Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 35)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து ஜீவனைக் கூறுகிறது என்பதற்கான விளக்கம்

மூலம் – வேறே சில ஆசார்யர்கள் அஸ்மச்சப்தத்தில் வ்யஞ்ஜனமாத்ரமான மகாரத்தை எடுத்து சாந்தஸப்ரக்ரியையாலே பூர்வோத்தரபாகங்கள் லோபித்து நிற்கிறதாய்த் த்ருதீயாக்ஷரம்தானே அஹமர்த்தத்தைக் காட்டுகிறதென்றும் யோஜிப்பார்கள். பரமாத்மாவுக்கு ஆத்மஹவிஸ்ஸை ஸமர்ப்பிக்க விதிக்கிற ந்யாஸவித்யையிலே ப்ரணவத்தை மந்த்ரமாக ஓதுகையாலே இது அநுஷ்டேயார்த்த ப்ரகாசகமாகைக்காக இதிலே பராவராத்மவிஷயமான வாசகாம்சம் அபேக்ஷிதமானால் ப்ரமாணாநுஸாரத்தாலே ப்ரதமாக்ஷரம் உத்தேச்யகாரகத்தைச் சொல்லுகையாலும், மத்யமாக்ஷரம் அந்யார்த்தமாகையாலும், பரிசேஷ்யத்தாலே த்ருதீயாக்ஷரம் ஸமர்ப்பணீயமான ப்ரத்யகாத்ம ஹவிஸ்ஸைக் காட்டவேண்டியதால் இவ்வக்ஷரத்துக்கு அஹம் என்று பொருளாகை மிகவும் உசிதம். ஆகையாலேயிறே பட்டர் இங்குற்ற ப்ரணவத்துக்கு அகாரார்த்தாயைவ ஸ்வமஹம் என்று வ்யாக்யாநம் பண்ணிற்று.

– ஒரு சில ஆசார்யர்கள், வேத இலக்கணப்படி, ”நான்” என்பதைக் குறிப்பதான “அஸ்மத்” என்பதின் முதல் பகுதியான “அஸ்” என்பதையும் இறுதிப் பகுதியான “அத்” என்பதையும் நீக்கி, நடுவில் உள்ள “ம்” என்னும் மெய்யெழுத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, “நான்” என்னும் ஜீவாத்மாவை இந்த “ம்” என்பது குறிப்பது போன்றே, ப்ரணவத்தின் மூன்றாம் எழுத்தான மகாரமும் ஜீவாத்மாவைக் குறிக்கிறது என்று உரைப்பர். தைத்திரீய உபநிஷத்தில் உள்ள ந்யாஸவித்யையில் ஜீவாத்மாவை பரமாத்மாவுக்கு அவிர்பாகமாய் சமர்ப்பணம் செய்யும்போது உச்சரிக்கவேண்டிய மந்த்ரமாக ப்ரணவமே உள்ளது. ஆகவே அந்த மந்த்ரத்தில் அனுஷ்டிக்கவேண்டியதைத் தெளிவாக்கும் பொருட்டு, பரமாத்மா மற்றும் ஜீவாத்மாவைக் குறிக்கும் சொற்கள் வெளிப்படையாக இருத்தல்வேண்டும் அல்லாமல் மறைமுகமாக இருத்தல் கூடாது. ப்ரமாணங்களின் அடிப்படையில் நோக்கினால் ப்ரணவத்தின் முதல் எழுத்தான “அ” என்பது யாரிடம் சரணம் புகுகிறோமோ அந்த வஸ்துவைக் குறிப்பதாகவும், நடு எழுத்தான “உ” என்பது வேறு ஒரு அர்த்தத்தைக் குறிப்பதாகவும், மீதம் உள்ளதால் “ம” என்பது சமர்ப்பிக்கப்படுவதான ஜீவாத்மாவைக் குறிப்பதாகவும் ஆகிறது. இதனால்தான் ஸ்வாமி பராசரபட்டர் அஷ்டச்லோகியில் ப்ரணவத்துக்கு விவரணம் கூறும்போது, “அ என்னும் எழுத்தால் கூறப்படும் பகவானுக்கு மட்டுமே நான் உடைமையாக உள்ளேன்”, என்றார்.