Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 11)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
திருமந்த்ரத்தில் அனைவருக்கும் உள்ள அதிகாரமும் வரையறையும்
மூலம் – இது ப்ரணவ சதுர்த்திகளையொழிந்தபோது ஸர்வாதிகாரம் என்னுமிடம் ஸ்ரீவராஹ புராணத்தில் கைசிகத்வாதசீ மாஹாத்ம்யத்திலே நமோ நாராயணேத்யுக்த்வா ச்வபாக: புநராகமத் என்கிற வசநத்தாலே காட்டப்பட்டது. இவ்வர்த்தம் “நாமம் சொல்லில் நமோ நாராயணமே” என்றும், “நன் மாலை கொண்டு நமோ நாரயணா” என்றும், “நாவாயிலுண்டே நமோ நாராயணாவென்று ஓவாதுரைக்கும் உரையுண்டே” என்றும் சொல்லுகிற பாசுரங்களாலும் ப்ரஸித்தம். இது ப்ராஹ்மணாதிகளுக்கு அதீதமான க்ரமத்திலே ப்ரணவத்தோடே கூட அஷ்டாக்ஷரமாயிருக்கும்.
– திருமந்த்ரத்தில் முதலில் உள்ள ப்ரணவம் (ஓங்காரம்) மற்றும் இறுதியில் உள்ள “ஆய” என்னும் நான்காம் வேற்றுமை உருபு ஆகிய இரண்டையும் நீக்கினால், இந்த மந்த்ரத்தை அனைவரும் உச்சரிக்கலாம் என்பதை, ஸ்ரீவராஹபுராணத்தில் உள்ள கைசிக த்வாதசீ மாஹாத்ம்யத்தில் நமோ நாராயணேத்யுக்த்வா ச்வபாக: புநராகமத் – “நமோ நாராயணா” என்று கூறியபடி நாய் மாமிஸம் உட்கொள்ளும் தாழ்ந்த பிறவியில் வந்த நம்பாடுவான் மீண்டும் வந்தான் – என்ற வரி மூலம் அறியலாம். இதே கருத்து கீழே உள்ள பாசுரங்களில் காணப்படுகிறது: பெரியதிருமொழி (6-10-1) - நாமம் சொல்லில் நமோ நாராயணமே – ஸர்வேச்வரனுடைய திருநாமத்தை உச்சரிக்கும்போது “நமோ நாராயணா” என்று கூறவேண்டும். முதல்திருவந்தாதி (27) - நன் மாலை கொண்டு நமோ நாரயணா – “நமோ நாராயணா” என்னும் சிறந்த மாலையைக் கொண்டு. முதல்திருவந்தாதி (95) - நாவாயிலுண்டே நமோ நாராயணாவென்று ஓவாதுரைக்கும் உரையுண்டே – வாயில் நாக்கும், இடைவிடாமல் உரைக்கும் நமோ நாராயணா என்னும் மந்த்ரமும் உள்ளது அல்லவா அந்தணர்களுக்கு இந்தத் திருமந்த்ரமானது ஓதப்பட்ட முறையில், ப்ரணவத்துடன் சேர்ந்து எட்டு எழுத்துடைய மந்த்ரமாக உள்ளது.