Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 40)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பது ஜீவன் தனக்குத்தானே உரியவன் அல்லன் போன்ற பலவற்றை உணர்த்துதல்

மூலம் – ப்ரணவத்தில் அந்யசேஷத்வம் கழிகையாலே பரமாத்மாவிற் காட்டில் அந்யனான தனக்குத்தான் சேஷனல்லனென்னுமிடம் ஸித்திக்கையாலும், தான் வேறொருத்தர்க்குச் சேஷமல்லாதாப்போலே வேறு ஒன்றும் தன்னைப்பற்ற நிரூபாதிக சேஷமன்று என்னுமிடம் இங்கே வருகையாலும் ப்ரணவத்தில் தோற்றாத ஸ்வஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியிலே நமஸ்ஸுக்குத் தாத்பர்யமாகவுமாம். அப்போது பூர்வப்ரயுக்த மகாரத்தை அநுஷங்கித்து நான் எனக்கு நிர்வாஹகனல்லேனென்று சொல்லிற்றாயிற்று. ஸ்வாதந்த்ர்ய பதமாத்ரத்தை அத்யாஹரித்து “ந மம ஸ்வாதந்த்ர்யம்” என்றதாகவுமாம். இச்சேதநனுக்கு ஸ்வாதந்த்ர்ய நிவ்ருத்தியாவது நிரபேக்ஷ கர்த்ருத்வாநர்ஹதை. இதுக்கு அடி பத்தாவஸ்தையிலும் முக்தாவஸ்தையிலும் ஸ்வபுத்திபூர்வ ப்ரவ்ருத்தி பண்ணா நின்றாலும் ஈச்வரன் கொடுத்த கரணாதிகளைக் கொண்டு அவன் ப்ரேரகனுமாய் ஸஹகாரியுமாக ப்ரவர்த்திக்க வேண்டுகை.

– ப்ரணவத்தில் ஜீவாத்மா (ஸர்வேச்வரன் தவிர வேறு) யாருக்கும் அடிமை அல்லன் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் ஜீவாத்மா தனக்கும் கூட தான் அடிமை அல்ல என்றாகிறது. ஆக இதன் மூலம் தானே தனக்கு அடிமை அல்லாதபோது, தனக்கும் ஏதும் அடிமை அல்ல என்பதும் தேறுகிறது. ஆனால், இந்தக் கருத்து (தான் தனக்கு அடிமை அல்ல என்னும் கருத்து) ப்ரணவத்தில் வெளிப்படவில்லை. ஆகவே இந்தக் கருத்து “நம:” என்பதன் மூலம் வெளிப்படுகிறது என்று கொள்க. இவ்விதம் கொள்ளும்போது, ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்தை “நம” என்பதில் இணைத்துக் கொண்டு (ந மம), “நான் என்னை நிர்வாகம் செய்யவல்லவன் அல்லன்” என்பது வெளிப்படுகிறது. இதே போன்று, “ந மம” என்பதன் இறுதியில் “ஸ்வாதந்த்ர்யம்” என்பதைச் சேர்த்துக் கொண்டு, “ந மம ஸ்வாதந்த்ர்யம் = எனக்கு சுதந்திரம் இல்லை” என்பதும் வெளிப்படுகிறது. “சுதந்திரம் இல்லை” என்றால், ஸர்வேச்வரனுடைய உதவி இல்லாமல் ஜீவாத்மா எந்த ஒரு செயலையும் செய்ய இயலாது என்று கருத்து. இதன் காரணம் என்னவென்றால் - ஸம்ஸாரத்தில் உள்ளபோதும், முக்தி அடைந்தபோதும் ஜீவாத்மா தன்னுடைய அறிவுக்கு ஏற்றபடி செயல்களைச் செய்தாலும், அவற்றை ஸர்வேச்வரன் அளித்த இந்த்ரியங்களைக் கொண்டும், அந்த இந்த்ரியங்களை ஸர்வேச்வரன் தூண்டுவது கொண்டும் மட்டுமே செய்கிறான்.