Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 18)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

ஒரு சில அதிகாரிகளின் நிலை

மூலம் – இப்படி பகவத்க்ஷேத்ரத்தில் சரீர விச்லேஷாதிகள் மோக்ஷோபகாரகமாம் என்றதுவும் பச்வாதிகளைப் போலேயாகிலும் ப்ராதிகூல்யமில்லாதார்க்கு உபகாரகமாம் என்றபடி. இங்ஙனல்லாதபோது அங்கே பகவத் ப்ராதிகூல்யம் பண்ணப் புகுந்து பட்டவர்களுக்கும் மோக்ஷமுண்டாகப் ப்ரஸங்கிக்கும். துஷ்டேந்த்ரிய வசாச்சித்தம் ந்ருபாம் யத் கல்மஷைர்வ்ருதம் ததந்தகாலே ஸம்சுத்திம் யாதி நாராயணாலயே என்கிற ஸ்ரீஸாத்த்வத வசனமும் க்ஷேத்ர வாஸாதி தத்பரரானார்க்கு சாஸ்த்ர விரோதமில்லாத சப்தாதி ப்ராவண்யத்தாலே முன்பு பகவத் ஸாக்ஷாத்காராதிகள் இல்லையேயாகிலும் அந்திம காலத்திலே தெளிவுண்டாமென்னுமிவ்வளவிலே தத்பரமென்னுமிடம் ப்ரகரணாதி ஸித்தம். யம் யோகிந: ப்ராண வியோக காலே யத்நேந சித்தே விநிவேசயந்தி என்று சொல்லப்படுகிற ஸ்வயத்நாபேக்ஷையற அந்திம காலத்திலே இவர்களுக்குத் தெளிவு வருகிற இது ஏற்றம். இது கேவலம் மதீயயைவ தயயாதி ப்ரபுத்த: என்று ப்ரபந்ந விஷயத்திலும் ப்ரதர்சிதம்.

– பகவான் விருப்பத்துடன் வசிக்கின்ற திவ்யதேசங்களில் உண்டாகும் மரணம் என்பது மோக்ஷத்தை அளிக்க உபகாரமாகும் என்னும் நிலையானது பசு முதலான விலங்குகள் போன்று ஏதும் அறியாதவர்கள் என்றாலும், பகவானிடம் வெறுப்புடன் இல்லாதவர்களுக்கே ஆகும். இவ்விதம் கொள்ளவில்லை என்றால், க்ஷேத்ரங்களில் வசிக்கின்ற பாவம் செய்பவர்களும் மோக்ஷம் போகலாம் என்று ஆகிவிடும். ஸ்ரீஸாத்வத ஸம்ஹிதை (7-120) - துஷ்டேந்த்ரிய வசாச்சித்தம் ந்ருபாம் யத் கல்மஷைர்வ்ருதம் ததந்தகாலே ஸம்சுத்திம் யாதி நாராயணாலயே – கொடுமையான இந்த்ரியங்களால் பீடிக்கப்பட்டு தோஷம் அடைந்த மனம், மரணம் உண்டாகும் காலத்தில் நாராயணன் வசிக்கும் க்ஷேத்ரத்தில் வசிப்பதால் தூய்மை அடைகிறது – முதலான வரிகள், புண்ய க்ஷேத்ரங்களில் வசிப்பவர்கள், சாஸ்த்ரங்களுக்கு விரோதம் உண்டாகாத விதத்தில் உலகில் உள்ள இன்பங்களை அனுபவித்தபடி இருந்து, அதன் காரணமாக பகவத் தரிசனம் உண்டாகாமல் இருந்தபோதிலும், தெளிவை அடைவார்கள் என்பதை உணர்த்துகின்றன. மஹாபாரதம் சாந்திபர்வம் (46-139) - யம் யோகிந: ப்ராண வியோக காலே யத்நேந சித்தே விநிவேசயந்தி – யோகிகள் எந்த ஒரு பகவானை மிகுந்த முயற்சி எடுத்து தங்களுடைய மரண காலத்தில் தங்களுடைய மனதில் நிலை நிறுத்த முயல்கிறார்களோ, அந்தப் பகவானைத் தனது கண்கள் முன்பாகத் தரிசித்தபடி பீஷ்மர் தனது உயிரை விட்டார் – முதலான வரிகளின் மூலம், அந்திம காலத்தில் க்ஷேத்ரத்தில் வசிக்கும் காரணத்தால், தங்களுடைய முயற்சி ஏதும் இல்லாமலேயே உயர்ந்த கதி அடைவர். இந்தக் கருத்து சரணாகதி கத்யத்தில் - கேவலம் மதீயயைவ தயயாதி ப்ரபுத்த: - என்னுடைய கருணை காரணமாக அந்திம காலத்தில் ஞானம் வெளிப்படும் – என்று ப்ரபந்நர்கள் விஷயத்திலும் கூறப்பட்டுள்ளதைக் காணலாம்.