Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 39)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பது ஜீவன் தனக்குத்தானே உரியவன் அல்லன் போன்ற பலவற்றை உணர்த்துதல்

மூலம் – தனக்கு அந்யசேஷத்வம் ப்ரணவத்தில் மத்யமாக்ஷரத்திலே கழிகையாலே அந்யனான தன்னைப் பற்றத் தனக்கு சேஷத்வமில்லை என்று பிரித்துச் சொல்ல வேண்டாமையால் அந்யசேஷியாய்த் தோற்றின தனக்கு இங்கு ஏதேனுமொன்றையும் பற்ற நிரூபாதிக ஸ்வாமித்வம் கழிக்கையிலே தாத்பர்யமாகவுமாம். ஜீவனுக்கு சேஷமானவையெல்லாம் நிரூபாதிக ஸர்வசேஷியான ஸர்வேச்வரன் ஸ்வார்த்தமாகக் கொடுத்தவையிறே. ஜீவர்களுடைய நித்யங்களான குணாதிகள் ஈச்வரனுடைய நித்யேச்சாஸித்தங்கள். அசுத்த தசையிலும் சுத்த தசையிலும் உண்டான அநித்ய விக்ரஹாதிகள் இவர்களுடைய கர்மஜந்யமாயும் கர்மநிரபேக்ஷமாயுமுள்ள அநித்யேச்சா ஸித்தங்கள்.

– ப்ரணவத்தின் நடு எழுத்தான “ம” என்பதன் மூலம் ஜீவாத்மா ஸர்வேச்வரனுக்கு அல்லாமல் மற்றவர்களுக்கு அடிமை என்பது தள்ளப்படுகிறது; ஆக ஜீவாத்மா தனக்குத்தானே அடிமை அல்லன் என்பதைத் தனியாக மீண்டும் கூறவேண்டும் என்று அவசியம் இல்லை. ஆக ஒருவனுக்குச் சிலர் அடிமைகளாகத் தோன்றினாலும் அல்லது இவன் யாருக்கும் அடிமை என்று தோன்றினாலும், அவர்களுக்கு இவன் இயல்பான எஜமானனும் அல்லன், இவன் அவர்களுக்கு இயல்பான அடிமையும் அல்லன். ஜீவனுடைய அடிமை என்று காணப்படும் அனைத்தும் (அவனுடைய சரீரம், குணங்கள் போன்றவை), ஜீவாத்மாவுடைய இயல்பான எஜமானனும், அனைத்து உயிர்களின் எஜமானனும் ஆகிய ஸர்வேச்வரனால், ஸர்வேவரன் பொருட்டு அளிக்கப்பட்டவையே ஆகும். ஜீவாத்மாவுக்கு எப்போதும் உள்ளதான குணங்கள் முதலானவை, ஸர்வேச்வரனுடைய விருப்பம் காரணமாகவே அளிக்கப்பட்டவை ஆகும். மேலும் ஸம்ஸாரத்தில் உள்ளபோது உண்டாகும் சரீரங்களும், மோக்ஷம் கிட்டிய பின்னர் உண்டாகும் சரீரமும் முறையே ஸர்வேச்வரனுடைய விருப்பத்திற்கு ஏற்றபடி, முற்பிறவியில் உண்டான கர்மபலன்கள் மற்றும் கர்மபலன் நீங்கிய நிலை ஆகியவற்றால் உண்டாகின்றன.