Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 33)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து ஜீவனைக் கூறுகிறது என்பதற்கான விளக்கம்
மூலம் – இப்படிப் பரிசுத்தமான ஸ்வாபாவிகரூபத்தைப் பார்த்தால் அசேதநங்களிலுள்ள ஜடத்வாதிகளும் கழிந்து ஸம்ஸார தசையிலுள்ள க்லேசாதிகளும் கழிந்து நிற்கையாலே ஸ்வரூப தர்மங்களிரண்டிலுமுள்ள நிர்மலத்வம் அநுஸம்ஹிதமாயிற்று. இந்தப் பரசேஷதைக ரஸ பரிசுத்த ஸ்வரூபமே முமுக்ஷு தசையிலே அநுஸந்தேயம் என்னுமிடம், “வ்யதிரேக: தத்பாவ பாவித்வாத் ந து உபலப்திவத்” என்னும் ஸூத்ரத்திலே ஸித்தம். இவனுக்கு முமுக்ஷு தசையில் பலதசாநுஸந்தாநம் பலாபேக்ஷைக்கு உறுப்பாம். புருஷார்த்த பேதங்களுக்கு ஈடாக அநுஸந்தேயாகாரங்கள் வேறுபட்டிருக்கும் என்னுமிடம் ஸ்ரீகீதையில் அஷ்டமாத்யாயத்திலும் பாஷ்யாதிகளிலும் ஸுவ்யக்தம். ஜீவபேதம் ப்ரமாணிகமாகையால் இத் த்ருதீயாக்ஷரம் “நாத்மா ச்ருதே:” இத்யாதிகளிற்போலே ஜாத்யேகத்வபரம். இப்படி ஜீவதத்த்வத்தை எல்லாம் இங்கு “தாஸபூதாஸ்ஸ்வத: ஸர்வே ஹி ஆத்மந: பரமாத்மந:” என்கிறபடியே ஸாமாந்யேந பகவச்சேஷமாகச் சொன்னாலும் அதிலே தானும் அந்தர்கதனாகையாலே “அத: அஹமபி ஸே தாஸ:” என்னும் அநுஸந்தாநமும் ஸித்திக்கிறது.
– ஜீவாத்மாவின் இயல்பானதும் பரிசுத்தமானதும் ஆகிய ஸ்வரூபத்தைக் காணும்போது, அதற்கு அசேதனங்களுக்கே உரிய ஜடத்தன்மைகளும், ஸம்ஸாரத்தின் வேதனைகளும் நீங்கியுள்ளதைக் காணலாம். ஆகவே ஜீவாத்மாவின் ஸ்வரூபம் மற்றும் தர்மங்களில், எந்தவிதமான தோஷமும் இல்லாத நிலை பொருத்தியுள்ளதைக் காணலாம். முமுக்ஷு ஒருவன் ஜீவாத்மா தூய்மையான தன்மையையும், ஜீவாத்மா ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள நிலையில் மட்டுமே இன்பமாக உள்ளது என்பதையும் எப்போதும் எண்ணியபடி இருத்தல் வேண்டும். இதனை ப்ரஹ்மஸூத்ரம் (3-3-52) - வ்யதிரேக: தத்பாவ பாவித்வாத் ந து உபலப்திவத் – ஜீவாத்மாவுக்கு ஸம்ஸாரதசையைக் காட்டிலும் மோக்ஷ தசையில் உள்ள வேறுபாடு எண்ணப்படவேண்டும்; அந்த ஸ்வரூபத்தைக் கொண்டவனாகக் காணப்படுவதால் – என்றது காண்க. முமுக்ஷு ஒருவனுக்கு மோக்ஷம் என்னும் பலன் குறித்து எண்ணுவது, அந்தப் பலனை அடையவேண்டும் என்னும் ஆர்வத்தை மேலும் தூண்ட காரணமாகிறது. அடையவேண்டிய புருஷார்த்தங்களுக்கு ஏற்றபடி த்யானங்களும் மாறுபடுவதை ஸ்ரீமத்பகவத்கீதையின் எட்டாவது அத்யாயத்திலும், ஸ்ரீபாஷ்யத்திலும் மிகவும் தெளிவாகக் காணலாம். ப்ரமாணங்கள் பல ஜீவாத்மாக்கள் உள்ளன என்று கூறுகின்றன; ஆகவே “ம” என்னும் எழுத்து ஒருமையில் இருந்தாலும், அது ஜீவாத்மா என்னும் ஜாதியைக் குறிப்பதாகவே கொள்ளவேண்டும். இதனை ப்ரஹ்மஸூத்ரம் (2-3-18) - நாத்மா ச்ருதே: - ஜீவாத்மாவுக்கு உற்பத்தி இல்லை – என்று ஒருமையில் கூறுவது போன்றே கொள்ளவேண்டும். தாஸபூதாஸ்ஸ்வத: ஸர்வே ஹி ஆத்மந: பரமாத்மந: - அனைத்து ஆத்மாக்களும் இயல்பாகவே பரமாத்மாவுக்கு தாஸர்கள் – என்று அனைத்து ஜீவாத்மாக்களையும் பொதுவாகக் கூறினாலும், ஒவ்வொரு ஜீவாத்மாவும் பரமாத்மாவுக்கு அடிமை என்பதால் ஒவ்வொருவரும், “அத: அஹமபி ஸே தாஸ: - நான் அவனுடைய அடிமை” என்று எண்ணவேண்டும்.