Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 14)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
ப்ரணவத்தின் பெருமை மற்றும் பலவிதமான அர்த்தங்களும்
மூலம் – ப்ரணவம் ஸ்வதந்த்ரமானபோது ஏகமாத்ரம் த்விமாத்ரம் த்ரிமாத்ரம் ஸார்த்தத்ரிமாத்ரமென்றாற்போலே பல ப்ரகாரமாய் அர்த்தங்களும் அப்படியே கார்ய காரண அவஸ்த பரமாத்மவாசகத்வாதி ப்ரக்ருதியையாலே பலவகைப்பட்டிருக்கும். வ்யாபக மந்த்ரங்களிலும் ப்ரணவத்தைப் பரமாத்மப்ரதாநமாகவும் சில சாஸ்த்ரங்கள் சொல்லும்.
– இத்தகைய ப்ரணவத்தைத் தனித்து ஒரு மந்த்ரமாக உச்சரிக்கும்போது அதனை ஒன்று, இரண்டு, மூன்று அல்லது மூன்றரை மாத்திரை அளவுகளில் உச்சரிக்கலாம் (ஒரு மாத்திரை என்றால் ஒரு விநாடியாகும்). அந்தந்த மாத்திரை அளவுகளுக்கு ஏற்ப ப்ரஹ்மத்தைக் கார்யமாகவும், காரணமாகவும் கொள்வர் (ப்ரணவம் என்பது ப்ரஹ்மத்தைக் குறிப்பதாகும். இது ஒரு மாத்திரை அளவில் உச்சரிக்கப்படும்போது, கார்யரூபத்தில் உள்ள பூலோகத்தைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் கூறுவதாக உள்ளது. இரண்டு மாத்திரை அளவில் உச்சரிக்கப்படும்போது, கார்யரூபத்தில் உள்ள அந்தரிக்ஷ லோகத்தைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் கூறுவதாக உள்ளது. மூன்று மாத்திரை அளவில் உச்சரிக்கப்படும்போது, கார்யரூபத்தில் உள்ள ஸ்வர்க்க லோகத்தைச் சரீரமாகக் கொண்ட ப்ரஹ்மத்தைக் கூறுவதாக உள்ளது. மூன்றரை மாத்திரை அளவில் உச்சரிக்கப்படும்போது, காரணரூபத்தில் உள்ள ப்ரஹ்மத்தைக் கூறுவதாக உள்ளது – அதாவது பரவாஸுதேவ ரூபம்). ஒரு சில சாஸ்த்ரங்களில் - ப்ரணவமானது மூன்று வ்யாபக மந்த்ரங்களின் (நமோ விஷ்ணவே, நமோ நாராயணாய, நமோ பகவதே வாஸுதேவாய) முன்பாக வரும்போது, அதனை ஒரே அக்ஷரமாக (அதாவது அ, உ, ம என்று பிரிக்காமல்) கொண்டு, அப்போது அது ப்ரஹ்மத்தை உணர்த்துவதாகக் கொள்க – என்று கூறப்படுகிறது (இவ்விதம் கொண்டால்: அகாரம் = ரிக்வேதம், உகாரம் = யஜுர்வேதம், மகாரம் = ஸாமவேதம், மகாரத்தின் மேலே உள்ள புள்ளி = அதர்வணவேதம் என்று கொள்ளப்பட்டு, இவற்றால் கூறப்படும் பரமாத்மாவை அந்த ஒற்றை எழுத்து உணர்த்துகிறது என்பர்).