச்ருதி ஸித்தம். அந்தர்வ்யாப்தியாவது – இவையுள்ள விடத்தில் தன்னை இல்லையென்னவொண்ணாதபடி கலந்து நிற்கை. பஹிர்வ்யாப்தியாவது – இவை இல்லாத இடத்திலும் எங்கும் தான் உளனாகை. விபுக்களான காலாதிகளுக்கு பஹிர்வ்யாப்தி சொல்லவேண்டா. நாராயணமணீயாம்ஸம் அசேஷாணாமணீயஸாம் என்றது அந்தர்வ்யாப்திக்கு அநுகுணமாய் நிற்கிற ப்ரதிகாதாநர்ஹத்வம் அல்லது அணு பரிமாணத்வமன்று. இது சொல்லுமிடம் உபாயத்வச்சேதத்தாலே என்று ஸூத்ரபாஷ்யாதி ஸித்தம். வ்யாப்தனுக்கு ப்ரதிவஸ்து பூர்ணத்வமாவது ஓரோர் உபாத்யவச்சிந்ந ப்ரதேசமே ஸர்வத்தையும் நிர்வஹிக்கவல்ல சக்தியுடைத்தாயிருக்கை, அல்லது வஸ்துதோறும் ஸ்வரூப ஸமாப்தியன்று. இது கொள்ளில் பஹிர்வ்யாப்திக்கு விருத்தமாம். இத்தை அகடிதகடநா சக்தியாலே நிர்வஹிக்கில் விருத்த ஸமுச்சயம் கொள்ளும் பரமதங்களிற்படியாம்.

– “அயநம்” என்பதை “இருப்பிடம்” என்று பொருள் கொண்டு, “நாராயண” என்பதை பஹிவ்ரீஹியாகக் (நாரா: அயநம் அஸ்ய = நாரங்களை இருப்பிடமாகக் கொண்டவன்) கொண்டால், நாராயணன் தன்னுள் அனைத்தையும் கொண்டவனாக அனைத்திலும் வியாபித்துள்ளான் (அந்தர்வ்யாப்தி) என்பது தேறும். மாறாக, “அயநம்” என்பதை “இருப்பிடம்” என்று பொருள் கொண்டு, “நாராயண” என்பதை தத்புருஷமாகக் (நாரணாம் அயநம் = நாரங்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்) கொண்டால், நாராயணன் தன்னுள் அனைத்தையும் கொள்ளாதவனாக அனைத்திலும் வியாபித்துள்ளான் (பஹிர்வ்யாப்தி) என்பது தேறும். இந்தக் கருத்து இரண்டும் ச்ருதிகள் மூலம் தேறுவதாகும். அந்தர்வ்யாப்தி என்றால் – சேதந அசேதநங்கள் இருக்கின்ற இடங்களில் இவன் இல்லை என்று கூற இயலாதபடி, அவை அனைத்திலும் கலந்து நிற்பதாகும். பஹிர்வ்யாப்தி என்றால் – அவை இல்லாத இடங்களிலும் இவன் உள்ளான் என்னும்படியாக இருத்தல் ஆகும். காலம் முதலானவை எங்கும் உள்ளதாகும்; ஆகவே ஸர்வேச்வரன் போன்று அவையும் பஹிர்வ்யாப்தி உள்ளவை என்று கூறுதல் கூடாது. ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-9-41) - நாராயணமணீயாம்ஸம் அசேஷாணாமணீயஸாம் – ஸூக்ஷ்மங்களாக உள்ள அனைத்து வஸ்துக்களைக் காட்டிலும் ஸூக்ஷ்மமாக உள்ள நாராயணன் – என்று கூறும்போது “அணு” என்னும் பதமானது “சிறியது” என்னும் பொருளில் வராமல், “ஸூக்ஷ்மமானது” என்னும் பொருளில் வந்தது என்றே கொள்ளவேண்டும். ஆகவே இதன் மூலம் உணர்த்தப்படுவது என்னவென்றால், ஸூக்ஷ்மமாக உள்ள தன்மை என்பது காரணமாக அவைகளுக்குள் அவன் இருப்பதில் எந்தவிதமான தடையும் இல்லை என்பதாகும். அவன் அணு போன்றுள்ள வஸ்துக்களுடன் (உபாதிகள்) சேர்ந்துள்ளதால், அணுவல்லாத அவனை அணு என்று கூறியதை ஸ்ரீபாஷ்யத்திலும் காணலாம். எங்கும் வியாபித்துள்ளவனுக்கு “அனைத்து வஸ்துக்களிலும் நிறைந்துள்ள தன்மை” என்பது ஏதேனும் ஒரு வஸ்துவில் நிறைந்துள்ளபோதிலும், அதன் மூலமாக அனைத்தையும் நிர்வாகம் செய்யும் சக்தி உள்ளது என்பதே ஆகும். இதனை விடுத்து, அனைத்து வஸ்துக்களிலும் அவனுடைய ஸ்வரூபம் நிறைந்தால் மட்டுமே இது தேறும் என்பது சரியல்ல. இவ்விதம் கொண்டால் பஹிர்வ்யாப்திக்கு முரணாகிவிடும். இதனைச் சேராதவற்றை ஒன்று சேர்க்கும் ஆற்றல் மூலம் செய்கிறான் என்று கொண்டால், பாஸ்கர யாதவப்ரகாச மதங்களுடைய “முரணான இரண்டு வஸ்துக்களை ஒன்றாகச் சேர்க்க இயலும்” என்பதை ஒப்புக்கொண்டது போன்றாகிவிடும்.