Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 51)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

நம: என்பதன் மூலம் உபாயம் மற்றும் பரஸமர்ப்பணம் கிட்டுதல்

மூலம் – இப்படி ஸ்வதந்த்ரனான சேஷியிட்ட வழக்காய் அகிஞ்சநனாயிருக்கிற இவனுக்கு அவனாலே புருஷார்த்தம் பெறவேண்டுகையாலே அவனுடைய வசீகரணார்த்தமாக த்வயத்திலும் சரமச்லோகத்திலும் விசதமாகச் சொல்லுகிற சரண வரணம் இங்கே ஸூசிதம். ஆத்மஸமர்ப்பணமும் சரணவரணமும் அந்யோந்யம் பிரியாமையாலே ஓரொன்றைச் சொல்லும் சப்தங்களில் இரண்டும் விவக்ஷிதம்.

– வேறு உபாயம் ஏதும் இல்லாத காரணத்தால், தனது எஜமானனும் சுதந்திரமாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரன் மூலமாக மட்டுமே தன்னுடைய புருஷார்த்தங்கள் கிட்டும் என்னும் நிலையில் ஜீவாத்மா உள்ளான். ஆகவே ஸர்வேச்வரனை அண்டுவதற்கு அவசியமான த்வயம் மற்றும் சரமச்லோகம் ஆகிய இரண்டிலும் உள்ள “காப்பாற்றுதலுக்கான ப்ரார்த்தனை” என்பது, திருமந்த்ரத்திலும் குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது. ஆத்மசமர்ப்பணம் மற்றும் “காப்பாற்றுதலுக்கான ப்ரார்த்தனை” ஆகிய இரண்டும் ஒன்றை ஒன்று எப்போதும் பிரியாமல் உள்ளதால், இவை இரண்டில் ஒன்றைக் கூறும் பதமானது, இரண்டையுமே குறிக்கும் என்று கருத்து.