Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 13)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தில் அனைவருக்கும் உள்ள அதிகாரமும் வரையறையும்
மூலம் – ப்ரணவமொழிந்தாலும் அது கூடினாலுமுள்ள பலம் இவ்வதிகாரிகளுக்கு உண்டென்னுமிடம்: கிம் தத்ர பஹுபிர்மந்த்ரை: கிம் தத்ர பஹுபிர்வ்ரதை: நமோ நாராயணாயேதி மந்த்ர: ஸர்வார்த்தஸாதக: இத்யாதிகளாலே ஸித்தம். இப்படி ப்ரணவமொழிய அஷ்டாக்ஷரமானபோது ப்ரணவத்தில் அர்த்தமெல்லாம் இப் ப்ரணவப்ரதிச்சந்தமாக சாஸ்த்ரம் வகுத்த அக்ஷரத்திலே ப்ரதமாக்ஷரம் ஸர்வஸங்க்ரஹமான கணக்கிலே சுருங்க அநுஸந்தேயம். மத்யமாக்ஷரத்தில் பொருளும் அர்த்தஸித்தமாம். இதில் த்ருதீயாக்ஷரத்தில் சொல்லுகிற ஜ்ஞாத்ருத்வாதிகளும் நமஸ்ஸில் த்விதீயாக்ஷரத்தில் ப்ரக்ருதியாலே அநுஸந்தேயம்.
– திருமந்த்ரத்தை ஜபிக்கும்போது ப்ரணவத்தை நீக்கி உச்சரித்தாலும், அதனுடன் சேர்த்து உச்சரித்தாலும் அதனால் பலன் நிச்சயமாக உண்டாகும் என்பதை நாரதீயகல்பம் (1-41) - கிம் தத்ர பஹுபிர்மந்த்ரை: கிம் தத்ர பஹுபிர்வ்ரதை: நமோ நாராயணாயேதி மந்த்ர: ஸர்வார்த்தஸாதக: - தேவையான பலனை அடைவதற்கு பல மந்த்ரங்களால் என்ன பயன் உள்ளது? பல விரதங்களால் என்ன பயன் உள்ளது? “நமோ நாராயணாய” என்னும் மந்த்ரம் மட்டுமே அனைத்து பலன்களையும் அளிக்கவல்லதாக உள்ளது – என்றது காண்க. இவ்விதம் ப்ரணவத்திற்குப் பதிலாக “அம்” என்று திருமந்த்ரத்தில் உச்சரிக்கும்போது, அதில் ப்ரணவத்தால் கூறப்படும் அனைத்து பொருள்களும் அடங்கும்; காரணம் “அ” என்னும் எழுத்தானது அனைத்தையும் சுருக்கமாக உரைக்கவல்லது என்று சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. ப்ரணவத்தின் நடு எழுத்தான “உ” என்பதன் பொருளான “மட்டுமே” என்பது நேரடியாக நம்மால் உணர இயலும். ப்ரணவத்தின் இறுதி எழுத்தான “ம்” என்பதன் பொருளான “ஞானம் உடையவனாதல்” போன்ற அர்த்தங்கள், “நமோ” என்பதில் உள்ள இரண்டாவது அக்ஷரம் மூலம் (அதாவது – “ம்”) என்பதால் வெளிப்படுகிறது.