Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 45)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தல் கிட்டும் முறை

மூலம் – இப்படி அத்யந்த பரார்த்ய பாரதந்த்ர்யங்கள் ஸித்திக்கையாலே “அடியார்க்கு என்னையாட்படுத்த விமலன்” என்கிறபடியே ஸ்வதந்த்ரனான சேஷிக்கு இஷ்டவிநியோகார்ஹனானபடியாலே ததீய சேஷத்வமும் இங்கே ஸித்தம். சேஷியுமாய் ஸ்வதந்த்ரனுமாகையாலே ஈச்வரன் இவ்வாத்மாவைத் தனக்கு நல்லவரான அடியார்க்குத் தன் உகப்பாலே சேஷமாக்கினால் இது ப்ராப்தமன்றென்னவொண்ணாது; விலக்கவொண்ணாது, சேஷியாகையாலே இஷ்டவிநியோகத்துக்கு ப்ராப்தன்; ஸ்வதந்த்ரனாகையாலே இதுக்கு ஸமர்த்தன், “மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன், உற்றதும் உன்னடியார்க்கடிமை” என்கிற பாட்டிலும் இவ்வர்த்தம் கண்டு கொள்வது.

– ஆக ஜீவாத்மா ஈச்வரனுக்காக மட்டுமே உள்ளன் என்பதும், அவனுக்கு வசப்பட்டவன் என்பதும் தெளிவாகிறது. அமலனாதிபிரான் (1) – அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் – என்பதற்கு ஏற்ப, எஜமானனாகிய ஈச்வரனுக்கு விருப்பமானவற்றை மட்டுமே ஜீவன் செய்யவேண்டும் என்பதால், அவனுடைய விருப்பதிற்கு ஏற்ப அவனுடைய அடியார்களுக்குத் தொண்டு செய்யும்படிச் செய்வதால், பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்தல் என்பது உண்டாகிறது. நம்முடைய எஜமானனும், சுதந்திரமானவனும் ஆகிய ஈச்வரன் தன்னுடைய மகிழ்வு காரணமாக நல்ல பாகவதர்களுக்கு நம்மை அடிமையாக்கினால், அது சரியல்ல என்று எண்ணக்கூடாது, அதனை விலக்கவும் முயற்சி செய்யக்கூடாது. நமது எஜமானன் என்பதால், தன்னுடைய விருப்பம் போன்று நம்மை அவன் பயன்படுத்திக் கொள்ளலாம். அவன் சுதந்திரமானவன் என்பதால் இவ்விதம் செய்யும் திறன் அவனுக்கு உள்ளது. பெரியதிருமொழி (8-10-3) - மற்றும் ஓர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு உற்றிலேன், உற்றதும் உன்னடியார்க்கடிமை – உன்னைத் தவிர மற்றொரு தெய்வம் உண்டு என்பவர்களோடு நான் சேரமாட்டேன், உன்னை அடைந்தவர்களுக்கே நான் அடிமை - என்னும் பாசுரத்தில் இந்தப் பொருள் வெளிப்படுவது காண்க.