Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 41)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
நம: என்பது ஸர்வேச்வரன் அனைத்தையும் ரக்ஷிப்பவன் என்பதை உணர்த்துகிறது
மூலம் – ஈச்வரனுக்கு ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதியிலே சொன்ன ஸர்வரக்ஷகத்வம் உபாயாதிகாரிகள் பக்கல் ஏதேனும் ஓர் உபாயத்திலே ப்ரேரித்துக் கொண்டே வரக்கடவது. ஜீவன் ஸ்வரக்ஷணார்த்தமான உபாயாநுஷ்டானத்திலும் பராதீநகர்த்தாவாகையாலும், இவ்வுபாயம் அனுஷ்டித்தாலும் பலப்ரதாநரூப ரக்ஷை பண்ணுவான் ப்ரஸந்நனான ஸர்வேச்வரனாகையாலும் ப்ரதாமாக்ஷரத்திலே ப்ரக்ருதியாலே சொல்லப்பட்ட அவனுடைய ஸர்வரக்ஷகத்வமே இந் நம: சப்தத்தாலும் த்ருடீக்ருதம். இப்படி ப்ரதமசதுர்த்தியாலே ப்ரதிபந்நமான ஈச்வரனுடைய நிருபாதிக ஸர்வ சேஷத்வமும் ஜீவனுக்கு ஏதேனும் ஒன்றையும் பற்ற நிருபாதிக ஸர்வசேஷத்வம் கழித்த முன்புற்ற யோஜநையாலே த்ருடீக்ருதமாயிற்று. இஜ்ஜீவனுக்குள்ள ஸ்வாதந்த்ர்யமும் “பராத்து தச்சேத:” என்கிற ந்யாயத்தாலே நிருபாதிக ஸ்வாதந்த்ரனாய் ஸர்வார்த்த ப்ரவ்ருத்தனான பரமாத்மா வடிவாக வந்தது. அப்படியே வஸ்த்வந்தரங்களைப் பற்ற இஜ்ஜீவனுக்கு சேஷத்வமும் நிருபாதிக சேஷியான அவன் ஸர்வார்த்தமாகக் கொடுக்க வந்தது.
– ப்ரணவத்தின் முதல் எழுத்தான “அ” என்பதன் மூலம் உணர்த்தப்படும் “ஸர்வேச்வரன் அனைத்தையும் ரக்ஷிப்பவன்” என்னும் பொருளானது, அதற்கான உபாயங்களைக் கைக்கொள்ளுபவர்களிடம் உள்ள ஏதேனும் ஒரு உபாயத்தின் அடிப்படையில் உண்டாகிறது. ஜீவன் தானாக ஒரு உபாயத்தைக் கைக்கொண்டாலும், அதற்கான செயல்பாடுகளைச் செய்ய அவன் ஸர்வேச்வரனையே நாடவேண்டும் என்பதாலும், அந்த உபாயத்தை ஜீவன் செய்தாலும் அதற்கான பலனை அளித்துக் காப்பாற்றுபவன் கருணை நிறைந்த ஸர்வேச்வரன் என்பதாலும், ப்ரணவத்தின் தொடக்க எழுத்தான “அ” என்பதால் கூறப்பட்ட “ஸர்வேச்வரன் அனைத்தையும் ரக்ஷிப்பவன்” என்னும் கருத்தே “நம:” என்பதன் மூலமும் உறுதியாகிறது. இதே போன்று ப்ரணவத்தின் முதல் எழுத்தான “அ” என்பதில் உள்ள நான்காம் வேற்றுமை மூலம் உணர்த்தப்படுவதான “ஸர்வேச்வரன் அனைத்திற்கும் இயற்கையான எஜமானன்” என்பதும், ஜீவனுக்கு இயல்பாகவே எதுவும் அடிமையல்ல என்று முன்பு கூறப்பட்டதால் தெளிவாகிறது. ப்ரஹ்மஸூத்ரம் (2-3-40) - பராத்து தச்சேத: - ஜீவனுடைய கர்த்ருத்வம் பரமாத்மாவின் வசப்பட்டது – என்று கூறுவதால், ஜீவாத்மா சுதந்திரமாக ஒரு செயலைச் செய்வது போன்று தோன்றுவது எதனால் என்றால், அவனுடைய இயல்பான எஜமானனாகிய ஸர்வேச்வரன் அவ்விதம் செய்ய அனுமதி அளித்ததால் ஆகும்.