Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 17)

ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்

ஒரு சில அதிகாரிகளின் நிலை

மூலம் – கோப்ய: காமாப்தயாத் கம்ஸோ த்வேஷாச்சைத்யாதயோ ந்ருபா: ஸம்பந்தாத் வ்ருஷ்ணயோ யூயம் ஸ்நேஹாப்தக்த்யா வயம் ப்ரபோ என்கிறபடியே ஏதேனுமொருவகையாலே துவக்குண்டாரும் பிழைப்பரென்றதுவும் யயா கயா ச விதயா ஸம்பந்த: ஸ து பாவந: என்றதுவும் பூர்வஸுக்ருத விசேஷங்களாலே நியதரான அதிகாரி விசேஷங்களைப் பற்றவென்னுமிடம் இவர்களுடைய பூர்வாபர வ்ருத்தாந்தங்கள் சொல்லுகிற புராணாதிகளிலே ப்ரஸித்தம்.

– ஸ்ரீமத்பாகவதம் (7-1-30) - கோப்ய: காமாப்தயாத் கம்ஸோ த்வேஷாச்சைத்யாதயோ ந்ருபா: ஸம்பந்தாத் வ்ருஷ்ணயோ யூயம் ஸ்நேஹாப்தக்த்யா வயம் ப்ரபோ – நாரதர், “யுதிஷ்டிரனே! கோபிகைகள் காமத்தாலும், கம்ஸம் பயத்தாலும், சிசுபாலன் போன்றவர்கள் த்வேஷத்தாலும், நீங்களும் யதுவம்சத்தில் பிறந்தவர்களும் சிநேஹத்தாலும், நாங்கள் பக்தியாலும் மோக்ஷம் அடையலாம்”, என்றது காண்க. ஆனால், ஏதேனும் ஒருவகையில் உயர்ந்த கதி அடைவார்கள் என்றாலும், அவர்கள் முற்பிறவிகளில் ஏதேனும் நற்செயல்கள் செய்திருக்கவேண்டும். இதனை ஸ்ரீரங்க மாஹாத்ம்யம் (8-12) - யயா கயா ச விதயா ஸம்பந்த: ஸ து பாவந: - தோஷங்கள் இல்லாத பகவானுடனான எந்தவிதமான ஸம்பந்தமும் ஒருவனுடைய பாவங்களைப் போக்கும் – என்றது காண்க. இந்த இரண்டு ச்லோகங்களும் கடந்த பிறவிகளில் நற்செயல்கள் செய்த காரணத்தால், சிறப்பான ஒரு அதிகாரம் பெற்றவர்களையே கூறுகிறது என்பதை அறியவேண்டும். கம்ஸன் முதலானவர்களின் பூர்வ ஜன்ம நிகழ்வுகளின் மூலம் இது தெளிவாகிறது.