Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 13)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
பாகவதாபசாரத்தின் கொடுமை
மூலம் – ஸ்ரீபாஷ்யகாரர் அக்ருத்யகரண க்ருத்யகரணங்களோடே பகவதபசாராதிகளைச் சேர எடுத்தது கோபலீவர்த்தந ந்யாயத்தாலே பகவதபசாராதிகள் தீவ்ரங்கள் என்கைக்காக. எல்லாம் பகவதபசாரங்களாயிருக்க, முகபேதங்களை விலக்ஷித்துச் சிலவற்றை இங்கு பாகவதபசாரங்கள் என்கிறது. “யாவை சில அபசாரங்களைப் புறம்பே செய்கிறான்; அப்படிப்பட்டவை தம்மையே பகவத்பாகவத விஷயங்களிலே செய்தால் விஷயஸ்வபாவத்தாலே ராஜத்ரோஹாதிகளைப்போலே மிகவும் தண்டஹேதுக்களாம்” என்று விசேஷோபாதநத்துக்கு அபிப்ராயம். நரகத்துக்கு நாற்றங்காலான ஸம்ஸார மண்டலத்திலே நல்வழி நடப்பார் துர்லபராயிருக்க பகவத்விஷயத்தைப் பற்றி அதிகாராநுரூபமாக முக்திமார்க்கத்துக்கு முன்னடியான கர்மயோகாதி பர்வபேதங்களிலே நின்றாரையும் நெகிழ நினைக்கை பாகவதாபசாரம்.
– ஸ்வாமி எம்பெருமானார் தன்னுடைய சரணாகதி கத்யத்தில் பகவத் அபசாரம் குறித்துக் கூறும்போது, செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை முதலானவற்றைக் குறித்துக் கூறியது கோபலீவர்த்தன ந்யாயம் காரணமாக பகவத் அபசாரங்கள் மிகவும் கொடுமையானவை என்று உணர்த்தவே ஆகும் (கோபலீவர்த்தன ந்யாயம் – கோ என்னும் பதம் பசு மற்றும் காளை ஆகிய இரண்டையுமே உணர்த்தும் பொதுவான பதமாகும். ஆனால் பலீவர்த்தம் என்பது காளையைக் குறிக்கும். ஆக கோ என்று பொதுவாகக் கூறாம, பலீவர்த்தனம் கொண்டுவா என்று கூறினால், காளையை மட்டுமே கொண்டு வரவேண்டும். இதே போன்று செய்யக்கூடாதவை என்பதிலேயே பகவத் பாகவத அபசாரங்கள் அடங்கும் என்றாலும், அவற்றைத் தனித்தனியே கூறியது மேலும் குறிப்பிட்டு உணர்த்தவே ஆகும் என்று கருத்து). எந்தவிதமான பாவமும் பகவத் அபசாரமே ஆகும்; ஆனாலும் ஒரு சிலவற்றை மட்டும் தனித்துக் கூறுவது, அவை பாகவத அபசாரங்கள் என்று உணர்த்தவே ஆகும். “பொதுவாக சிலர் சிலருக்கு அபசாரங்கள் இழைக்கக்கூடும். அப்படிப்பட்ட அபசாரங்களை பகவத்பாகவத விஷயங்களிலே செய்தால், அவற்றின் கொடுமை காரணமாக, அவை ராஜதுரோஹம் போன்று மிகவும் கொடிய தண்டனை அடையவேண்டிய குற்றங்களாகும்” என்று கருத்து. நரகத்துக்கு மிகவும் எளிதாக இட்டுச்செல்லும் இடமாக உள்ளது. இந்தக் காரணத்தால், இதில் நல்லவழியில் நடப்பவர்கள் மிகவும் குறைவே ஆகும். ஆகவே இந்த உலகத்தில் பகவத் விஷயத்தில் ஈடுபட்டவராகி, ஆனால் மோக்ஷத்திற்கான உபாயம் கைகூடாமல், அதன் முன்பு உள்ளதான கர்மயோகம் மற்றும் ஞானயோகங்களிலே உள்ளவர்களை இழிவாக எண்ணுதல் பாகவத அபசாரங்களாகிறது.