Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 63)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

நாராயண என்னும் பதத்தின் விளக்கம் – இங்கு சப்தமாகவாதல் அர்த்தமாகவாதல் நமஸ்ஸிலே தோற்றின சரணாகதியாகிற ஸாத்யோபாயத்தாலே ப்ரஸாதநீயனாய் மேலில் சதுர்த்தியில் விவக்ஷிதமான கைங்கர்யத்துக்கு ப்ரதி ஸம்பந்தியுமாய் ஸர்வரக்ஷகனாகவும் ஸர்வசேஷியாகவும் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரதிபந்நனான நிரபேக்ஷ சரண்யனுடைய படியை வெளியிடுகிறது. யோகரூடமான நாராயணசப்தம் சுருங்கச் சொன்ன அர்த்தம் தன்னையே அஜ்ஞாந ஸம்சய விபர்யயங்கள் கழியும்படி முகாந்தரத்தாலே தெளிவிக்கை விவரணம். இஸ்ஸங்க்ரஹ விவரண பாவம் ப்ரதமாக்ஷரம் முதலாக யதாஸம்பவம் கண்டு கொள்வது.

– திருமந்த்ரத்தில் உள்ள “நாராயண” என்னும் பதமானது அதன் பொருள் மற்றும் ஒலி ஆகிய இரண்டின் மூலமும், ப்ரணவத்தின் முதல் எழுத்தாகிய “அ” என்பதன் மூலம் உணர்த்தப்பட்ட கருத்தான அனைத்திற்கும் ரக்ஷகன் மற்றும் அனைத்திற்கும் எஜமானன் என்பதை விவரிக்கிறது. அவனுடைய கருணை என்பது சரணாகதி எனப்படும் ஸாத்யோபாயத்தால் கிட்டுகிறது என்னும் கருத்து, “நம:” என்பதன் மூலம் உணர்த்தப்படுகிறது. ”நாராயணாய” என்பதில் காணப்படும் “ஆய” என்னும் நான்காம் வேற்றுமை மூலம், அவன் சரணாகதி செய்த ப்ரபந்நனுடைய கைங்கர்யங்களைப் பெறுகிறான் என்பது மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. விவரணம் என்பது முன்பே கூறப்பட்ட ஒன்றைக் குறித்து, எந்தவிதமான ஐயமும் இல்லாமல் உணர்த்தும்விதமாக, மீண்டும் விளக்குவதாகும். இதனை “நாராயண” என்பதில் காணலாம்; அதாவது “அ” என்னும் எழுத்தின் மூலம் தெரிவிக்கப்படும் அனைத்திற்கும் எஜமானன் மற்றும் ரக்ஷகன் என்னும் கருத்தானது “நாராயண” என்பதால் விளக்கப்படுகிறது (குறிப்பு: யோகரூடம் என்பது இரண்டுவிதமாகப் பொருள் தரும்படியான அமைப்பாகும். இங்கு நாராயண என்னும் பதம், பெயர் என்று கொண்டால் மஹாவிஷ்ணுவையும், அதன் அர்த்தத்தைக் கொண்டால் அனைவருக்கும் ஆதாரமாக உள்ளதையும் குறிக்கும்).