Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 20)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
பாகவதர்களுடன் சேர்ந்து வாழவேண்டிய முறை
மூலம் – “ஏக: சாஸ்தா ந த்விதீய: அஸ்தி சாஸ்தா ” என்றும், “ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம்” என்றும், “சாஸ்தா விஷ்ணுரசேஷஸ்ய” என்றும் சொல்லப்படுகிறவன்தானே என்று தெளிந்து, ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதோ மதுஸூதந: ந பத்நாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தாமாம்பஸி இத்யாதிகளைப் பார்த்து நெகிழாதே, இவ்வதிகாரிகள் பக்கலுள்ள குணாம்சத்தை மருபூமியில் தண்ணீர் பெற்றாற்போலே உகந்து, கர்மணா மநஸா வாசா யதபீக்ஷ்ணம் நிஷேவதே ததேவாபஹரத்யேநம் தஸ்மாத் கல்யாணமாசரேத் என்கிறபடியே கரண த்ரயத்தாலும் தான் நல்வழி கைவிடாதே, ஸம்ஸார விஷவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹி அம்ருதோபமே கதாசித் கேசவே பக்தி: தத்பக்தைர்வா ஸமாகம: என்று இங்கிருந்த காலத்துக்கு ப்ரயோஜநமாக எடுத்த “பரமனைப் பயிலுந் திருவுடைய சிறுமாமனிசருடன் சேர்த்தியாகிற சிறிய பெறாப் பேற்றைத் திருவருளாலே பெற்றோ” மென்று க்ருதார்த்தனாய், “திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை” என்று வ்யவஸிதனாய், “ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம்” என்கிறபடியே பரமபதத்தில் பெறப் புகுகிற பரிபூர்ண கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு இங்கே முடி சூடியிருக்க ப்ராப்தம்.
– ஆக கீழே உள்ள பல வரிகளில் கூறப்பட்டுள்ளது போன்று, அனைத்தையும் நியமிப்பவன் ஸர்வேச்வரன் மட்டுமே என்று தெளிவாக உணரவேண்டும்: மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (27-1) - ஏக: சாஸ்தா ந த்விதீய: அஸ்தி சாஸ்தா – அவன் மட்டுமே நியமிப்பவன், இரண்டாவது நியமிப்பவன் என்று யாரும் இல்லை. மநுஸ்ம்ருதி (12-122) - ப்ரசாஸிதாரம் ஸர்வேஷாம் – அனைத்தையும் நியமிப்பவனாக ஸர்வேச்வரனை அறியவேண்டும். ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-17-20) - சாஸ்தா விஷ்ணுரசேஷஸ்ய – அனைவருடைய இதயத்தில் உள்ள விஷ்ணுவே, அனைத்தையும் நியமிக்கிறான். மேலும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (9-11) - ராகாதிதூஷிதே சித்தே நாஸ்பதோ மதுஸூதந: ந பத்நாதி ரதிம் ஹம்ஸ: கதாசித் கர்தாமாம்பஸி – ஆசை முதலானவற்றால் கெடுக்கப்பட்ட மனதில் மதுஸூதனன் ஒருபோதும் வசிப்பதில்லை; அன்னப்பறவை சேறு நிறைந்த நீரைக் கண்டு ஒருபோதும் விருப்பம் கொள்வதில்லை அல்லவோ – என்று கூறும் வரிகளை நன்றாக உணர்ந்து, பாகவதர்களை அவமதிக்காமல் இருத்தல்வேண்டும். மாறாக அவர்களிடம் உள்ள நற்குணங்களைக் காணும்போது, பாலைவனத்தில் சுவையான குடிநீரைப் பெற்றது போன்று மகிழவேண்டும். மஹாபாரதம் உத்யோகபர்வம் (38-56) - கர்மணா மநஸா வாசா யதபீக்ஷ்ணம் நிஷேவதே ததேவாபஹரத்யேநம் தஸ்மாத் கல்யாணமாசரேத் – ஒருவன் சரீரம், மனம், வாக்கு முதலியவற்றால் எந்த ஒரு செயலை அடிக்கடிச் செய்கிறானோ, அந்தச் செயல் அவனைத் தனக்கு அடிமையாக்குகிறது; ஆகவே எப்போதும் நல்லவற்றை மட்டுமே செய்தல்வேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப, மனம் முதலான மூன்றாலும் நல்லவழியைக் கைவிடாமல் இருக்கவேண்டும். மேலும் ஸம்ஸார விஷவ்ருக்ஷஸ்ய த்வே பலே ஹி அம்ருதோபமே கதாசித் கேசவே பக்தி: தத்பக்தைர்வா ஸமாகம: - ஸம்ஸாரம் என்னும் விஷமரத்தில் அமிர்தம் போன்று இரண்டு பழங்கள் உண்டு; அவையாவன ஸர்வேச்வரனிடம் உண்டாகும் பக்தி, பாகவதர்களின் சேர்க்கை – என்றும், திருவாய்மொழி - பரமனைப் பயிலுந் திருவுடைய சிறுமாமனிசருடன் சேர்த்தியாகிற சிறிய பெறாப் பேற்றைத் திருவருளாலே பெற்றோம் – ஸர்வேச்வரனை அடைவதான உயர்ந்த பாக்கியம் உள்ளவரும், உருவத்தால் சிறியவராக இருந்தாலும் அறிவால் உயர்ந்தவரும் ஆகிய பாகவதர்களுடன் சேருதல் என்பதான எளிதில் கிட்டாத பலனை நாம் அடைந்தோம் – என்றும் கூறியது போன்று, பாகவதர்களுடனான ஸம்பந்தம் என்பது இங்கு வாழும் காலத்தில் நமக்குக் கிட்டிய உயர்ந்த பலன் என்று எண்ணவேண்டும். மேலும், திருவிருத்தம் (88) - திருமால் தலைக்கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீவினை என்று கூறியது போன்று ஸர்வேச்வரனால் கைக்கொள்ளப்பட்ட தனக்கு தீவினைகள் வராது என்ற உறுதியுடன் இருக்கவேண்டும். திருவாய்மொழி (10-4-3) - ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் – ஸர்வேச்வரன் என்னைக் காக்கும்போது யாரால் எனக்குச் சேரவேண்டியதைக் குறைக்க இயலும் – என்பதற்கு ஏற்ப, பரமபதத்தில் கிட்ட உள்ள பரிபூர்ண கைங்கர்ய சாம்ராஜ்யத்துக்கு இங்கேயே முடி சூடிக்கொள்கிறோம் என்று எண்ணியபடி இருக்கவேண்டும்.