Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 29)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூலம் – இவ்விடத்தில் ச்ருதியில் தோற்றின ஷஷ்டீ த்விவசனம் லுப்தம். இங்கு ஸம்பந்த ஸாமாந்யத்திலே ப்ரவ்ருத்தியையான ஷஷ்டியானது ப்ரமாணஸித்தமாய் அபேக்ஷிதமான விசேஷத்திலே விச்ரமிக்கக் கடவது. தாதர்த்யமாகிற உபயுக்தமான ஸம்பந்த விசேஷம் வ்யக்தமாகைக்காகச் சதுர்த்தி த்விவசனம் ஏறி லோபித்துக் கிடக்கிறதாகவுமாம். அப்போது லுப்தமான சதுர்த்தி த்விவசனத்தினுடைய விவரணமாகிறது இருவருக்கும் தாஸன் என்கிற ச்ருதி. இப்படி ஹவிருத்தேச்ய தேவதா த்வந்த்வத்தில் ஹவிஸ்ஸுபோலே இருவரையும் பற்ற இவ்வாத்மா சேஷமென்னும்போது இங்கு அவதாரணம் அர்த்தம். இவர்களிருவருக்கும் இவ்வாத்மா அநந்யார்ஹ நிருபாதிக சேஷம் என்றதாயிற்று.
– ப்ரணவத்தில், காணப்படுவதான ஆறாம்வேற்றுமை இருமை என்பது மறைமுகமாக உள்ளது. பொதுவாக உறவைக் குறிப்பிடுவதான ஆறாம் வேற்றுமை என்பது, ப்ரணவத்தில் சேஷனுக்கும் சேஷிக்கும் இடையே உள்ள பந்தத்தைக் கூறுவதாக உள்ளது. அல்லது ஆறாம்வேற்றுமை இருமை மூலம், அவர்கள் இருவருக்காக மட்டுமே ஜீவாத்மா உள்ளான் என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டது எனலாம். “இருவருக்கும் அவிர்ப்பாகம் போன்று” என்று மேலே கூறியதை நோக்கினால், மறைமுகமான இருமை வசனத்தை உணரலாம். ப்ரணவத்தில் உள்ள “உ” என்பது லக்ஷ்மியைக் குறிப்பதாகவும், ஜீவாத்மா இருவருக்கும் தாஸன் என்றும் கொண்டால், “உ” என்பதன் மூலம் “இருவருக்கு மட்டும்” என்பது நேரடியாக உணர்த்தப்படவில்லை என்றாலும், இந்த இடத்தின் பொருளை நோக்கும்போது தெளிவாகிறது. ஆகவே ஜீவாத்மா இயல்பாகவே “இந்த இருவருக்கும் அடிமை” என்பதும், மற்ற யாருக்கும் வசப்பட்டவன் அல்லன் என்றும் தேறுகிறது.