Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 58)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பதற்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் உள்ள மூன்றுவிதமான விளக்கங்கள்
மூலம் – இவ்விடத்தில், “நந்தவ்ய: பரம: சேஷீ” என்கையாலே நமஸ்ஸுக்குப் பரமசேஷியே ப்ரதிஸம்பந்தியென்னுமிடம் ஸ்வத: ப்ராப்தம். பரமசேஷி இன்னாரென்று தெளிகைக்காக விசேஷ நாமதேயம். இங்கு “அசாஸ்த்ரீயோபஸேவா து தத்விகாத உதீர்யதே” என்றும், “தத்வியாகாதோ நிராக்ருதி:” என்றும் சொன்ன வசநங்களுக்குப் ப்ரபத்தி காலத்தில் புத்திபூர்வ ப்ராதிகூல்யம் நடக்குமாகில் ஆநுகூல்ய ஸங்கல்பமும் ப்ரதிகூல்யத்தில் அபிஸந்தி விராமாதிகளும் இல்லையாயிற்றாமென்று தாத்பர்யம். ப்ரபத்த்யுத்தர காலத்தில் புத்திபூர்வ ப்ராதிகூல்யம் நடந்ததாகில் இவன் ருசியோடு பொருந்தின ஸ்வதந்த்ர்ய பகவதாஜ்ஞைக்கு விருத்தமாம்.
– இங்கு அஹிர்புத்ந்ய ஸம்ஹிதையில் (52-7) - நந்தவ்ய: பரம: சேஷீ – வணங்கப்படுபவனே உயர்ந்தவன் என்றும், சேஷி என்றும் கூறப்படுகிறான் – என்று கூறுவதால், “நம:” என்பதற்குத் தொடர்புடையவன் அந்த உயர்ந்த எஜமானனே என்பது பொருத்தமாகவும் உறுதியாகவும் உள்ளது. அப்படிப்பட்ட உயர்ந்த எஜமானன் யார் என்று உணர்த்துவதற்காகவே அவனுடைய திருநாமங்கள் கூறப்படுகின்றன. மேலே கூறப்பட்ட அஹிர்புத்ந்ய ஸம்ஹிதை வரிகளில், அசாஸ்த்ரீயோபஸேவா து தத்விகாத உதீர்யதே – சாஸ்த்ரங்களில் தள்ளப்பட்டவற்றைச் செய்தல் இதற்கு விரோதமானது – என்றும், தத்வியாகாதோ நிராக்ருதி: - மற்ற உயிர்களுக்குக் கெடுதல் செய்தல் இதற்கு விரோதமானது என்றும் கூறப்பட்டது. இந்த வரிகளால் உணர்த்தப்படுவது என்ன? அதாவது ப்ரபத்தி செய்யும் நேரத்தில் அவனுக்கு விருப்பம் அல்லாதவற்றை அறிந்துகொண்டு செய்தால், “அவனுக்கு விருப்பமானவற்றைச் செய்தல், அவனுக்கு விருப்பம் அல்லாதவற்றைச் செய்யாமல் இருத்தல்” என்பதான எண்ணம் அடியுடன் இல்லை என்று கருத்து என்பதை விளக்குவதாகவே அந்த வரிகள் உள்ளன. ப்ரபத்திக்குப் பின்னர் ஸர்வேச்வரனுக்கு விருப்பம் அல்லாதவற்றைச் செய்தால், இவன் ப்ரபத்தி செய்யும்போது எந்த ஒரு பகவானின் ஆணைகளை விருப்பத்துடன் ஏற்றானோ, அதற்கு மாறாக நடப்பவன் ஆகிறான்.