Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 25)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

அகாரத்தின் மீது ஏறி மாறியுள்ள நான்காம் வேற்றுமை உருபின் பொருள்

மூலம் – இது ப்ரணவத்தை தநுஸ்ஸாகவும், ஆத்மாவை சரமாகவும், ப்ரஹ்மத்தை இலக்காகவும், ஆத்மஸமர்ப்பணத்தை லக்ஷ்யவேதமாகவும் வகுத்துச் சொல்லுகிற வாக்யத்தாலும் ஸித்தம். இங்கு பரஸமர்ப்பணம் பொருளாம்போது ஸ்வதந்த்ர ப்ரணவத்திற்கண்ட சதுர்த்தியிற்படியே இச்சதுர்த்திக்கும் அர்த்தமாகக் கடவது. இங்கு ப்ரணவம் பரசேஷதைகரஸ ஸ்வரூப ப்ரதிபாதநபரமான பொருளில் இச்சதுர்த்தீ தாதர்த்யத்தை விவக்ஷிக்கையாலே ஆத்ம பரமாத்மாக்களுடைய சேஷசேஷிபாவம் ப்ரகாச்யமாகையால் நிருபாதிக ஸர்வசேஷியான ஈச்வரனைப் பற்றத் தான் நிருபாதிக சேஷமானபடி அநுஸந்தேயம். “த்வம் மே” என்று ஸ்வாமியான ஸர்வேவரன் தொடர்ந்து பிடித்தாலும், “அஹம் மே” என்று திமிறப் பண்ணும் அஹங்கார விசேஷத்தாலே அஸத்கல்பனான இஜ்ஜீவாத்மாவை சேஷத்வாநுஸந்தாநம் உஜ்ஜீவிப்பிக்கிற தாகையாலே இதின் ப்ராதாந்யம் தோற்றுகைக்காக தர்மிக்கு முன்னே சேஷியோடே ஸம்பந்தத்தைச் சொல்லிற்று. நிச்சிதே பரசேஷத்வே சேஷம் ஸம்பரிபூர்யதே அநிச்சிதே புநஸ்தஸ்மிந் அந்யத் ஸர்வமஸத்ஸமம்

– இந்தக் கருத்தானது, முண்டக உபநிஷத்தில் (2-2-4) – ப்ரணவோ தநு: சரோ ஹி ஆத்மா ப்ரஹ்ம தல்லக்ஷ்யமுச்யதே – என்பதான ப்ரணவத்தை வில்லாகவும், ஆத்மாவை அம்பாகவும், ப்ரஹ்மத்தை எய்யப்படவேண்டிய இலக்காகவும், மற்ற விஷயங்களில் ஈடுபடாமல் இருத்தல் என்பது குறியை அடித்தலாகவும் கூறப்பட்ட வாக்கியம் மூலமும் தெளிவாகிறது. திருமந்த்ரத்தில் உள்ள ப்ரணவத்தின் மூலம் ஆத்மசமர்ப்பணம் உணர்த்தப்படும்போது, ப்ரணவமானது தனி மந்த்ரமாக உள்ளபோது அதில் காணப்படும் (அகாரத்தில் காணப்படும்) நான்காம் வேற்றுமை என்பது போன்றே திருமந்த்ரத்திலும் கொள்ளவேண்டும். மாறாக ப்ரணவம் என்பது அனைத்திற்கும் இயல்பான எஜமானனாக உள்ள ஸர்வேச்வரனின் பொருட்டு உள்ள ஜீவாத்மாவின் ஸ்வரூபத்தை உணர்த்துவதாக உள்ளது என்று பொருள் கொண்டால், ப்ரணவத்தின் நான்காம் வேற்றுமையானது, “பிறருடைய பயனையே தனது பயனாகக் கொள்ளுகை” என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆகவே ஜீவாத்மாவுக்கும் பரமாத்மாவுக்கும் இடையே இயல்பாகவே உள்ளதான அடிமை – எஜமானன் என்னும் உறவையே அது உணர்த்துகிறது. ஆகவே ஸர்வேச்வரன் நமக்கு இயற்கையாகவே எஜமானன் என்றும், நாம் அவனுக்கு இயற்கையாகவே அடிமைகள் என்றும் உணரவேண்டும். ஸர்வேச்வரன் ஜீவனிடம், “த்வம் மே – நீ எனக்கு உரியவன்” என்று கூறி பிடிக்க முயலும்போது, ஜீவாத்மா, “அஹம் மே – நான் எனக்கே உரியவன்” என்று கூறி அகல முயல்கிறான். ஆகவே, “நாம் ஸர்வேச்வரனுக்கு அடிமை” என்னும் எண்ணம் மட்டுமே ஜீவனை நிலை நிறுத்தும் என்றும், அல்லது ஜீவாத்மாவின் இருப்பு என்பது இல்லாமல் ஆகும் என்றும் உணரவேண்டும். இத்தகைய உண்மையின் முக்கியத்வத்தை உணர்த்தும் பொருட்டே, ப்ரணவத்தில் ஜீவாத்மாவைக் கூறும் “ம” என்பதற்கு முன்பாகவே, இந்த உறவை உணர்த்துவதான “அ” அமைக்கப்பட்டது.