Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 70)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“அயநம்” என்னும் பதம் உபாயம், பலன், ஆதாரம் முதலான பொருள்களை உணர்த்துகிறது

மூலம் – இங்கு “ரீங்க்ஷயே” என்கிற தாதுவிலே “ர” என்று ஸ்வரூபத்தாலே க்ஷயிஷ்ணுவான அசித்பதார்த்தத்தைச் சொல்லி, அதில் வேறுபட்டு ஸ்வரூப விகார ரஹிதமான சேதநவர்க்கத்தை நகநைகாதி சப்தம் போலே நஸமாஸமான நர சப்தத்தாலே சொல்லி, அதின் ஸமூஹங்களை நாரசப்தத்தாலே சொல்லி, இந்த ஸமூஹங்களுக்கு அயநம் என்கிற இத்தால் ஸ்வாதீந த்ரிவித சேதந அசேதந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதனானவன் நரசப்தவாச்யரான த்ரிவிதாத்மாக்களுடைய ஸமூஹங்களுக்கும் அபேக்ஷிதஹேதுவுமாய் ஸ்வயம் போக்யதையாலே உபேயமுமாய், விஷ்ண்வாதாரம் யதா சைதத் த்ரைலோக்யம் ஸமவஸ்திதம் யோ லோகத்ரயமாவிச்ய விபர்த்யவ்யய ஈச்வர: இத்யாதிகளிற்படியே ஆதாரமுமாய் இருக்கிறபடி சொல்லப்பட்டது. எங்ஙனேயென்னில் “இண் கதௌ” என்கிற தாதுவிலே “ஈயதே அநேந” என்று அயநசப்தத்தில் கரண வ்யுத்பத்தியாலே ஈச்வரன் உபாயமாயும், “ஈயதே அஸௌ” என்கிற கர்ம வ்யுத்பத்தியாலே உபேயமாயும், “ஈயதே அஸ்மிந்” என்கிற அதிகரண வ்யுத்பத்தியாலே ஆதாரமாயும் தோற்றுகிறான். “அய பய கதௌ” என்கிற அயதி தாதுவிலும் இவ் அயநபதம் நிஷ்பந்நமாம். இவ் உபாயத்வோபேயத்வாதிகளுக்கு உபயுக்தமான ஸௌலப்யமும் பரத்வமும் இங்கே ஸித்தம்.

– “ரீங்” என்னும் தாது “அழிதல்” என்பதைக் குறிக்கும். ஆக “ர” என்பது (“நர” என்பதில் உள்ள “ர”) ஸ்வரூபத்தால் அழியும் தன்மையைக் கொண்ட அசித்துக்களைக் குறிக்கும். ஆகவே அவற்றிலிருந்து வேறுபட்டதான அழியாத ஸ்வரூபம் கொண்டதான சேதநங்களை “நர” (நர = ந + ர = அழியாத ஸ்வரூபம் கொண்ட) என்பதாலே, சேதனர்கள் அழியாத ஸ்வரூபம் கொண்டவர்கள் என்பதாகிறது. அதாவது “ந” என்னும் ஸமாஸம் கொண்டு “ர” என்பது மறுக்கப்பட்டது. இது எவ்விதம் உள்ளது என்றால் - “க” என்பது அசைதலைக் குறிக்கும், “ந + க = அசையாமல் உள்ளது” என்னும் பொருள்பட “நக” என்பது மலையைக் குறிக்கும்; “ஏக” என்பது ஒன்றைக் குறிக்கும், “ந + ஏக = நைக = ஒன்றல்ல = பல” என்னும் பொருள்பட “நைக” என்பர்; இது போன்றே இங்கும் கொள்க. ஆகவே “நர” என்பது சேதனத்தைக் குறிக்கும், “நார” என்பது அந்த சேதனர்களுடைய கூட்டத்தைக் குறிக்கும். அவைகளின் இருப்பிடம் (அயநம்) நாராயணன் ஆவான். இதன் மூலம் அவன் மூன்றுவிதமான சேதனர்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளவன் என்றும் (மூன்றுவிதம் = பத்தர், முக்தர், நித்யஸூரிகள்), அசேதனங்களையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளவன் என்றும், அவற்றுடைய ஸ்வரூபம்-இருப்பு-செயல் ஆகியவற்றையும் நியமிப்பவன் என்றும் தேறுகிறது. “நர” என்னும் பதம் மூலம் குறிப்பிடப்படும் மூன்றுவகையான சேதனர்களுடைய விருப்பங்களை அவனே நிறைவேற்றுகிறான். அவன் ஆனந்தமயமாக உள்ளதால், அவர்களால் விரும்பப்படும் இலக்காகவும் உள்ளான். மேலும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (2-13-2) - விஷ்ண்வாதாரம் யதா சைதத் த்ரைலோக்யம் ஸமவஸ்திதம் – இந்த மூன்று உலகங்களும் எவ்விதம் மஹாவிஷ்ணுவை ஆதாரமாகக் கொண்டுள்ளனவோ ஸ்ரீமத்பகவத்கீதை (15-17) - யோ லோகத்ரயமாவிச்ய விபர்த்யவ்யய ஈச்வர: - மூன்று உலகங்களிலும் ஆத்மாவாக உள்ளே நின்று நியமித்து என்று உள்ளதற்கு ஏற்ப, அவனே ஆதாரமாக உள்ள தன்மையும் கூறப்பட்டது. இவை அனைத்தும் “அயந” என்னும் பதம் மூலம் எவ்விதம் உணர்த்தப்படுகிறது என்று அடுத்து கூறுகிறார். “அயந” என்பது “செல்லுதல்” என்னும் பொருள் கொண்டதான “இண்” என்னும் தாதுவிலிருந்து, மூன்றுவிதங்களில் உண்டாக்கிறது. அவையாவன: ஈயதே அநேந (இவனைக் கொண்டு அடையப்படுகிறது) – இதில் இவன் காரண வஸ்துவாகக் கூறப்படுகிறான்; ஸர்வேச்வரன் உபாயமாகக் கூறப்படுகிறான். ஈயதே அஸௌ (இவன் அடையப்படுகிறான்) – ஸர்வேச்வரன் அடையப்படும் இலக்காக அல்லது உபேயமாக உள்ளான். ஈயதே அஸ்மிந் (இவனிடம் அடையப்படுகிறது) – ஸர்வேச்வரனே அனைத்திற்கும் ஆதாரமாக உள்ளான். இது தவிர, “செல்லுதல்” என்னும் பொருள் தருவதான “அய்” என்னும் தாதுவிலிருந்தும் இந்தக் கருத்து தேறுகிறது. ஆகவே ஸர்வேச்வரன் உபாயமாகவும், உபேயமாகவும், எளியவனாகவும், அனைத்திற்கும் ஈச்வரனாகவும் உள்ள தன்மை தெளிவாகிறது.