Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம் (பத்தி 6)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 27.மூலமந்த்ராதிகாரம்
மூன்று ரஹஸ்யங்களின் நோக்கம்
மூலம் – அவற்றில் முற்படத் திருமந்த்ரம் பரசேஷதைகரஸ ஸ்வரூபாதிகளைத் தெளிவித்து அம்முகத்தாலே ஸமஸ்த ப்ரதிபந்தக நிவ்ருத்தி பூர்வக பரமபுருஷார்த்த ப்ராப்தியிலே ருசியையும், த்வரையையும் விளைப்பித்து, உபாயாதிகார பூர்த்தியை உண்டாக்கும். இப்படி அதிகாரியானவனுடைய பலாபேக்ஷாபூர்வக உபாயவிசேஷாநுஷ்டாந ப்ரகாரத்தை த்வயம் விசதமாக ப்ரகாசிப்பிக்கும். இவ்வுபாய விசேஷத்தை விதிக்கிறது சரமச்லோகம்.
– இந்த மூன்று மந்த்ரங்களில் முதலில் திருமந்த்ரம் என்பது, ஸர்வேச்வரனுக்கு அடிமையாக இருத்தலே ஜீவனுடைய ஸ்வரூபம் என்று உணர்த்துகிறது. இதன் பொருட்டு, திருமந்த்ரமானது மோக்ஷம் பெறுவதில் உள்ள அனைத்து இடையூறுகளையும் நீக்குவதன் மூலம் மோக்ஷத்தின் மீது ஒரு ஆசையை உண்டாக்கி, அந்த மோக்ஷத்தை உடனே அடையவேண்டும் என்னும் வேகத்தையும் உண்டாக்கி, அதற்கான உபாயங்களைக் கைக்கொள்வதற்கான தகுதிகளின் நிறைவை உண்டாக்குகிறது. இப்படியாக உள்ள அதிகாரிக்கு, மோக்ஷம் என்னும் புருஷார்த்தத்தின் மீது ஒரு பிடிப்பை உண்டாகி, அதற்கான உபாயத்தை எவ்விதம் கைக்கொள்ளவேண்டும் என்பதை த்வய மந்த்ரம் தெளிவாக உணர்த்துகிறது. இந்த உபாயத்தை சரம ச்லோகம் விதியாக உரைக்கிறது.