Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 19)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

அதற்கு “காத்தல்” என்று பொருள் உள்ளதும்

மூலம் – இத்தாலே காரணவாக்ய ஸித்தமான ஸகல ஜகந்நிமித்தோபாதாந காரணத்வமும் அத்தாலே ஆக்ஷிப்தமான ஸர்வஜ்ஞத்வ ஸர்வசக்தித்வாதி குணவர்க்கமும் இங்கே ஸித்தமாயிற்று. இவ்வக்ஷரம் பகவத்வாசகமென்னுமிடம் “அ நிஷேதே புமாந் விஷ்ணௌ” என்றும், “அகாரோ விஷ்ணு வாசக:” என்றும், “அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதம அபிதாநமபிதததா கிம் நாம மங்கலம் ந க்ருதம்” என்றும் நிகண்டங்களிலும் ப்ரயோகங்களிலும் ப்ரஸித்தம். இது வ்யாகரண வ்யுத்பத்தியாலே ஸர்வேச்வரனைச் சொல்லும்போது ரக்ஷண ப்ரீணநாதிவிஷயமான தாதுவிலே, கர்த்ருவாசியான ப்ரத்யயத்தாலே நிஷ்பந்நமான பதமாய் ஸர்வரக்ஷகத்வாதி விசிஷ்டனாகக் காட்டும். இத்தாது, அநேகார்த்தமேயாகிலும் ரக்ஷணார்த்தத்தில் ப்ரஸித்தி ப்ரகர்ஷத்தாலும், இவ்வர்த்தம் இங்கே அபேக்ஷிதமாகையாலும், இங்கே நாநார்த்தங்கள் அநுஸந்தேயங்களாக ஒரு நிருக்தியில்லாமையாலும் ப்ரதமபடிதமான ரக்ஷணம் சப்தமாய் மற்ற அபேக்ஷிதார்த்தங்கள் இத்தாலே ஆக்ஷிப்தங்களாக அநுஸந்திக்கை உசிதமென்று இவ்வளவே ஆசார்யர்கள் வ்யாக்யானம் பண்ணினார்கள்.

– ஆக இதன் மூலம் ஸர்வேச்வரன் இந்த உலகின் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளான் என்பது தெளிவாகிறது; இதே கருத்து அவனுடைய அனைத்தும் அறிந்த தன்மை மற்றும் அனைத்து சக்தியும் கொண்ட தன்மை முதலானவற்றால் யூகித்து அறியப்படுகிறது. இந்த “அ” என்னும் எழுத்து பகவானைக் குறிக்கும் என்பது கீழே உள்ள நிகண்டுகளாலும், பல அறிஞர்களின் வாக்குகளாலும் தெளிவாகிறது: அ நிஷேதே புமாந் விஷ்ணௌ – அ அன்னும் எழுத்து “இல்லை” என்னும் பொருளையும், விஷ்ணு என்னும் பொருளையும் தருவதாகும். அகாரோ விஷ்ணு வாசக: - “அ” என்னும் எழுத்து விஷ்ணுவைக் குறிக்கும். அ இதி பகவதோ நாராயணஸ்ய ப்ரதம அபிதாநமபிதததா கிம் நாம மங்கலம் ந க்ருதம் – நாராயணனுடைய முதல் பெயராகிய “அ” என்பதை உரைப்பதன் மூலமே மங்களம் செய்யப்பட்டதாகிறது அல்லவோ? மேலும் “அ” என்பது ஸர்வேச்வரனைக் குறிப்பதாகக் கொள்ளும்போது, இலக்கண ரீதியில் நோக்கினாலும், அந்த எழுத்து “ரக்ஷித்தல், மகிழ்வித்தல்” போன்ற பொருளைக் கொடுப்பதான “அவ” என்னும் தாதுவிலிருந்து வந்ததாகிறது; ஆக, இவ்விதம் கொள்ளும்போதும், “அ” என்பது அனைத்தையும் காப்பாற்றுபவனையே குறிப்பதாகிறது. இந்த “அவ” என்னும் தாது பல அர்த்தங்களை அளிப்பதாக உள்ளபோதிலும், “காத்தல்” என்னும் அர்த்தமே மிகவும் சிறப்பாக உள்ளதாகும். மேலும் இந்த அர்த்தமே இங்கு பொருந்துவதாக உள்ளது. இந்தத் தாதுவுக்கு பலவிதமான அர்த்தங்கள் இருப்பதற்கு எந்தவிதமான வரையறையும், ப்ரமாணங்களும் இல்லை. ஆகவே இலக்கணத்தில் கூறப்படுவதும், சிறப்பானதும் ஆகிய “காத்தல்” என்பதே பொருந்துகிறது; மற்ற அர்த்தங்கள் அனைத்தும் இந்த முதன்மையான அர்த்தத்தைத் தழுவி உள்ளன என்றே கொள்ளவேண்டும். இதனால்தான் நம்முடைய ஆசார்யர்கள் இந்த “அவ” என்னும் தாதுவுக்கு “காப்பாற்றுபவன்” என்னும் அர்த்தத்தை முதன்மையாகக் கொண்டனர்.