Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 36)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

“நம:” என்பதன் விளக்கம்

மூலம் – இப்படியே நமஸ்ஸின் மகாரம் மூன்றத்தொரு ப்ரகாரத்தாலே ப்ரத்யகாத்மாவைச் சொல்லுகிறது. இது ஷஷ்டீ விபக்த்யந்தமாகையாலும் நகாரம் நிஷேதத்தைச் சொல்லுகையாலும் “ந மம” என்றதாயிற்று. நிஷேதத்தில் ஆதராதிசயம் தோற்றுகைக்காக நஞ் முன்னே கிடக்கிறது. இது த்ருஷ்டா ஸீதா என்னுமாப் போலேயிருக்கிறது. இம்மகாரத்தில் ஷஷ்டியானது ஸம்பந்தஸாமாந்ய முகத்தாலே உசிதஸம்பந்த விசேஷத்தை விவக்ஷிக்கிறது. இவ்வபிப்பிராயத்தாலேயிறே பட்டரும் “அத மஹ்யம் ந” என்றது. வாக்யங்களுக்கு அவதாரணத்திலே தாத்பர்யம் கொள்ளுகை உசிதமாகையாலே இப்ப்ரணவத்திலே மத்யமாக்ஷரஸித்தமான தாத்பர்யார்த்தத்தோடே உறவாயிருக்கிற இந்நமஸ்ஸின் பொருளே ஸர்வத்திலும் ஸாரமென்னுமிடம் த்வயக்ஷரஸ்து பவேந்ம்ருத்யு: த்ரயக்ஷரம் ப்ரஹ்ம சாச்வதம் மமேதி த்வயக்ஷரோ ம்ருத்யு: ந மமேதி ச சாச்வதம் இத்யாதிகளாலே சொல்லப்பட்டது. ஸர்வ ஜிஹ்யம் ம்ருத்யுபதம் ஆர்ஜிவம் ப்ரஹ்மண: பதம் ஏதாவாந் ஜ்ஞாநவிஷய: கிம் ப்ரலாப: கரிஷ்யதி என்கிற ச்லோகத்துக்கும் இந்நமஸ்ஸின் பொருளிலே ப்ராதாந்யேந தாத்பர்யம்.

– இவ்விதமாக “நம:” என்பதில் உள்ள “ம” என்பதும் முன்பே உரைக்கப்பட்டது போன்று “இருபத்து ஐந்தாவது தத்துவம், அறியக்கூடிய வஸ்து, நான்” என்பதான மூன்று விதங்களில் கூறப்படும் ஜீவாத்மாவையே குறிப்பதாக உள்ளது. இங்குள்ள “ம” என்பது ஆறாம் வேற்றுமையாக உள்ளதாலும், “ந” என்பது “இல்லை” என்று மறுக்கும் பொருளைக் கொண்டதாக உள்ளதாலும், ”ந மம - என்னுடையது இல்லை” என்று வந்தது. இங்கு “இல்லை” என்று மறுப்பதற்கு அதிக முக்கியத்வம் அளிக்கவேண்டும் என்பதால் “ந” என்பது முதலில் வந்தது; அனுமன் சீதையைக் கண்டதை முதலில் அறிவிக்கவேண்டும் என்பதால், “ஸீதா த்ருஷ்டா – சீதையைக் கண்டேன்” என்று கூறாமல், இராமாயணம் பாலகாண்டம் (1-78) – த்ருஷ்டா ஸீதா – கண்டேன் சீதையை – என்பது போல இங்கும் கொள்க. “ம” என்ற ஆறாம் வேற்றுமை மூலம் பொதுவாக உறவுமுறை கூறப்பட்டாலும், இங்கு இதன் மூலம் “எஜமானன் – அடிமை” என்னும் ப்ரத்யேகமான உறவுமுறை உணர்த்தப்படுகிறது. இதன் காரணமாகவே ஸ்வாமி பராசரபட்டர் தனது அஷ்டச்லோகியில் (3) - அத மஹ்யம் ந – நான் எனக்காக இல்லை – என்றார். ஒவ்வொரு வாக்கியமும் ஒரு குறிப்பட்ட பொருளையே அளிப்பதற்காக உள்ளது என்னும் கருத்தின்படி, “நமஸ்” என்பது, “மட்டுமே (அதாவது நான் ஸர்வேச்வரனுக்கு மட்டுமே உரியவன், எனக்கு அல்ல)” என்னும் பொருளை அளிப்பதான ப்ரணவத்தின் நடு எழுத்தான “உ” என்பது போலவே அமைந்துள்ளதாகும். இதனை மஹாபாரதம் சாந்திபர்வம் (13-4) - த்வயக்ஷரஸ்து பவேந்ம்ருத்யு: த்ரயக்ஷரம் ப்ரஹ்ம சாச்வதம் மமேதி த்வயக்ஷரோ ம்ருத்யு: ந மமேதி ச சாச்வதம் – ஸம்ஸாரத்தின் காரணம் “மம” என்னும் இரண்டு எழுத்து, ப்ரஹ்மத்தை அடைவதற்குக் காரணம் “ந மம” என்னும் மூன்று எழுத்து – என்றது காண்க. இதே போன்று, மஹாபாரதம் சாந்திபர்வம் (79-21) - ஸர்வ ஜிஹ்யம் ம்ருத்யுபதம் ஆர்ஜிவம் ப்ரஹ்மண: பதம் ஏதாவாந் ஜ்ஞாநவிஷய: கிம் ப்ரலாப: கரிஷ்யதி – மமகாரம் போன்ற பலவும் ஸம்ஸாரத்துக்குக் காரணமான அறியாமையை வளர்ப்பதாகும், அடிமைத்தனம் போன்ற பலவும் மோக்ஷத்துக்குக் காரணமான ஞானத்தை வளர்ப்பதாகும், இது மட்டுமே அறியவேண்டியதாகும், மற்றவற்றைக் குறித்து விவாதித்து என்ன பயன் – என்ற வரியும் இதே கருத்தை உணர்த்துவதாகும்.