Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 37)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பது ஜீவன் தனக்குத்தானே உரியவன் அல்லன் போன்ற பலவற்றை உணர்த்துதல்

மூலம் – இங்கு “ந மம” என்கிறது எதையென்னில், ப்ரணவத்தில் த்ருதீயாக்ஷரத்தை அநுஷங்கித்து நான் எனக்குரியேனல்லேன் என்றதாயிற்று. அத்யாஹாரத்திற் காட்டில் அநுஷங்கம் உசிதமென்னும் இடம் அனுஷங்காதிகரண ஸித்தம். இங்கு “ந மமாஹம்” என்று விசேஷிக்கையாலே கீழ் அந்யசேஷத்வத்தைக் கழிக்கிற மத்யமாக்ஷரம் கோபலீவர்த்த ந்யாயத்தாலே ஸ்வவ்யதிரிக்த விஷயம். “அஹம் ந மம” என்கிற வாக்யத்தாலே தன் ஸ்வரூபமும் தனக்கு உரித்தல்லாமையாலே குணங்கள் ப்ரதாநாநுவர்த்திகள் என்கிறபடியே வேறொன்றையும் பற்றத் தனக்கு நிருபாதிக ஸ்வாமித்வம் இல்லையென்று விசேஷித்து அநுஸந்தாநம் பலித்தது. இது விசேஷ நிர்த்தேசத்துக்குப் ப்ரயோஜநம்.

– (ஜீவாத்மா தனக்குத்தானே அடிமை அல்லன் என்று கூறுதல்) – இங்கு “ந மம” என்பதன் மூலம் கூறப்படுவது என்னவென்றால், ப்ரணவத்தில் உள்ள மூன்றாவது எழுத்தான “ம” என்பது “நம:” என்பதுடன் இழுத்துச் சேர்த்துக் கொள்ளப்பட்டு, “ந மம” என்றாகி, “நான் எனக்கு உரியவன் அல்லேன்” என்னும் பொருளைத் தருகிறது என்பதாகும் (இவ்விதம் முன் பின் உள்ள எழுத்துக்களை இழுத்துக் கொள்வது அநுஷங்கம் எனப்படும்). அல்லது இத்துடன் “கிஞ்சித்” என்பதைச் சேர்த்துக் கொண்டு, “ஒரு பொருளும் எனக்கு உரியது அல்ல” என்னும் பொருளையும் உரைப்பதாகக் கொள்ளலாம் (இது போன்று புதிதாக ஒரு சொல்லை வருவித்துக் கொள்ளுதல் அத்யாஹாரம் ஆகும்). ஆனால், பூர்வமீமாம்ஸையில் அத்யாஹாரத்தைக் காட்டிலும், அநுஷங்கம் சிறப்பானது என்பதால், அதனையே கொள்க. இங்கு “ந மமாஹம்” என்பது “நான் எனக்கு உரியவன் அல்லன்” என்பதைக் கூறுகிறது; ப்ரணவத்தின் நடு எழுத்தான “உ” என்பதன் மூலம், “நான் ஈச்வரனுக்கு மட்டுமே உரியவன்” என்பதும், “மற்றவர்களுக்கு உரியவன்” என்பதை மறுப்பதும் கூறப்பட்டதால், இங்குள்ள “நம:” என்பதில் “நான்” என்பதும் அடங்கிவிடுகிறது (அதாவது “நான் மற்றவர்களுக்கு உரியவன் அல்லன்” என்பது மட்டும் அல்ல, “நான் எனக்கும் உரியவன் அல்லன்” என்று கருத்து). இது கோபலீவர்த்த ந்யாயத்தாலே ஆகும் (“கோ” என்றால் மாடு அல்லது காளை ஆகிய இரண்டையும் குறிக்கும்; “பலீவர்த்த:” என்றால் காளையை மட்டுமே குறிக்கும்; “மாட்டைக் கொண்டு வா” என்றால், “இரண்டில் ஒன்றைக் கொண்டு வா” என்று பொருள்; இவற்றில் காளையை மட்டுமே கொண்டு வரவேண்டும் என்பதால், “கோ பலீவர்த்த:” என்பர். இது போன்றே ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து, “மற்றவர்களுக்கு அடிமை அல்லன்” என்பதைக் கூறும்போது, “தனக்கும் அடிமை அல்லன்” என்பதையும் கூறுகிறது என்று கருத்து). “அஹம் ந மம” என்பதன் மூலம், “தனது ஸ்வரூபமும் தனக்கு உரியது அல்ல” என்று தேறுகிறது. இதன் மூலம் - குணங்கள், தன்மைகள் முதலானவை அவற்றை உடையவனையே பின்பற்றும் என்பது போன்று, தனக்கு வேறு எதனையும் இயல்பாகவே பின்பற்றும் உரிமை இல்லை என்பதும் தேறுகிறது.