Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 10)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தின் பெருமைகள்

மூலம் – ஆழ்வார்களும் “நின் திருவெட்டெழுத்தும் கற்று” என்றும், “எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானமாளவே” என்றும், “எட்டெழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானமாளவே” என்றும், “நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய” என்றும், “நல்வகையால் நமோ நாராயணா” என்றும் திருமந்த்ரத்தையே விரும்பிப் போந்தார்கள். ருஷிகளும் பஹவோ ஹி மஹாத்மநோ முநய: ஸநகாதய: அஷ்டாக்ஷரம் ஸமாச்ரித்ய தே ஜக்முர்வைஷ்ணவம் பதம் யதா ஸர்வேஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத்பர: ததா ஸர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாக்ஷராத்பர: பூத்வோர்த்வபாஹுரத்ராத்ய ஸத்யபூர்வம் ப்ரவீமி வ: ஹே புத்ரசிஷ்யா: ச்ருணுத ந மந்த்ர: அஷ்டாக்ஷராத்பர: ததர்சிநபரோ நித்யம் தத் பக்தஸ்தம் நபஸ்குரு தத்பக்தா ந விநச்யந்தி ஹ்யஷ்டாக்ஷரபராயணா: ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரைகசரணா வயம் என்றார்கள். இத்திருமந்த்ரத்தை ஸர்வேச்வரன் ஸ்ரீநாரதபகவானையிட்டு ஸ்ரீபுண்டரீகனுக்கு உபதேசிப்பிக்க, அவனும் இதையே பரமஹிதமாகக் கேட்டபடியாலே புண்டரீக: அபி தர்மாத்மா நாராயண பராயண: நமோ நாராயணாயேதி மந்த்ரமஷ்டாக்ஷரம் ஜபந் இத்யாதிகளிற் சொல்லுகிறபடியே இம்மந்த்ரநிஷ்டனாய் முக்தனானான். இம்மந்த்ரத்தைத் திருமங்கையாழ்வாருக்கு ஸர்வேச்வரன் தானே உபதேசித்தான்.

– கீழே உள்ள பல வரிகளின் மூலம் ஆழ்வார்களும் திருமந்த்ரத்தையே பெரிதும் விரும்பினார்கள் என்று அறியலாம்: பெரியதிருமொழி (8-10-3) - நின் திருவெட்டெழுத்தும் கற்று – உனது எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தைக் கற்றுக்கொண்டு திருச்சந்தவிருத்தம் (17) - எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லர் வானமாளவே – எட்டு எழுத்துள்ள திருமந்த்ரத்தை எப்போதும் கூறுபவர்கள் ஸ்ரீவைகுண்டத்தை ஆளும் சக்தி உள்ளவர்கள் ஆவர் திருச்சந்தவிருத்தம் (78) - எட்டெழுத்தும் வாரமாக ஓதுவார்கள் வல்லர் வானமாளவே - எட்டு எழுத்துள்ள திருமந்த்ரத்தை எப்போதும் விருப்பத்துடன் கூறுபவர்கள் ஸ்ரீவைகுண்டத்தை ஆளும் சக்தி உள்ளவர்கள் ஆவர் பெரியாழ்வார் திருமொழி (1-1-4) - நாடும் நகரமும் நன்கறிய நமோ நாராயணாய – நாட்டில் உள்ள அனைவரும் இதன் பெருமையை நன்றாக உணரும்படி “நமோ நாராயணாய” என்று கூறுவீர்களாக பெரியாழ்வார் திருமொழி (1-1-11) - நல்வகையால் நமோ நாராயணா - நமோ நாராயணாய என்னும் திருமந்த்ரத்தை பலமுறை உரைத்து மேலும் பல ரிஷிகளும் கீழே உள்ள வரிகளில் உள்ளது போன்று திருமந்த்ரத்தின் பெருமையை உணர்த்துவது காண்க: நாரதீய கல்பம் (1-16) - பஹவோ ஹி மஹாத்மநோ முநய: ஸநகாதய: அஷ்டாக்ஷரம் ஸமாச்ரித்ய தே ஜக்முர்வைஷ்ணவம் பதம் – ஸநகர் முதலான பல ரிஷிகள் எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தை ஜபித்தபடி இருந்து ஸர்வேச்வரனின் இருப்பிடமான பரமபதம் அடைந்தனர். நாரதீய கல்பம் (1-42) - யதா ஸர்வேஷு தேவேஷு நாஸ்தி நாராயணாத்பர: ததா ஸர்வேஷு மந்த்ரேஷு நாஸ்தி சாஷ்டாக்ஷராத்பர: - அனைத்து தேவர்களுக்குள்ளும் நாராயணனைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் இல்லாதது போன்று, அனைத்து மந்த்ரங்களுக்குள்ளும் எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தைக் காட்டிலும் உயர்ந்தது இல்லை. நரஸிம்ஹபுராணம் (18-32) - பூத்வோர்த்வபாஹுரத்ராத்ய ஸத்யபூர்வம் ப்ரவீமி வ: ஹே புத்ரசிஷ்யா: ச்ருணுத ந மந்த்ர: அஷ்டாக்ஷராத்பர: - புத்திரர்களே! சிஷ்யர்களே! நான் எனது கையை உயர்த்தி ஸத்யம் செய்தபடி கூறுகிறேன், கேளுங்கள், எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தைக் காட்டிலும் உயர்ந்த மந்த்ரம் வேறில்லை. நரஸிம்ஹபுராணம் (18-32) - ததர்சிநபரோ நித்யம் தத் பக்தஸ்தம் நபஸ்குரு தத்பக்தா ந விநச்யந்தி ஹ்யஷ்டாக்ஷரபராயணா: - அனத மந்த்ரம் கொண்டு எப்போதும் அவனைத் துதித்து அர்ச்சனை செய்யுங்கள், அதனைக் கொண்டு அவன் மீது பக்தி செலுத்துங்கள், எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தைக் கொண்டு அவன் மீது பக்தி செய்பவர்கள் என்றும் அழிவதில்லை. நாரதீய கல்பம் (4-70) - ஆஸீநா வா சயாநா வா திஷ்டந்தோ யத்ர குத்ர வா நமோ நாராயணாயேதி மந்த்ரைகசரணா வயம் - அமர்ந்துள்ளபோதும், படுத்துள்ளபோதும், நின்று கொண்டுள்ளபோதும், “நமோ நாராயணாய” என்னும் எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தை மட்டுமே தங்களுடைய உபாயமாகக் கொண்டவர்கள். இந்தத் திருமந்த்ரத்தை ஸர்வேச்வரனாகிய ஸ்ரீமந்நாரயணன் ஸ்ரீநாரத மஹரிஷி மூலமாகப் புண்டரீகனுக்கு உபதேசித்தான். அவனும் அந்த உபதேசம் தனக்கு மிகவும் உயர்ந்த நன்மை அளிக்கவல்லது என்ற உறுதியுடன் கேட்டான். இதனால் அவன், இதிஹாஸ ஸமுச்சயம் (31-124) - புண்டரீக: அபி தர்மாத்மா நாராயண பராயண: நமோ நாராயணாயேதி மந்த்ரமஷ்டாக்ஷரம் ஜபந் – தர்மத்தில் ஆழ்ந்த பற்றுதல் உள்ள புண்டரீகன், தன்னால் அடையப்படவேண்டியவர்களில் மிகவும் உயர்ந்தவன் ஸ்ரீமந்நாராயணன் மட்டுமே என்று எண்ணியவனாக, “நமோ நாராயணாய” என்னும் எட்டு எழுத்து கொண்ட திருமந்த்ரத்தை ஜபித்து, மோக்ஷம் அடைந்தான் – என்னும் வரியில் கூறியபடி முக்தி அடைந்தான். இந்தத் திருமந்த்ரத்தை திருமங்கையாழ்வாருக்கு ஸர்வேச்வரன் நேரடியாகத் தானே உபதேசம் செய்தான்.