Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 7)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூன்று ரஹஸ்யங்களின் நோக்கம்
மூலம் – இவை மூன்றிலும் தனித்தனியே எல்லா அர்த்தங்களையும் சப்தமாகவும் ஆர்த்தமாகவும் காணலாமாகிலும், ஓரொன்றிலே ஓரொன்றுக்கு நோக்காயிருக்கும். திருமந்த்ரத்தில் ப்ரதமபதத்திலே ப்ரதமாக்ஷரத்திலே ஸம்க்ஷிப்தமான சரண்ய பரதத்வத்தையும், இதில் மத்யம த்ருதீய பதங்களிலே ப்ரதிபந்நமான உபாயோபேயங்களையும் அடைவே விசதமாக்குகிறது த்வயம். இதில் “ப்ரபத்யே” என்கிற பதத்தில் உத்தமனாலே விவக்ஷிதமான அதிகாரி விசேஷத்தையும் அர்த்தஸித்தமான உபாயாந்தர நைரபேக்ஷ்யத்தையும், உபேயத்தில் நம: சப்த ஸம்க்ஷிப்தமான விரோதி நிவ்ருத்த்யம்சத்தையும் வெளியிடுகிறது சரமச்லோகம்.
– இந்த மூன்றுவிதமான கருத்துக்களையும், மூன்று மந்த்ரங்களிலும் நேரடியாகவும், ஆழ்ந்த பொருளாகவும் தனித்தனியே காணலாம்; என்றாலும், ஒவ்வொரு மந்த்ரத்திற்கும் தனித்தனியான குறிக்கோள் உள்ளது. திருமந்த்ரத்தில் உள்ள முதல் சொல்லான “ஓம்” என்பதில் உள்ள “அ” என்னும் அக்ஷரம் அனைவருக்கும் அடைக்கலமாக உள்ள பரம்பொருளைச் சுருக்கமாகக் கூறுகிறது; இதன் நடுப்பதமான “நமோ” மற்றும் மூன்றாவது பதமான “நாராயணாய” ஆகியவை உபாயத்தையும், உபேயத்தையும் கூறுவதாகும். இவற்றின் பொருளை த்வய மந்த்ரம் விரிவாகக் கூறுகிறது. த்வய மந்த்ரத்தில் உள்ள “ப்ரபத்யே” என்பதன் மூலம் அதிகாரியின் விசேஷத்தை நேரடியாகவும், மற்ற உபாயங்கள் ஏதும் அவசியம் இல்லை என்பதை மறைமுகமாகவும், கடைசியாக உள்ள “நம:” என்பதன் மூலம் அதிகாரிக்கு உண்டாகக்கூடிய அனைத்து தடைகளும் நீங்குவதும் கூறப்படுகிறது. த்வயத்தில் கூறப்பட்ட இந்த மூன்றையும் சரமச்லோகம் தெளிவாக்குகிறது.