Srimad Rahasyatrayasaram - ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம் (பத்தி 10)
ஸ்த்திரீகரண பாகம் – 26.ப்ரபாவரக்ஷாதிகாரம்
நல்ல மார்க்கத்திலிருந்து சற்றே தவறிய பாகவதர்களை நிந்திக்கக்கூடாது
மூலம் – பாகவதரில் ஊந ஹீந பரிஸ்ரஸ்த நஷ்ட விஷயங்களிலும் பரிமாற்றங்களில் தாரதம்யம் விதித்ததேயாகிலும் ஏகாந்த்யம் குலையாதேயிருக்கில் முடிவில் ஒரு விரகாலே இவர்கள் ஈடேறிவிடுவார்கள். இவர்கள் திறத்திலும் அபசாரம் ஆகாது என்றிறே சாஸ்த்ரம் விதித்தது. “நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத்” என்றும், “பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி” என்றும், கர்மயோகத்தில் சொன்ன ப்ரபாவம் பக்தி ப்ரபத்திகளில் கைமுதிக ந்யாய ஸித்தமிறே. “அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ:” என்றும், “அபி பாபேஷ்வபிரதா மத்பக்தா: பாண்டுநந்தன முச்யந்தே பாதகை: ஸர்வை: பத்மபத்ரமிவாம்பஸா” என்றும் ஸர்வேச்வரன் தானே அர்ஜுநனையும் தர்மபுத்திரனையும் பற்ற அருளிச்செய்தான்.
– பாகவதர்களாக உள்ளபோதிலும் தோள்களில் சங்கு சக்கரம் பொறிக்கப்படாதவன் (ஊநன்), திருமண்காப்பு இல்லாதவன் (ஹீநன்), பகவானுடைய திருநாமத்தைப் பெயராக வைக்கப்படாதவன் (பரிஸ்ரஸ்தன்), மந்த்ர உபதேசம் பெறப்படாதவன் (நஷ்டன்) முதலானவர்களை உபசரிப்பதில் ஏற்றத்தாழ்வு காண்பிக்கலாம் என்று கூறப்பட்டபோதிலும், அவர்கள் ஏதேனும் மார்க்கத்தில் இறுதியில் கரையேறிவிடுவார்கள்; அதனால் அவர்களிடம் அபசாரம் அடையக்கூடாது என்றே சாஸ்த்ரங்கள் கூறுகின்றன. கீழே உள்ள வரிகளின்படி க்ருஷ்ணன் கர்மயோகத்திற்கே அளப்பரிய பெருமைகளை உரைத்துள்ளபோது, பக்தி மற்றும் ப்ரபத்தியின் பெருமைகளைக் கூறவும் வேண்டுமோ? தகுதி இல்லாதபோதே கிட்டும்போது, தகுதி இருந்தால் கிட்டும் என்பது ப்ரஸித்தம் அல்லவோ (இதுவே கைமுதிக ந்யாயம் ஆகும்) கீதை (2-40) - நேஹாபிக்ரம நாசோஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே ஸ்வல்பமப்யஸ்ய தர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் – கர்மயோகத்தில் செய்யப்பட்ட தொடக்கம் என்பது எப்போதும் வீணாவதில்லை. அதே போன்று, அது முடியாமல் நின்றாலும் தோஷம் இல்லை. அந்தக் கர்மத்தின் மிகச் சிறிய பகுதி கூட இவனை மிகவும் பெரிய ஸம்ஸார பயத்திலிருந்து காப்பாற்றும். கீதை (6-40) - பார்த்த நைவேஹ நாமுத்ர விநாசஸ்தஸ்ய வித்யதே ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் தாத கச்சதி – பார்த்தா! யோகம் செய்யத் தொடங்கிய ஒருவனுக்கு, அது முழுமை அடையாமல் போனாலும் இங்கும் அங்கும் எந்தவிதமான அழிவும் உண்டாவதில்லை. நல்ல செயலைச் செய்த எவனும் தீயகதியை அடையமாட்டான் அல்லவோ? மேலும் கீழே உள்ள வரிகளின் மூலம், ஸர்வேச்வரன் தனது திருவாயால் அர்ஜுனனையும் தர்மனையும் நோக்கி, தனது திருவடிகளை அடைபவன் எத்தகைய தீய ஒழுக்கம் கொண்டவன் என்றாலும், அவன் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுவிக்கப்படுகிறான் என்றான்: கீதை (9-30) - அபி சேத்ஸுதுராசாரோ பஜதே மாமநந்யபாக் ஸாதுரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக் வ்யவஸிதோ ஹி ஸ: - மிகவும் தாழ்ந்த ஒழுக்கத்தை ஒருவன் கொண்டிருந்தாலும், என்னை அவன் எந்தவிதமான பலனும் எதிர்பாராமல் வணங்கினால், அவன் ஸாதுக்களில் மிகவும் சிறந்தவன் ஆகிறான். அவன் மதிப்பதற்கு ஏற்றவன் ஆவான். மஹாபாரதம் - அபி பாபேஷ்வபிரதா மத்பக்தா: பாண்டுநந்தன முச்யந்தே பாதகை: ஸர்வை: பத்மபத்ரமிவாம்பஸா – பாண்டுவின் புத்திரனே! என்னுடைய பக்தர்கள் பாவச் செயல்களைச் செய்தாலும், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாமல் உள்ளது போன்று, அவர்களிடம் அந்தப் பாவங்கள் ஒட்டுவதில்லை.