Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 30)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தில் உள்ள “உ” என்னும் எழுத்து ஸர்வேச்வரனுக்கு அல்லாமல் மற்ற யாருக்கும் அடிமை அல்ல என்பதைக் கூறுதல்
மூலம் – இம்மத்யமாக்ஷரம் ச்ரௌதப்ரயோகத்தாலே அவதாரணபரமானபோது இத்தம்பாதிகளையொழிந்தார்க்கு நிருபாதிகசேஷம் என்று சங்கியாமைக்காக அந்யயோக வ்யவச்சேதம் இங்கே சாப்தம். இத்தாலே அந்யரைப் பற்ற சேஷத்வம் ஸ்வரூப ப்ராப்தமன்று என்னுமிடத்தைச் சொல்லுகையாலே யதாவஸ்திதாமஜ்ஞாநம் உடையவனுக்குத் ததீயபர்யந்தமாக தேவதாந்தர ஸ்பர்சம் நிவ்ருத்தமாயிற்று. பகவதபிமதமான பாகவத சேஷத்வத்தாலே அந்யசேஷத்வதோஷம் வாராதென்னுமிடம் புருஷார்த்த காஷ்டையிலே சொன்னோம். இப்படி அந்யயோக வ்யவச்சேதம் சப்தமாகப் பெற்றால் அயோக வ்யவச்சேதமும் காலஸங்கோசகம் இல்லாமையாலே ஸித்தம். இச் சேஷத்வ அயோக வ்யவச்சேதத்தாலே ஈச்வரனுக்கு ப்ருதக்ஸித்தி அநர்ஹ விசேஷமாய்த் தோற்றின சேதந த்ரவ்யத்துக்கும் அசித்துக்குப் போலே சரீரத்வம் ப்ரகாசிதம்.
– ப்ரணவத்தின் நடு எழுத்தான “ம” என்பது, வேதங்களில் ப்ரயோகிக்கும் பொருளான “மற்றொன்றின் தொடர்பை அறுத்தல்” என்னும் பொருளில் கொள்ளப்பட்டால், ஜீவாத்மாவுக்கு மற்ற தேவதைகளுடன் இயற்கையாகவே தொடர்பு உள்ளதோ என்னும் ஐயத்தை நீக்குவதாகவே அமைகிறது; இந்த சந்தேக நீக்கம் என்பது அந்த எழுத்தின் மூலம் மட்டுமே உண்டாகிறது. அந்த எழுத்தானது, ஸர்வேச்வரனுக்கு அல்லாமல் மற்ற யாருக்கும் அடிமையாக இருத்தல் என்பது ஜீவனுக்கு இயல்பாகவே அமைந்தது அல்ல என்பதைக் கூறுவதால், தன்னுடைய ஸ்வரூபத்தைக் குறித்த ஞானம் உள்ள ஒருவனுக்கு மற்ற தேவதைகளுடனான தொடர்பு இருக்கக்கூடாது என்பது மட்டும் அல்லாமல், அந்த மற்ற தேவதைகளுடைய அடியார்களுடனும் தொடர்பு இருத்தல் ஆகாது என்பதை உணர்த்துகிறது. புருஷார்த்த காஷ்டாதிகாரத்தில், பாகவதர்களுக்கு அடிமையாக இருத்தல் என்பது பகவானுக்கு மகிழ்வை ஏற்படுத்துவதாகும் என்று கூறப்பட்டதால், பகவான் அல்லாமல் மற்றவர்களுக்கு (பாகவதர்களுக்கு) அடிமையாக இருத்தல் என்பதில் எந்தவிதமான தோஷமும் உண்டாகாது. இந்த “உ” என்னும் எழுத்து மூலம் மற்றவர்களுக்கு அடிமையாக இருக்கும் தன்மை விலக்கப்படுகிறது என்று கூறும்போது, ஸர்வேச்வரனுக்கு அடிமை அல்லாமல் உள்ள நிலையும் விலக்கப்படுகிறது. இப்படியாக ஜீவனுக்கு அடிமைத்தனம் என்பது விலக்கப்படாமல் உள்ளதால், இத்தகைய சேதநவஸ்துவானது ஸர்வேச்வரனிடமிருந்து பிரிக்க இயலாத ஒரு விசேஷணமாக (அல்லது தனித்து இருக்கக் கூடிய தகுதி அற்றதான விசேஷணமாக) உள்ளது என்றாகிறது; ஆகவே அசேதங்கள் எவ்விதம் அவனுடைய சரீரங்களாகவே உள்ளனவோ, அது போன்றே இந்த சேதன வஸ்துக்களும் அவனுடைய சரீரங்களாகவே உள்ளன என்று தேறுகிறது.