Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 22)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தில் உள்ள “அ” என்னும் எழுத்து பிராட்டியையும் கூறுதல்
மூலம் – ஸர்வரக்ஷணதீக்ஷிதனானவன் லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்யரூபயா ரக்ஷகா: ஸர்வஸித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே இத்யாதிகளிற்படியே ஸபத்நீகனாக ஸித்தனாயிருக்கையாலே இங்கே ப்ரமாணஸித்த உபயோகவிசேஷமான பத்நீஸம்பந்தம் ஆர்த்தம். இப்படி ஸந்நியோகசிஷ்ட ந்யாயத்தாலே எம்பெருமானைச் சொல்லுமிடம் எங்கும் பிராட்டியையும் சொல்லிற்றாம் என்னுமிடத்தை ததந்தர்பாவாத்த்வாம் ந ப்ருதகபிதத்தே ச்ருதிரபி என்று ஸமர்த்தித்தார்கள். ஆகையால் ஸ்வரூபநிரூபக தர்மங்கள் ஸர்வவித்யைகளிலும் வருகிற கணக்கிலே அவற்றில் ப்ரதாநமான இவ்விசேஷணமும் ஸர்வவித்யைகளிலும் அநுஸந்தேயம். இதுதான் தேவதாந்தர வ்யாவ்ருத்தியையும் பண்ணிக் கொண்டு ஸர்வாதிசாயியான ஸ்வதந்த்ர ஸ்வரூபத்துக்கு நிரூபகமாம். இவனுடைய ஸ்வத: ஸித்தாதிசயங்களான ஸ்வரூப விக்ரஹ விபூதிகள் பாஸ்கரேண ப்ரபா யதா என்னும்படி விசேஷணமாய் நிற்கிற இவளுடைய ஸ்வரூப விக்ரஹ விபூதிகளாலும், லப்தாதிசயங்களாய்க் கொண்டு விளங்கி இருக்குமென்னுமிடம் தேவதா பாரமார்த்ய வேதிகளான மஹர்ஷிகளாலே ப்ரபஞ்சிதம்.
– லக்ஷ்மீதந்த்ரம் (28-14) - லக்ஷ்ம்யா ஸஹ ஹ்ருஷீகேசோ தேவ்யா காருண்யரூபயா ரக்ஷகா: ஸர்வஸித்தாந்தே வேதாந்தே அபி ச கீயதே – கருணையே வடிவான மஹாலக்ஷ்மியை அருகில் வைத்தபடியே அனைத்தையும் ரக்ஷிக்கிறான் என்று அனைத்து ஸித்தாந்தங்களும் வேதாந்தங்களும் உரைக்கின்றன – என்பதற்கு ஏற்றபடி, அனைத்தையும் காக்கவேண்டும் என்னும் உறுதியுடன் உள்ள ஸர்வேச்வரன், அதனைத் தனது பத்னியுடன் சேர்ந்தே செய்கிறான். அவன் தன்னுடைய பத்னியுடன் இவ்விதம் மற்றவற்றைக் காப்பாற்றுவதற்காகக் கொண்டுள்ள ஸம்பந்தம் என்பது, ப்ரமாணங்களின் மூலம் நம்மால் ஊகித்து அறிய இயலும். ஆக ஸந்நியோகசிஷ்ட ந்யாயத்தின் மூலம் (இரண்டும் அவசியம் என்று கூறப்பட்ட பின்னர், ஒரு இடத்தில் அவற்றில் ஒன்று அவசியம் என்று கூறப்பட்டால், அந்த இடத்தில் இரண்டாவதையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்), ஸர்வேச்வரனைக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் பெரிய பிராட்டியாரையும் சேர்த்தே படிக்கவேண்டும் என்பதை, ஸ்ரீகுணரத்னகோசம் (28) - ததந்தர்பாவாத்த்வாம் ந ப்ருதகபிதத்தே ச்ருதிரபி – நீ அவனுடன் எப்போதும் சேர்ந்துள்ள காரணத்தால்தான், வேதங்கள் உன்னைத் தனித்து கூறாமல் இருந்தன – என்பது போன்ற வரிகளில் ஆசார்யர்கள் உரைத்தனர். உபநிஷத்துக்களில் கூறப்படும் அனைத்து வித்யைகளிலும், எங்கெல்லாம் ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம் மற்றும் குணங்கள் குறித்து கூறப்பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் “அவன் மஹாலக்ஷ்மியின் நாயகன்” என்னும் கருத்தைச் சேர்த்தே கொள்ளவேண்டும். இப்படிப்பட்ட “மஹாலக்ஷ்மியின் நாயகன்” என்னும் நிலையே மற்ற தேவதைகளை அண்டாமல் உள்ளதையும், எதனையும் எதிர்பாராமலிருக்கும் அவனுடைய ஸ்வரூபத்தையும் நிரூபிக்கிறது. அவனுடைய ஸ்வரூபம், ஐச்வர்யம், மேன்மைகள் ஆகிய பலவும், இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (21-15) - பாஸ்கரேண ப்ரபா யதா – சூரியனை விட்டு ஒளி பிரியாதது போன்று – என்று கூறுவதற்கு ஏற்ப உள்ளவளான மஹாலக்ஷ்மியின் ஸ்வரூபம், ஐச்வர்யம், மேன்மைகள் ஆகியவற்றால் பெறப்பட்ட மேன்மை உடையனவாகப் பிரகாசிக்கின்றன. இவ்விதமே ஸர்வேச்வரனுடைய ஸ்வரூபம் அறிந்த மஹரிஷிகள் உரைத்தனர்.