Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 65)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நாராயண சப்தத்தின் பெருமை
மூலம் – இச் சப்தத்தின் ப்ரபாவம் “ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம்”, “நாராயணோதி யஸ்யாஸ்யே”, “நாராயணோதி சப்தோஸ்தி” இத்யாதிகளிலும், ஆழ்வார்களுடைய “குலம் தரும் செல்வம் தந்திடும்”, “நாரணன் தம் அன்னை நரகம் புகாள்” இத்யாதிகளான பாசுரங்களிலும் ப்ரஸித்தம். நாரதீயகல்பத்திலும் ரோகாபத்பய துக்கேப்யோ முச்யந்தே நாத்ர ஸம்சய: அபி நாராயணேத்யேதத் சப்தமாத்ர ப்ரலாபிந: என்றும் சொல்லப்பட்டது. இது தன்னையே ஸ்வரவ்யஞ்ஜந பேதத்தாலே எட்டுத் திருவக்ஷரமாக பாவிக்கத் திருமந்த்ரத்தோடு ஒக்குமென்று ப்ராணாந்த்ரரோக்தம்.
– “நாராயண” என்னும் பதத்தின் மேன்மையானது பின்வரும் பல வரிகளில் கூறப்பட்டுள்ளதைக் காண்க: ஸங்கீர்த்ய நாராயண சப்தமாத்ரம் விமுக்த துக்கா: ஸுகிநோ பவந்தி – “நாராயணா” என்ற திருநாமத்தை மட்டுமே உச்சரித்தால் போதுமானது, அவர்கள் தங்களுடைய துக்கங்கள் நீங்கி இன்பம் அடைவர். நாராயணோதி யஸ்யாஸ்யே – கன்றைப் பசு பின் தொடர்வது போன்று, – “நாராயணா” என்ற திருநாமத்தை உச்சரிப்பவனை நாராயணன் எப்போதும் பின் தொடர்கிறான். நாராயணோதி சப்தோஸ்தி – நாராயணன் என்னும் திருநாமம் உள்ளது (அப்படி உள்ளபோதும் அதனை உச்சரிக்காமல் நரகத்தில் வீழ்கிறார்களே!) பெரிய திருமொழி (1-1-9) - குலம் தரும் செல்வம் தந்திடும் – (நாராயணன் என்னும் திருநாமம்) ஸ்ரீவைஷ்ணவ குலப் பிறப்பையும், கைங்கர்யம் என்னும் செல்வத்தையும் அளிக்கும் பெரியாழ்வார் திருமொழி (4-6-1 முதல் 4-6-9 முடிய) - நாரணன் தம் அன்னை நரகம் புகாள் – “நாராயணன்” என்று தனது புத்திரனுக்குப் பெயரிட்ட தாய் ஒருவள் நரகம் செல்லமாட்டாள். நாரதீயகல்பம் (1-26) - ரோகாபத்பய துக்கேப்யோ முச்யந்தே நாத்ர ஸம்சய: அபி நாராயணேத்யேதத் சப்தமாத்ர ப்ரலாபிந: - “நாராயண” என்னும் ஒரு சொல்லை மட்டுமே உச்சரிப்பவர்கள் நோய், ஆபத்து, பயம் துக்கம் ஆகிய அனைத்திலிருந்தும் விடுபடுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. “நாராயண” என்னும் திருநாமத்தை உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்து என்று பிரித்தால் எட்டு எழுத்துக்கள் உள்ளதைக் காணலாம் (நா – ந் + ஆ, ரா – ர் + ஆ, ய – ய் + அ, ண – ண் + அ). இதனால் இந்தப் பதம் அஷ்டாக்ஷர மந்த்ரத்தோடு ஒத்துப் போகிறது என்று கொள்க.