Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 18)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

அதற்கு “காத்தல்” என்று பொருள் உள்ளதும்

மூலம் – இவ்வக்ஷரங்கள் இவ்வர்த்தங்களைச் சொல்லுகிறபடி எங்ஙனேயென்னில்: அஷ்டாக்ஷர சரீராங்க ப்ரணவாத்யக்ஷரேண து அகாரேணாகிலாதார: பரமாத்மா அபிகீயதே ஸமஸ்த சப்த மூலத்வாந் அகாரஸ்ய ஸ்வபாவத: ஸமஸ்தவாச்யமூலத்வாத் ப்ரஹ்மணே அபி ஸ்வபாவத: வாச்ய வாசக ஸம்பந்த: தயோரர்த்தாத் ப்ரதீயதே என்று ஸ்ரீவாமநபுராண வசநத்தாலே ஸர்வவாசகஜாத ப்ரக்ருதியான ப்ரதமாக்ஷரத்துக்கு ஸர்வவாச்யஜாத ப்ரக்ருதியான நாராயணன் வாச்யன் என்று ப்ரஸித்தமான அர்த்தத்தை வேதார்த்தஸங்க்ரத்திலே அருளிச் செய்தார்.

– ப்ரணவத்தில் உள்ள எழுத்துக்கள் இவ்விதமாக பொருள் தருகின்றன என்று எவ்விதம் கூறப்பட்டது என்றால் ஸ்ரீவாமநபுராணத்தில் - அஷ்டாக்ஷர சரீராங்க ப்ரணவாத்யக்ஷரேண து அகாரேணாகிலாதார: பரமாத்மா அபிகீயதே ஸமஸ்த சப்த மூலத்வாந் அகாரஸ்ய ஸ்வபாவத: ஸமஸ்தவாச்யமூலத்வாத் ப்ரஹ்மணே அபி ஸ்வபாவத: வாச்ய வாசக ஸம்பந்த: தயோரர்த்தாத் ப்ரதீயதே – அஷ்டாக்ஷரம் என்னும் சரீரத்திற்கு ஓர் அங்கமாக ப்ரணவம் உள்ளது; அதன் முதல் எழுத்தான “அ” என்பதன் மூலம், அனைத்திற்கும் ஆதாரமாக உள்ள ஸர்வேச்வரன் கூறப்படுகிறான். அனைத்து சொற்களுக்கும் “அ” என்பது இயல்பாகவே காரணமாக உள்ளதாலும், அந்தச் சொற்களால் கூறப்படும் அனைத்து வஸ்துக்களுக்கும் ஸர்வேச்வரனே காரணமாக உள்ளதாலும், “அ” என்பது அவனையே கூறுகிறது; ஆகவே அவன்தான் அகாரத்தால் கூறப்படுபவன். இவ்விதமாக உள்ள தொடர்பு என்பது அகாரத்துக்கும், ஸர்வேச்வரனுக்கும் ஏற்றதாக உள்ளது – என்றது காண்க. இதன் மூலம் அனைத்து வஸ்துக்களையும் குறிக்கும் சொற்கள் அனைத்திற்கும் முதல் எழுத்தான “அ” என்பதால் கூறப்படுபவன், அந்தச் சொற்கள் மூலமாக அறியப்படும் அனைத்து வஸ்துக்களுக்கும் காரணமான நாராயணனே ஆவான் என்னும் அர்த்தத்தை இந்த வாமனபுராண வாக்கியங்கள் கூறுவதை ஸ்வாமி எம்பெருமானார் தன்னுடைய வேதார்த்தஸங்க்ரத்தில் அருளிச்செய்தார்.