Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 64)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நாராயண என்பது ப்ரணவத்தில் உள்ள “அ” என்பதன் விளக்கம் ஆதல் மற்றும் எஜமானன் அடிமை என்னும் தொடர்பை உணர்த்துதல்
மூலம் – இந்நாராயணசப்தம் சேஷ சேஷி தத்த்வங்கள் இரண்டையும் வெளியாகக் காட்டுகிற உபகாராதிசயத்தாலே விஷ்ணுகாயத்ரியிலும் திருநாராயணீயத்திலே நாமநிர்வசநம் பண்ணுகிறவிடத்திலும் மற்றுமுள்ள வ்யாபகநாமங்களுக்கும் முன்னே படிக்கப்பட்டது. ஸர்வ பரவித்யோபாஸ்ய விசேஷநிர்ணயம் பண்ணுகிற நாராயணாநுவாகம் பரதத்வமாக சங்கிதரான ப்ரஹ்மசிவாதிகளெல்லாம் ஸாமாநாதிகரண்யத்தாலே அங்குச் சொன்ன விச்வம்போலே விபூதியானார்களென்றும், இவர்களும் நாரசப்தார்த்தமென்றும் தெளிவிக்கைகாக இந்நாராயணசப்தத்தைப் பலகாலும் ஆதாரம் தோற்ற ஆவர்த்தித்தது.
– “எஜமானன் – சேவகன்” என்னும் தொடர்பை விளக்குவதற்குப் பெரிதும் உதவக்கூடியதான “நாராயண” என்னும் திருநாமமானது, பகவானின் வ்யாபகநாமங்களை (வ்யாபகநாமங்கள் = நாராயணன், வாஸுதேவன், விஷ்ணு) விவரிக்கும் பகுதிகள் கொண்டதான விஷ்ணுகாயத்ரியிலும் (விஷ்ணுகாயத்ரி = நாராயணோபநிஷ்த்தில் வருவதான - நாராயணாய வித்மஹே வாஸுதேவாய தீமஹி தந்நோ விஷ்ணு: ப்ரசோதயாத்), திருநாராயணீயத்திலும் (திருநாராயணீயம் = மஹாபாரதம் சாந்திபர்வம் மோக்ஷதர்மம் – நாராயணமயநம் க்யாதோ ஹ்யஹமேகஸ்ஸநாதந: ஆபோ நாரா இதி ப்ரோக்தா ஆபோ வை நரஸூநவ: அயநம் மம தா: பூர்வம் தேந நாராயண: அஸ்மி அஹம் – ஒருவனாகவும் நித்யனாகவும் உள்ள நான் நாரங்களுக்கு எல்லாம் இருப்பிடம் ஆவேன் என்று போற்றப்படுகிறேன். ஜலங்களே நாரங்கள் எனப்படுகின்றன. அந்த ஜலங்கள் விஷ்ணுவிடமிருந்து தோன்றிய தத்துவங்களாகும். அந்தத் தத்துவங்கள் எனக்கு முன்பு இருப்பிடமாக இருந்த காரணத்தால் நான் நாராயணன் எனப்படுகிறேன்) முதன்மையான இடத்தில் வருவதாகும். நாராயணாநுவாகத்தில் (தைத்திரீய உபநிஷத்தில் “ஸஹஸ்ரசீர்ஷா தேவம்” என்று தொடங்கும் அநுவாகம்) ப்ரஹ்மவித்யைகளை விதிக்கும் உபநிஷத் வாக்கியங்களில் கூறப்படும் உபாஸனை தேவதை யார் என்று தீர்மானிக்கும் பகுதி உள்ளது; அந்த உபநிஷத் வாக்கியங்கள் பலவற்றிலும் ப்ரம்மா, சிவன் முதலானவர்களுடைய பெயர்கள் பல இடங்களில் வந்த காரணத்தால், அவர்கள்தான் உபாஸனை தேவதையோ என்று ஐயம் எழலாம்; ஆனால் அங்கு அவர்கள் பெயரைக் காட்டிலும் நாராயணன் என்னும் திருநாமம் பலமுறை வருவதன் மூலம், அவர்கள் அனைவரும் இந்த உலகங்களைப் போன்று, ஸர்வேச்வரனாகிய நாராயணனுடைய விபூதிகளே (செல்வங்கள்) என்று உணர்த்தப்படுகிறது. மேலும் அங்கு “ப்ரஹ்மா: நாராயண:, சிவ: நாராயண:, இந்த்ர நாராயண:” என்று ஒரே முதல் வேற்றுமையில் அவர்களை உரைத்து, இவர்களை நாராயணன் தனது சரீரமாகக் கொண்டுள்ளான் என்றும் உணர்த்தப்பட்டது.