Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 32)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து ஜீவனைக் கூறுகிறது என்பதற்கான விளக்கம்
மூலம் – இவ்வக்ஷரம் வ்யாகரண ப்ரக்ரியைப் பார்த்தால் “மந ஜ்ஞாந” இத்யாதி தாதுக்களிலே நிஷ்பந்நமான பதமாகையாலே “ஜ்ஞ: அத ஏவ” என்கிற அதிகரணத்திற்படியே ஜ்ஞாநஸ்வரூபனுமாய், ஜ்ஞாநகுணகனுமாய் அணுவான ஜீவாத்மாவைச் சொல்லுகிறது. ஜ்ஞாநஸ்வரூபனாகப் பொதுவிலே சொன்னாலும் இவன் ஸ்வரூபம் அநுகூலமாகப் ப்ரமாணஸித்தமாகையாலே ஆநந்தரூபமான விசேஷமும் ஸித்திக்கும். ஜ்ஞாநகுணகனென்னுமிடம் சொன்னால் ப்ரமாணாநுஸாரத்தாலே முக்த தசையில் நிருபாதிக ப்ரஸரணமாய் ஸங்கோசரஹிதமான ஜ்ஞாநம் குணமானமை தோற்றும்.
– “ம” என்னும் எழுத்தை இலக்கண ரீதியில் ஆராய்ந்தால், “மந்” என்னும் வினைப்பகுதியிலிருந்து இந்த எழுத்து தோன்றுகிறது. இந்த வினைப்பகுதிக்கு “ஞானம்” என்று பொருள். ஆகவே இந்தப் பதம், ப்ரஹ்மஸூத்ரம் (2-3-19) - ஜ்ஞ: அத ஏவ – ஞானத்தைக் குணமாகக் கொண்டவன் – என்று கூறுவதற்கு, ஞானத்தையே ஸ்வரூபமாகவும் குணமாகவும் கொண்டுள்ளவனும், அணு அளவே உள்ளவனாகவும் இருக்கும் ஜீவாத்மாவைக் குறிக்கும். ஜீவாத்மாவை “ஞானஸ்வரூபன்” என்று பொதுவாக உரைத்தாலும், இந்த ஸ்வரூபமானது தகுந்த ப்ரமாணங்களால் கூறப்படுவதால், ஜீவாத்மாவின் ஸ்வரூபம் ஆனந்தமயமானதும் ஆகும் என்பது தானாகவே தேறுகிறது (அதாவது ஆனந்தமயமாக உள்ளதும் ஒருவிதமான ஞானமே என்று கருத்து). ஜீவாத்மா ஞானத்தைக் குணமாகக் கொண்டவன் என்று உரைக்கும்போது, அவன் இவ்விதமாக ஞானத்தைக் கொண்டிருத்தல் குறித்து எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் ப்ரமாணங்கள் கூறாத காரணத்தால், அவனுடைய முக்திநிலையில் அவனுடைய ஞானமானது எந்தவிதமான சுருக்கமும் இல்லாமல் எங்கும் பரவி நிற்கிறது; இதன் மூலம் ஞானம் அவனுக்குக் குணமாக உள்ள நிலை வெளிப்படுகிறது.