Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 24)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

அகாரத்தின் மீது ஏறி மாறியுள்ள நான்காம் வேற்றுமை உருபின் பொருள்

மூலம் – இங்கு ப்ரதமாக்ஷரம் சதுர்த்யேகவசநாந்தமாய் விபக்திலோபம் பிறந்து கிடக்கிறது. அது எங்ஙனேயென்னில் – பரமாத்மாவுக்கு ஸ்வாத்மாவை ஸமர்ப்பிக்க விதிக்கிறவிடத்திலே ப்ரணவத்தை மந்த்ரமாக விதிக்கையாலும், இதுக்கு அநுஷ்டேயார்த்த ப்ரகாசம் ப்ராப்தமாகையாலும், இதில் ஸமர்ப்பணீயனான ஆத்மா த்ருதீயாக்ஷரத்திலே ப்ரகாசிக்கையாலும் இதுக்கு உத்தேச்யமான பரப்ரஹ்மம் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதியாலே தோற்றுகையாலும், உத்தேச்யகாரகத்தையும் ஸமர்ப்பணீய வஸ்துவையும் ஸமாநாதிகரித்துப் ப்ரயோகிக்கை உசிதமல்லாமையாலும், உத்தேச்யகாரகத்துக்கு அநுரூபமான சதுர்த்திவிபக்தியை இவ்விடத்திலே கொள்ளப் ப்ராப்தம். ப்ரதம த்ருதீயாக்ஷரங்களை ஸமாநாதிகரணங்களாகக் கொண்டு ஜீவ பரமாத்மாக்களுடைய ஸ்வரூபைக்யமிங்கே சொல்லப்படுகிறதென்னும் குத்ருஷ்டி பக்ஷத்துக்கு பஹுப்ரமாணவிரோதமும் ஸமபிவ்யாஹ்ருத நமச்சப்த நாராயணசப்த சதுர்த்திகளுடைய ஸ்வரஸார்த்த விரோதமும் வரும்.

– இங்கு ப்ரணவத்தின் முதல் எழுத்தாகிய “அ” என்பதன் மேல் நான்காம் வேற்றுமை உருபு (நான்காம் வேற்றுமை என்பது – இதற்காக, அதற்காக என்னும் கருத்து உணர்த்துவதாகும்) ஏறி, பின்னர் அழிகிறது. இதன் காரணங்கள் கீழே உள்ளன: பரமாத்மாவிடம் ஜீவாத்மாவை சமர்ப்பணம் செய்யும் இடத்தில், தைத்திரீய உபநிஷத் ப்ரணவத்தை முக்கியமான மந்த்ரமாக உரைக்கிறது. அந்த மந்த்ரம் என்ன செய்யவேண்டும் என்பதைத் தெளிவாக வலியுறுத்துகிறது சமர்ப்பணம் செய்யப்படுகின்ற ஜீவாத்மா மூன்றாவது எழுத்தால் (ஓம் என்பதில் உள்ள ம) கூறப்படுகிறது; எந்த ஒரு பரமாத்மாவிற்காக சமர்ப்பிக்கப்படுகிறதோ, அந்தப் பரமாத்மா முதல் எழுத்தால் (அ) கூறப்படுகிறது. சமர்ப்பிக்கப்படும் வஸ்துவும், எந்த வஸ்துவுக்காகச் சமர்ப்பணம் செய்யப்படுகிறதோ அந்த வஸ்துவும் ஒரே வேற்றுமையில் கூறப்படக்கூடாது; ஆகவே எந்த வஸ்துவுக்காகச் சமர்ப்பணம் செய்யப்படுகிறதோ அந்த வஸ்துவைக் குறிக்கும் முதல் எழுத்தான “அ” என்பது நான்காம் வேற்றுமை ஏற்றிக் கூறப்படுவதாகக் கொள்ளவேண்டும். “அ” மற்றும் “ம” ஆகிய இரண்டும் ஒரே வேற்றுமையில் உள்ளதால், அவை ஜீவாத்மா – பரமாத்மா ஐக்யத்தை உரைக்கிறது என்று அத்வைதிகள் கூறுவது அனைத்துவிதமான ப்ரமாணங்களுக்கு முரணான கருத்தாகும். மேலும் இந்தக் கருத்துன்படி, ப்ரணவத்துடன் சேர்த்து உரைக்கப்படும் “நாராயண” மற்றும் “நமோ” என்பதற்கு இயற்கையாக உள்ள பொருளுடன் விரோதம் தோன்றும் (ஆகவே “அ” மற்றும் “ம” ஆகிய இரண்டும் ஒரே வேற்றுமையில் இல்லை எனக்கருத்து).