Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 34)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து ஜீவனைக் கூறுகிறது என்பதற்கான விளக்கம்

மூலம் – சேஷத்வஜ்ஞாநமும் ஸ்யஸ்வாதந்த்ர்யாபிமாந நிவ்ருத்த்யாதிகளும் உபாய விசேஷ பரிக்ரஹமும் பலபூத சேஷவ்ருத்தி ப்ரார்த்தனையும் தனக்குப் பிறக்கிறதாகையாலே தன்னைப் ப்ரதாநமாகக் காட்டவேண்டுகையால் த்ருதீயாக்ஷரத்துக்கு விசேஷ்யபதமாக அஹம்சப்தத்தை அத்யாஹரித்து அந்வயமாகிறதென்றும் சில ஆசார்யர்கள் சொல்லுவார்கள். அப்போதும் ப்ரணவ விவரணமான “மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹ ஸகலம் தத்தி ததைவ மாதவ” இத்யாதிகளிற்படியே குணங்கள் ப்ரதாநாதுவர்த்திகளென்கிற ந்யாயத்தாலே தனக்கு சேஷமான குணாதிகளும் உபலக்ஷிதங்கள்.

– தான் ஸர்வேச்வரனுக்கு அடிமை என்னும் ஞானம், தான் சுதந்திரமானவன் என்ற எண்ணம் விலகுதல், ப்ரபத்தி என்னும் உபாயத்தை மட்டுமே கைக்கொள்ளுதல், ஸர்வேச்வரனுக்குக் கைங்கர்யம் செய்யவேண்டும் என்னும் பலனுக்கான ப்ரார்த்தனை ஆகிய அனைத்தும் ப்ரபந்நன் ஒருவனுக்கு உண்டாகவேண்டும். ஆகவே ப்ரணவத்தில் ஜீவனை ப்ரதானமாகக் காண்பிக்கவேண்டும் என்பதால், ப்ரணவத்தின் மூன்றாம் எழுத்தான “ம” என்பதற்கு “அஹம் = ஜீவனாகிய நான்” என்னும் பொருள் வருவிக்கப்படுவதாக சில ஆசார்யர்கள் உரைக்கிறார்கள். இவ்விதம் கொண்டாலும், ப்ரணவத்தின் விவரணமாக உள்ள ஆளவந்தாரின் ஸ்தோத்ரரத்னத்தில் (52) - மம நாத யதஸ்தி யோஸ்ம்யஹ ஸகலம் தத்தி ததைவ மாதவ – மாதவா! “நான்”, “எனது” என்று கூறப்படும் வஸ்துக்கள் அனைத்தும் உன்னுடையது என்று அறிந்த பின்னர் உனக்கு நான் எதனைச் சமர்ப்பிக்க இயலும் – சில தன்மைகள் மட்டுமே கூறப்பட்டாலும், ஜீவனுக்கே உரிய அனைத்தும் இதில் மறைமுகமாக உணர்த்தப்பட்டதாகவே கொள்க.