Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 66)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நாராயண சப்தத்திற்குப் பஹுவ்ரீஹி, தத்புருஷ ஸமாஸங்கள் மூலம் உண்டாகும் விளக்கம்
மூலம் – ஈச்வரனோடு ப்ருதக்ஸித்தங்களல்லாத நாரங்களுக்கு “நாரா: அயநம் யஸ்ய” என்றும், “நாராணாமயநம்” என்றும் நிஷ்கர்ஷவிவக்ஷையாலே வையதிகரண்யம் உண்டாயிற்று. இச்சப்தத்துக்கு நம்மாழ்வார் “எண்பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன்” என்றும், “நாரணன் மூவேழுலகுக்கும் நாதன்” என்றும் பூர்வாபரங்களிலே ஸமாஸத்வயத்தில் அர்த்தத்தைப் ப்ரதர்சிப்பித்தார். இதிலே ஹேயப்ரத்யநீகத்வ கல்யாணைகதாநத்வ ரூபமான உபயலிங்கத்வமும் உபயவிபூதியோகமும் கர்ப்பிதம். தேவீ பூஷண ஆயுத பரிஜந பரிச்சத த்வாரபால பார்ஷதாதி பேதங்களும் இங்கே அநுஸந்தேயங்கள்.
– குறிப்பு: நாராயண என்னும் பதம் “நார” மற்றும் “அயநம்” என்னும் இரண்டு பதங்கள் சேர்ந்து உண்டாகும் பதமாகும். இதனை “நாராணாம் + அயநம்” என்றும், “நாரா: + அயநம்” என்றும் இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். இவற்றில் “நாராணாம் + அயநம்” என்று பிரிப்பது தத்புருஷ ஸமாஸம் எனப்படும்; இது தமிழ் இலக்கணத்தில் வேற்றுமைப் புணர்ச்சி எனப்படும்; இதன் பொருள் “நாரங்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்” என்பதாகும். “நாரா: + அயநம்” என்று பிரிப்பது பஹுவ்ரீஹி ஸமாஸம் எனப்படும்; இது தமிழ் இலக்கணத்தில் அன்மொழித்தொகை எனப்படும்; இதன் பொருள் “நாரங்களை இருப்பிடமாக உடையவன்” என்பதாகும். ஸர்வேச்வரனோடு வேறுபட்டு அல்லாமல் (பிரிந்து அல்லாமல்) நிற்க இயலாத நாரங்கள் எனப்படும் சேதன அசேதனங்கள், “நாராயண” என்னும் பதமானது “நாரா: அயநம் யஸ்ய – யாருக்கு இருப்பிடம் நாரங்களோ, அவன்” என்றும், “நாராணாமயநம் = நாரங்களுக்கு இருப்பிடமாக உள்ளவன்” என்றும் இரண்டுவிதமாக பொருள் அளிப்பது கொண்டு, தனித்திருப்பது போன்று தோன்றுகிறது. இவ்விதம் இந்தப் பதம் இரண்டாகப் பிரிந்து, இருவிதமான பொருள்களை அளிப்பதை நம்மாழ்வார் திருவாய்மொழியின் தொடக்கத்திலும், இறுதியிலும் பின்வருமாறு அருளிச்செய்தார்: திருவாய்மொழி (1-2-10) - எண்பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறில வண் புகழ் நாரணன் – எண்ணற்றவர்களும், ஞானம் ஆனந்தம் முதலான குணங்கள் உள்ளவர்களும் ஆகிய ஜீவாத்மாக்கள், அசேதநங்கள், அளவற்ற திருக்கல்யாண குணங்கள் ஆகியவற்றைத் தனது அடிமையாகக் கொண்டவன். திருவாய்மொழி (2-7-3) - நாரணன் மூவேழுலகுக்கும் நாதன் – ஏழு லோகங்களுக்கும் நாராயணன் நாதன் ஆவான். இவ்விதம் உரைக்கையில் - தோஷம் அற்றவை மற்றும் உயர்ந்த தன்மைகளுடன் கூடியவை என்னும் இருவிதமான அடையாளங்களுடன் உள்ள தன்மை, லீலாவிபூதி மற்றும் நித்யவிபூதி ஆகிய இரண்டுடன் உள்ள தன்மை ஆகிய இரண்டும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கு நாரங்கள் என்பதில் தேவிமார்கள், ஆபரணங்கள், ஆயுதங்கள், வேலையாட்கள், குடை, சாமரம், பாதுகை, படைத்தலைவர்கள் போன்ற பலதும் அடங்கும்.