Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 19)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
ஒரு சில அதிகாரிகளின் நிலை
மூலம் – ஆகையால் பகவத் ப்ரதிகூலர்க்குப் ப்ராதிகூல்ய விசேஷமான ரூப நாம க்ஷேத்ரவாஸ ஸங்கீர்த்தனாதிகள் தஞ்சமாகாது. புண்ய க்ஷேத்ரங்களில் பண்ணும் ப்ரதிகூலாசரணங்கள் மிகவும் பாதகங்களாம் என்னுமிடம் பஹுசாஸ்த்ர ஸித்தம். இதுவும் பகவத் ப்ரபாவம். பகவத் ப்ரவணர்க்கு வ்ருத்ரன் க்ஷத்ரபந்து உள்ளிட்டார்க்குப்போலே ஆநுகூல்யங்கள்தாமே எல்லா தோஷங்களையும் ஒரு விரகாலே போக்கி உத்தாரகங்களாம். ஆன பின்பு ஸ்வஸங்கல்ப நியதமாயிருப்பது ஏதேனுமொரு வ்யாஜத்தாலே ஸர்வேச்வரன் ஸ்வரூப ப்ராப்தமான முக்தைச்வர்யம் கொடுக்க நினைப்பிட்ட அதிகாரிகள் பக்கலுள்ள தோஷங்களுக்குச் செலவு செய்வான்.
– ஆகவே பகவானுக்கு விரோதியாக உள்ளவர்களுக்கு பகவத் ரூபம், பகவானின் திருநாமங்கள், திவ்யதேசங்களில் வசித்தல், திருநாம ஸங்கீர்த்தனம் முதலானவை பயன்படாது. புண்யக்ஷேத்ரங்களில் செய்யப்படுவதான பகவானுக்கு விருப்பம் அற்ற செயல்கள், மிகுந்த தீங்கை உண்டாகும் என்று பல சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. இது ஸர்வேச்வரனுடைய ப்ரபாவம் காரணமாக ஆகும். மாறாக வ்ருத்ரன், க்ஷத்ரபந்து போன்று பகவானிடம் ஆழ்ந்த பக்தி உள்ளவர்கள், ஸர்வேச்வரனுக்கு மகிழ்வை உண்டாக்கும்விதமாக எத்தகைய செயல்களைச் செய்தாலும், அவர்களுடைய அனைத்து தோஷங்களையும் ஏதோ ஒரு வகையில் நீக்க அந்தச் செயல்கள் உதவுகின்றன. ஆகவே பாகவதர்களிடம் ஏதேனும் தோஷம் உள்ளபோதிலும், ஸர்வேச்வரன் தான் எண்ணியுள்ள ஏதேனும் ஒரு விதத்தில், அவர்களுடைய தோஷங்களி நீக்கி, அவர்களுடைய ஸ்வரூபத்தை விளங்கச் செய்வதான முக்தி என்னும் மிகப்பெரிய செல்வத்தை அளிப்பான்; இதற்காக அந்த அதிகாரிகளிடம் உள்ள தோஷங்களை, சிறிய அளவுள்ள தண்டனைகளாலே நீக்குவான்.