Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 8)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்

திருமந்த்ரம் = தாரகம், சரமச்லோகம் = போஷகம், த்வயம் = போக்யம்

மூலம் – இவை மூன்றும் நமக்கு ஞான அனுஷ்டான பலநிதாநங்களாய்க் கொண்டு தாரக போஷக போக்யங்கள். வ்யக்தம் ஹி பகவாந் தேவ: ஸாக்ஷாந்நாராயண: ஸ்வயம் அஷ்டாக்ஷர ஸ்வரூபேண முகேஷு பரிவர்த்ததே என்கிறபடியே தேசிகஜிஹ்வையில் இருந்து சிஷ்ய ஹ்ருதய குஹாந்தகாரத்தைக் கழித்துப் பரசேஷதைகரஸமான பரிசுத்த ஸ்வரூபத்தை வெளியிட்டு ஸத்தாலாபத்தைப் பண்ணுகையாலே திருமந்த்ரம் தாரகம். சரமோபாயத்திலே ப்ரவர்த்திக்கும்படியான ஞான விசேஷோபசய ஹேதுவாகையாலே ச்ரோதவ்யசேஷமில்லாதபடி உபாயோபதேச பர்யவஸாநமான சரமச்லோகம் போஷகம். ஸக்ருதுச்சாரணத்தாலே பரமபுருஷார்த்த ஹேதுவாய்க்கொண்டு ஸதாநுஸந்தாநத்தாலே க்ருதார்த்தனாக்குகையாலே த்வயம் போக்யம்.

– திருமந்த்ரம், சரமச்லோகம், த்வயம் என்னும் இந்த மூன்று மந்த்ரங்களும் நமக்கு ஞானம், அனுஷ்டானம் மற்றும் பலன்களை அளிப்பதால் இவை முறையே தாரகம் (பேணுதல்), போஷகம் (போஷாக்கு அளித்தல்) மற்றும் போக்யம் (இன்பம் அளித்தல்) என்பதாக உள்ளன. நாரதீயத்தில் (1-32) - வ்யக்தம் ஹி பகவாந் தேவ: ஸாக்ஷாந்நாராயண: ஸ்வயம் அஷ்டாக்ஷர ஸ்வரூபேண முகேஷு பரிவர்த்ததே – பகவான் என்று அனைவராலும் போற்றப்படும் தேவாதிதேவனாகிய நாராயணன், தானாகவே வலிய வந்து, அஷ்டாக்ஷரமான திருமந்த்ரத்தை ஜபிப்பவர்களின் முகத்தில் நிற்கிறான் என்பது உறுதி – என்றது காண்க. ஆக ஆசார்யனுடைய வாக்கிலிருந்து புறப்பட்டு, சிஷ்யனுடைய இதயம் என்னும் குகைக்குள் காணப்படும் அறியாமை முதலான இருட்டுகளை அகற்றி, அவன் ஸர்வேவரனுக்கு மட்டுமே அடிமை என்பதான அவனுடைய ஸ்வரூபத்தை அவனுக்குப் புரியவைத்து, அவனை “இருக்கும் வஸ்து” என்று மாற்றும் பலனை அளிப்பதால், திருமந்த்ரம் அவனுக்குத் தாரகம் (நம்மைப் பேணவல்ல பொருள்கள் தாரகம் ஆகும்) ஆகிறது. ப்ரபத்தி என்னும் உபாயத்தைக் கைக்கொள்வதற்கான ஞானத்தை வளர்த்துக்கொள்ள சரமச்லோகம் உதவுகிறது; இந்த உபாயத்தைக் கூறவல்ல இறுதியான கருத்தைக் கொண்டதாகவும், வேறு எதுவும் அவசியம் இல்லை என்று கூறுவதாகவும் உள்ளதால் சரமச்லோகம் போஷகம் (பால், தயிர் போன்று போஷாக்கு அளிப்பதால் போஷகம்) ஆகிறது. த்வய மந்த்ரமாகிய தன்னை ஒருவன் உச்சரித்தால் மட்டுமே போதுமானது, அவனுக்குத் தேவையான உயர்ந்த புருஷார்த்தம் கொடுப்பதாலும்; தன்னை எப்போதும் உச்சரித்தபடி உள்ளதால் ஆனந்தம் அளிப்பதாலும் த்வயமந்த்ரம் போக்யம் (இன்பம் அளிப்பது) ஆகிறது.