Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 60)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்

மூலம் - இதில் முற்பட சேஷபூதனுக்கு ஸ்வத:ப்ராப்த வ்ருத்தியும் ஸாங்கந்யாஸரூபமான ஸாத்யோபாய சரீரமும் வகுத்தது. அநந்தரம் மோக்ஷோபாயாதிகாரிக்கு அவச்யாபேக்ஷிதமான நிரபேக்ஷ ஸ்வாதந்த்ர்யாதி நிவ்ருத்தி பூர்வக ஸ்வரூப சோதநம் பண்ணிற்று. பின்பு ஸாத்யோபாய விசேஷத்தாலே வசீகார்யமுமாய்ப் ப்ராப்யமுமாயிருக்கிற ஸித்தமிருக்கும்படியைச் சொல்லிற்று. உபாயாந்தரங்களிற் காட்டில் ஸமர்ப்பணத்தினுடைய ப்ரதாநோபாயத்வம் சொல்லிற்றாகவுமாம். இவையெல்லாம் மேற்சொல்லப் புகுகிற வாக்யார்த்தங்களிலே யதாஸம்பவம் அநுஸந்தித்துக் கொள்வது.

– இப்படியாக உள்ள மூன்றுவிதமான அர்த்தங்களில் முதலாவதான ஸ்தூல அர்த்தத்தில், ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள ஜீவாத்மாவின் இயல்பாக உள்ள வணங்குதலும், அந்த வணங்குதல் என்பதன் செய்கையான ஸாத்யோபாயத்தின் அமைப்பும் கூறப்பட்டது. அடுத்து இரண்டாவதாக உள்ள ஸூக்ஷ்ம அர்த்தத்தில், மோக்ஷத்தை விரும்பும் முமுக்ஷுவுக்கு அவசியம் இருக்கவேண்டியதான “எந்தச் சூழலிலும் சுதந்திரமானவன் அல்லன்” என்பதான ஸ்வரூபத்தின் நிலையை உணர்த்தியது. அடுத்து மூன்றாவதான அர்த்தத்தில் அடையப்படவேண்டிய இலக்காகவும், குறிப்பிட்ட உபாயம் மூலம் மட்டுமே அடையப்படக்கூடியவனும் ஆகிய ஸித்தோபாயமான ஸர்வேச்வரனுடைய ஸ்வபாவம் கூறப்பட்டது. அல்லது மற்ற அனைத்து உபாயங்களைக் காட்டிலும் சரணாகதி என்பதன் முதன்மை கூறப்பட்டது எனலாம். இவை அனைத்தையும் மேலே கூறப்படவுள்ள பத்துவிதமான யோசனைகளில் ஆங்காங்கு எவ்விதம் இயலுமோ அவ்விதம் கொள்க.