Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 38)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
“நம:” என்பது ஜீவன் தனக்குத்தானே உரியவன் அல்லன் போன்ற பலவற்றை உணர்த்துதல்
மூலம் – இப்படி அநுஷங்கியாத பக்ஷத்தில் பொதுவிலே தன்னோடு துவக்குண்டாய்த் தோற்றுகிறவற்றையெல்லாம் என்னதன்றென்று தன் துவக்கறுக்கிறது. இத்தால் தன்னையும் தன்னுடைய குண விக்ரஹாதிகளையும் பற்றத் தன் விசேஷங்களைக் கழிக்கையாலே விபரீதாஹங்கார மமகாரங்களாகிற ஸம்ஸார மூலங்கள் சேதிக்கப்பட்டன. இங்கு கழிக்கிற அஹங்காரம் ப்ரமரூபமான புத்தி விசேஷம். மற்றும் தத்துவங்களில் எண்ணின அஹங்காரம் விவேக மாத்ரத்தால் கழிவதொன்றன்று; ஸூக்ஷ்ம சரீரம் விடுமளவும் இவனைத் தொத்திக் கிடக்கும். இவ் அசித்ஸம்பந்தம் இவனுக்குக் கழியாதிருக்க இதின் கார்யங்களாய் ப்ரமரூபங்களான அஹங்காராதி வ்யாதிகள் மூலமந்த்ராதிகளாலே ஸித்தமான விவேகமாகிற பேஷஜ விசேஷத்தாலே கழிகின்றன.
– (ஜீவாத்மாவுக்கு எதுவும் அடிமை இல்லை) – “அஹம்” என்னும் பதத்திற்கு அநுஷங்கம் என்னும்படி பொருள் கொள்ளாமல், “ஒரு பொருளும் எனக்கு உரியது அல்ல” என்னும்படி அத்யாஹாரத்தில் பொருள் கொண்டால், தன்னுடன் தொடர்புள்ளது என்று தோன்றும் பொருள்கள் எல்லாம் தன்னுடையது அன்று என்ற எண்ணத்தால், தொடர்பற்றுப் போய்விடும். ஆக இவற்றின் மூலமாக “நம:” என்பது தன்னைக் குறித்தும் தன்னுடைய குணங்கள் முதலானவற்றைக் குறித்தும் உள்ள “இவை என்னுடையவை, நான்” முதலான ஸம்ஸாரம் உண்டாவதற்கு மூலகாரணங்களாக உள்ள அஹங்கார மமகாரங்களை, “ஒரு பொருளும் எனக்கு உரியது அல்ல ” என்ற எண்ணத்தை உண்டாக்கி விலக்குகிறது. இங்கு கூறப்படும் அஹங்காரம் என்பது ஒருவிதமான புத்தி மயக்கம் ஆகும். அஹங்காரம் என்ற பதம், இருபத்துநான்கு தத்துவங்களில் ஒன்றைக் குறிக்கவும் பயன்படும்; ஆனால் அந்த அஹங்காரம் என்பது விவேகத்தால் மட்டுமே நீங்குவதல்ல; ஜீவாத்மா தனது ஸூக்ஷ்ம சரீரத்தைப் பிரியும்வரை அது தொடர்ந்தபடியே இருப்பதாகும். இந்த அஹங்காரம் என்ற அசித் வஸ்துவுடனான தொடர்பு ஜீவாத்மாவுக்கு விலகாமல் உள்ளபோதிலும், அதனால் உண்டாகும் நோய்களான அபிமானம் (என்னுடையது போன்ற சிந்தனைகள்) என்பதான மயக்கங்கள், அஷ்டாக்ஷரம் முதலான மூலமந்த்ரங்கள் மூலம் உண்டாகும் விவேகம் முதலான மருந்துகள் மூலம் விலகுகின்றன.