Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 31)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தில் உள்ள “ம” என்னும் எழுத்து ஜீவனைக் கூறுகிறது என்பதற்கான விளக்கம்
மூலம் – த்ருதீயாக்ஷரம் இங்கு அவச்யாநுஸந்தேயமான ஜீவனை முன்னாகக் கொண்டு உக்தமான சேஷத்வத்துக்கு ஆச்ரயமான ஸர்வத்தையும் உபலக்ஷிக்கிறது. இது ஜீவாத்ம வாசகமென்னுமிடம் மகாரம் ஜீவபூதம் து சரீரே வ்யாபகம் ந்யஸேத் என்றும், பஞ்சார்ணாநாம் து பஞ்சாநாம் வர்க்காணாம் பரமேச்வர: ஸம்ஸ்தித: காதிமாந்தாநாம் தத்த்வாத்மத்வேந ஸர்வதா என்றும், பூதாநி ச கவர்க்கேண சவர்க்கேணேந்த்ரியாணி ச டவர்க்கேண தவர்க்கேண ஜ்ஞாநகந்தாதயஸ்ததா மந: பகாரேணைவோக்தம் பகாரேண த்வஹம்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந் ப்ரக்ருதிருச்யதே ஆத்மா து ஸ மகாரோயம் பஞ்சவிம்ச: ப்ரகீர்த்தித: என்றும் தத்த்வஸாகரஸம்ஹிதாதிகளிலே பஞ்சவிம்சதி தத்த்வங்களுக்கும் ககாரம் முதலான இருபத்தைந்து அக்ஷரங்களும் வாசகங்களாக வகுத்துச் சொல்லுகையாலே ஸித்தம். இத்தால் ஜடத்வாசேதநத்வாதி தோஷாச்ரயங்களான இருபத்தினாலு தத்துவங்களைக் காட்டிலும், ஸர்வகாரணமாகவும், ஸர்வரக்ஷகனாகவும், ஸர்வசேஷியாகவும் ப்ரதமாக்ஷரத்தில் தோற்றின ஷட் விம்சகனிற் காட்டிலும் ஜீவாத்மாவுக்கு வேறுபாடு ஸித்தித்தது. இத்திருமந்த்ரத்தில் மகாரங்களும் நாரசப்தமும் நிஷ்கர்ஷ விவக்ஷையாலே விசேஷணமாத்ரபரங்கள்.
– மூன்றாவது எழுத்தான “ம” என்பது ஜீவாத்மாவை மட்டுமே குறிக்கவில்லை, ஸர்வேச்வரனுக்கு அடிமையாக உள்ள சேதந அசேதநங்கள் அனைத்தையுமே குறிக்கிறது. ஆனாலும், “ம” என்பது குறிப்பாக ஜீவாத்மாவைக் காட்டுகிறது என்பதைக் கீழே உள்ள வரிகளில் காண்க: மகாரம் ஜீவபூதம் து சரீரே வ்யாபகம் ந்யஸேத் – ஜீவனைக் குறிக்கும் “ம” என்னும் எழுத்து மூலம் வ்யாபகந்யாஸம் செய்யவேண்டும். தத்துவஸாகரஸம்ஹிதை - பஞ்சார்ணாநாம் து பஞ்சாநாம் வர்க்காணாம் பரமேச்வர: ஸம்ஸ்தித: காதிமாந்தாநாம் தத்த்வாத்மத்வேந ஸர்வதா – ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள முதல் “க” தொடங்கி “ம” முடிய உள்ள இருபத்து ஐந்து (ஐந்து வரிசைகள் X ஐந்து எழுத்துக்கள் = 25) எழுத்துக்களும், இருபத்து ஐந்து தத்துவங்களைக் குறிக்கின்றன. இருபத்து ஐந்து தத்துவங்களின் ஆத்மாவாக ஸர்வேச்வரன் உள்ளான். பாத்மோத்தரபுராணம் (4-25,26,27) - பூதாநி ச கவர்க்கேண சவர்க்கேணேந்த்ரியாணி ச டவர்க்கேண தவர்க்கேண ஜ்ஞாநகந்தாதயஸ் ததா மந: பகாரேணைவோக்தம் பகாரேண த்வஹம்க்ருதி: பகாரேண பகாரேண மஹாந் ப்ரக்ருதிருச்யதே ஆத்மா து ஸ மகாரோயம் பஞ்சவிம்ச: ப்ரகீர்த்தித: - ஸம்ஸ்க்ருத மொழியில் உள்ள “க” வர்க்கம் மூலம் (ஐந்து எழுத்துக்கள்) பஞ்சபூதங்களும், “ச” வர்க்கம் மூலம் ஐந்து கர்மேந்த்ரியங்களும், “ட” வர்க்கம் மூலம் ஐந்து ஞானேந்த்ரியங்களும், “த” வர்க்கம் மூலம் ஐந்து தந்மாத்ரைகளும், “ப (प)” மூலம் மனமும், “ஃப (फ)” மூலம் அஹங்காரமும், “ப (ब)” மூலம் மஹானும், “ப (भ)” மூலம் ப்ரக்ருதியும் கூறப்படுகின்றன. “ம” மூலம் கூறப்படும் ஜீவாத்மா இருபத்து ஐந்தாவது தத்துவம் ஆகிறான். ஆக இப்படியாக, தத்த்வஸாகரஸம்ஹிதை முதலானவற்றில் இருபத்து ஐந்து தத்துவங்களை உணர்த்துவதாக “க” தொடங்கி உள்ள எழுத்துக்கள் கூறப்பட்டன. இதன் மூலம் ஜடமாகவும் அசேதனமாகவும் இருக்கும் தோஷங்கள் உள்ள இருபத்து நாலு தத்துவங்களைக் காட்டிலும் வேறுபட்டவனாகவும்; அனைத்திற்கும் காரணமாகவும், அனைத்தையும் காப்பவனாகவும், அனைவருக்கும் எஜமானனாகவும், “அ” என்னும் எழுத்தால் கூறப்படுபவனும்,இருபத்து ஆறாவது தத்துவமாக உள்ளவனும் ஆகிய ஸர்வேச்வரனைக் காட்டிலும் வேறுபட்டவனாகவும் ஜீவாத்மா உள்ளான் என்பதும் தேறுகிறது. திருமந்த்ரத்தில் உள்ள “ம” என்னும் எழுத்தும், “நார” என்னும் பகுதியும் வரையறுத்துக் கூறுகின்ற விருப்பம் காரணமாக ஜீவனையே உணர்த்துவதாகும்.