Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 9)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரத்தின் பெருமைகள்

மூலம் – இவற்றில் திருமந்த்ரத்தினுடைய ருஷி – சந்தோ – தேவதா – பீஜ – சக்தி – வர்ண – விநியோக – ஸ்தாந – ந்யாஸாதிகள் அவ்வோ கல்பஸம்ப்ரதாயங்களுக்கு ஈடாகக் கண்டு கொள்வது. இத்திருமந்த்ரம் ஆதர்வண கடாத்யுபநிஷத்துக்களிலும், மற்றும் மந்வாதி சாஸ்த்ரங்களிலும், நாராயணாத்மக ஹைரண்யகர்ப்ப நாரதீய போதாயநாதி பஹுவித கல்பங்களிலும் ஸுப்ரஸித்த வைபவமாயிருக்கும். மந்த்ராந்தங்களிற் காட்டில் பகவந் மந்த்ரங்கள் அதிகமானாற் போலவும் அநந்தங்களான பகவந்மந்த்ரங்கள் தம்மில் வ்யாபக த்ரயம் அதிகமானாற் போலவும். மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யாமுத்தமம் பவித்ரம் ச பவித்ராணாம் மூலமந்த்ர: ஸநாதந: என்கையாலே வ்யாபமந்த்ரங்கள் எல்லாவற்றிலும் அதிகமாய், ஸர்வவேத ஸாரமாய், ஸர்வாநிஷ்ட நிவர்த்தநக்ஷமமாய் ஸர்வபுருஷார்த்தங்களுக்கும் ஸாதகமாய், ஸர்வ உபாயங்களுக்கும் உபகாரகமாய், ஸர்வவர்ணங்களுக்கும் தந்தம் அதிகாராநுகுணமாக வைதிகரூபத்தாலும் தாந்த்ரிகரூபத்தாலும் உபஜீவ்யமாய், வ்யாப்ய வ்யாபக கண்டோக்திமத்தாய் ஸர்வமந்த்ர நைரபேக்ஷ்யகரமாய் ஸர்வபகவந் மூர்த்திகளுக்கும் ஸாதாரணமாயிருக்கையாலே ஸர்வாசார்யர்களும் இத்தையே விரும்பிப் போருவார்கள்.

– இந்த மூன்றில், திருமந்த்ரத்தினுடைய ரிஷி, சந்தஸ், தேவதை, பீஜம், சக்தி, வர்ணம், முறை, இடம், அங்கங்கள் முதலானவற்றை அந்தந்த கல்பங்களில் உள்ள ஸம்ப்ரதாயத்திற்கு ஏற்றபடி அறியவேண்டும். திருமந்த்ரத்தின் மேன்மை குறித்து ஆதர்வணம், கட முதலான உபநிஷத்துக்களிலும், மனு முதலான சாஸ்த்ரங்களிலும், நாராயணாத்மகம், ஹைரண்யகர்ப்பம், நாரதீயம், போதாயனம் முதலான பலவிதமான கல்பங்களிலும் கூறப்பட்டுள்ளதை அனைவரும் அறிவர். மற்ற மந்த்ரங்களைக் காட்டிலும் ஸர்வேச்வரனைக் குறித்துள்ள மந்த்ரங்கள் மேன்மையானவை; எண்ணற்ற பகவத் மந்த்ரங்களில் வ்யாபக மந்த்ரங்களான (வ்யாபக மந்த்ரம் = ஸர்வேச்வரன் எங்கும் வ்யாபித்துள்ளான் என்பதை உணர்த்தும் மந்த்ரங்கள்) இந்த மூன்றும் மிகவும் உயர்ந்தவை. நாரதீய கல்பத்தில் (1-11) - மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யாநாம் குஹ்யாமுத்தமம் பவித்ரம் ச பவித்ராணாம் மூலமந்த்ர: ஸநாதந: - அநாதியான மூலமந்த்ரம், அனைத்து மந்த்ரங்களுக்குள் மிகவும் உயர்ந்ததாகும், ரஹஸ்யங்களுக்குள் மிகவும் ரஹஸ்யமானதாகும், தூய்மை அடையச் செய்பவனவற்றுள் மிகவும் தூய்மையானதாகும் – என்று கூறுவது காண்க. ஆக வ்யாபக மந்த்ரங்கள் அனைத்திலும் உயர்ந்ததாகவும், அனைத்து வேதங்களுக்கும் ஸாரமானதாகவும், அனைத்து தீமைகளையும் நீக்கவல்லதாகவும், அனைத்து உயர்ந்த பலன்களையும் அளிக்கும் உபாயமாகவும், அனைத்து உபாயங்களுக்கும் உபாயமாகவும், அனைத்து வர்ணத்தினரும் தங்களுடைய தகுதிக்கு ஏற்றவாறு வைதிகம் மற்றும் தாந்த்ரிக ரூபங்களில் கடைப்பிடிக்க ஏற்றதாகவும், சேதன அசேதன ஈச்வர தத்துவங்களை வெளிப்படுத்தவல்லதாகவும், மற்ற மந்த்ரங்களின் துணை இல்லாமல் தானாகவே அனைத்து பலன்களையும் அளிக்கவல்லதாகவும், அனைத்து ஸர்வேச்வர மூர்த்திகளுக்கும் பொதுவாக உள்ளதாகவும் இருப்பதால் இதனை ஆசார்யர்கள் அனைவரும் பெரிதும் விரும்பிக் கைக்கொள்வர்.